’தோல்வியே என் சிறந்த ஆசான்’-  சென்னைப் பெண்ணுக்கு ’மிஸ் இந்தியா பட்டம்’ வென்று தந்த பதில்!

1

உங்களில் சிறந்த ஆசான் யார்? வெற்றியா? தோல்வியா? என்ற போட்டியின் இறுதிச்சுற்று கேள்விக்கு அனுக்ரீத்தி வாஸ் அளித்த பதிலே அவருக்கு ‘மிஸ் இந்தியா பட்டத்தை’ வென்று தந்தது எனலாம்.

“தோல்விகள் உங்களைக் காயப்படுத்தினாலும், வெற்றி அதற்கு நிச்சயம் ஒருநாள் மருந்து போடும்,” தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக்கி பதிலளித்து ’மிஸ் இந்தியா 2018’ பட்டத்தை பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது அனுக்ரீத்தி வாஸ்.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டிற்கான மிஸ் வேர்ல்டு பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பில் அனு உலகளவில் பங்கேற்க உள்ளார். 

இந்தியாவில் மிகவும் உச்சபட்சமாக பார்க்கப்படும் அழகி போட்டிகளில் ஒன்று ‘ஃபெமினா மிஸ் இந்தியா’. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் தான் மிஸ் வேர்ல்டு போட்டியில் கலந்து கொள்வார்.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நேற்றிரவு மும்பையில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் பிரபலங்கள் மலைகா அரோரா, பாபி தியோல், குனால் கபூர் மற்றும் கடந்த ஆண்டின் மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர் ஆகியோர் பங்கேற்றனர். பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பல்வேறு சுற்றுகளைக் கடந்து, இறுதிச் சுற்றில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் முதலிடத்தை வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற அனுக்ரீத்திக்கு கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார்.

பட உதவி: ஃபெமினா
பட உதவி: ஃபெமினா

இந்தப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சவுத்ரி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இவர்கள் இருவரும் முறையே மிஸ் கிராண்ட் இன்டர்நேஷ்னல் மற்றும் மிஸ் யுனைடெட் காண்டினண்ட்ஸ் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

19 வயதேயான அனு, தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பிரெஞ்சு மொழியில் பிஏ படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர்.

மிஸ் இந்தியாவாக தேர்வானதைத் தொடர்ந்து அனு, இந்தாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனு?

அம்மாவுடன் தனியே வளர்ந்த அனு, ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பாடுவதில் வல்லவரான அனு, நடனத்திலும் கை தேர்ந்தவர். படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் சுட்டியான இவர் மாநில அளவு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றவர்.

வாகனப் பிரியையான அனுவின் முக்கிய பொழுதுப்போக்குகளில் ஒன்று பைக்கில் ஊர் சுற்றுவது. முன்னணி மாடலாக ஆக வேண்டும் என்பது தான் அனுவின் லட்சியம். இவர் பிரபல போட்டோகிராபர் அதுல் கஸ்பேகரின் தீவிர ரசிகையாவார்.

மாடலிங் தான் தனது விருப்பம் என்றபோதும், தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவின் விருப்பத்திற்காக, தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். இந்தப் படிப்பை முடித்தவுடன் அனுக்ரீத்தி மொழிபெயர்ப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் அவரது அம்மாவின் ஆசையாம்.

“இன்றைய கடமைகளை நாம் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறோமோ, அதுவே நாளைய திட்டமிடுதலுக்கான தகுந்த முன்னேற்பாடு. எனவே, ஒவ்வொரு நாளையும் சிறந்த நாளாக்குங்கள்...” என்பது தான் அனு மற்றவர்களுக்கு சொல்லும் அறிவுரை.

கிரீடத்தைப் பெற்றுத்தந்த பதில்:

கடைசிச் சுற்றில் அனுக்ரீத்திவிடம், “வாழ்க்கையில் சிறந்த ஆசான் யார்... வெற்றியா? தோல்வியா?” என போட்டியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 

“தோல்வியே என் சிறந்த ஆசான் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நாம் திருப்தி அடைவதனால், நமது வளர்ச்சி நின்று விடும். ஆனால், தொடர்ந்து நீங்கள் தோல்வியடையும் போது, உள்ளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அதிகரிக்கும். அது நமது இலக்கை நோக்கி நம்மை உழைக்கச் செய்யும்.”

என் வாழ்க்கையில் நான் சந்தித்த தோல்விகள் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. கிராமப் பின்னணியில் வளர்ந்து, பெரும் போராட்டங்களைச் சந்தித்து, இன்று உங்கள் முன் நான் நிற்கிறேன். என் தாயைத் தவிர எனக்கு அரவணைப்பு தர வேறு யாரும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தோல்விகளும், விமர்சனங்களும் தான் என்னை நம்பிக்கையான, சுதந்திரமான பெண்ணாக இந்த சமூகத்தில் நிலை நிறுத்தியுள்ளது, என்று மனம் திறந்து தன் அனுபவத்தை பதிலாகச் சொன்னார். 

”அதோடு அனுபவமும் மிகச் சிறந்த ஆசான். இதைத் தான் நான் உங்களுக்குச் சொல்ல விருப்பப்படுகிறேன். எனவே தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். தோல்விகள் உங்களைக் காயப்படுத்தினாலும், வெற்றி அதற்கு நிச்சயம் ஒருநாள் மருந்து போடும்,” எனப் பதிலளித்து கிரீடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார் இந்த அழகிய மங்கை.

அடுத்த இலக்கு உலக அழகிப் பட்டம்:

கடந்த 1999-ம் ஆண்டு யுக்தா முகி மற்றும் 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடுத்தடுத்து உலக அழகிப்பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தனர். 2017-ம் ஆண்டு உலக அழகியாக மனுஷி ஷில்லர் உள்ள நிலையில், உலக அழகி பட்டம் வெல்வதே தன்னுடைய லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் அனுக்ரீத்தி.

அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திடாமல் போட்டியாளர்களின் சமூக பார்வை, சிந்தனை திறன் உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொண்டு நடத்தப்படக்கூடிய மிஸ் இந்தியா அழகி போட்டியில் வென்ற அனுக்ரீத்திவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

Related Stories

Stories by jayachitra