16 வயது கோடிங் நிபுணர்: தானே கோதாரி!

0

தானே கோதாரி, 16 வயது நிரம்பிய கணினித்துறை வல்லுனர். மிகச்சிறப்பாக கோடிங் எழுதக்கூடியவர். டெல்லி, ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி பொதுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயில்பவர். 'ப்ராக்சிமிட்டி' என்ற நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

பின்னணி

தானே 7 -ம் வகுப்பு படிக்கும் பொழுதிருந்தே கோடிங்க் எழுதுவதில் ஆர்வமிக்கவராய் இருந்தார். நண்பர்களைக்கவரும் நோக்கத்தில் சின்னச்சின்னதாக கேம்கள், ஜாலியான செயலிகளையெல்லாம் உருவாக்கினார். தற்பொழுது 20க்கும் மேற்பட்ட ப்ரொக்ராமிங் லாங்குவேஜ்கள் இவருக்கு அத்துபடி. இவையெல்லாம் ஒருபுறமென்றால் பள்ளியிலும் சிறப்பாக பயில்பவர். பனிரெண்டாம் வகுப்பு மிட்-டெர்ம் தேர்வில் 94 சதவீதம் எடுத்திருக்கிறார். ஏசிடி தேர்வில் 36க்கு 36 மதிப்பெண்கள் முழுமையாக எடுத்திருக்கிறார். இது இந்திய அளவில் வெகு சிலரே சாதிக்கக்கூடிய ஒரு நிலை. ஏசிடி தேர்வு SATக்கு இணையான தேர்வு. C# மொழியில் மைக்ரோசாஃப்ட் சர்டிபைட் என்ற நிலையை எட்டியிருக்கிறார்.

ஒரு வயதில்
ஒரு வயதில்

ப்ராக்சிமிட்டி நிறுவனம் (Proximity )

தானேவின் அப்பா அடிக்கடி பயணம் செல்பவர். அப்படி பயணம் செல்லும்போது ஒரு உணவகத்தில் நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்துத்திருக்கிறார். முன்பு ஒரு காலத்தில் அந்த நண்பரோடு ஆறு மாதங்கள் ஒன்றாக தங்கி இருந்திருக்கிறார். அப்பாவின் இந்த அனுபவத்தை கேட்டபோது தானேவுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. பழைய நண்பர்களை தேடுவது போன்ற ஒரு செயலி உருவாக்கினால் என்ன என்று யோசித்தார்.

தானே, அப்போது இன்வெஸ்டோபாட் நிறுவனத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்ததார். நண்பர் அர்ஜுன் மல்கோத்ராவோடு அப்பாவின் அனுபவத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அர்ஜுனுக்கும் இதே போன்ற அனுபவம் இருந்தது தெரியவந்தது. காரணம் அவரும் அடிக்கடி பயணம் செல்பவர்.

அடுத்து இஷான் பர்வந்தா என்பவரோடு இணைந்து இவ்விருவரும் ப்ராக்சிமிட்டி என்ற நிறுவனத்தை துவங்கினார்கள். சமூகவலைதளங்களில் இருக்கும் நண்பர்கள் எந்த நகரத்தை சேர்ந்தவர்கள் என்று காட்ட உதவும் செயலியை உருவாக்கினார்கள். உதாரணமாக டெல்லி செல்கிறோம் என்றால் அங்கிருக்கும் நண்பர்களுக்கு நாம் வரப்போகிறோம் என்பதை தெரியப்படுத்தும். நாம் அவர்களை சந்திக்க நேரம் குறித்துக்கொள்ளலாம். பலரை குழுவாக சந்திக்கும் திட்டங்களையும் இந்த செயலி மூலம் உருவாக்கலாம். உபெர் மூலம் கால் செய்யலாம். அந்த நண்பர் எங்கே இருக்கிறார் என மேப் மூலம் தேடலாம்.

இதற்காக தானே, வெறும் ஐந்தே நாட்கள் செலவிட்டு ஐஓஎஸ் உருவாக்கம் பற்றி கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ராக்சிமிட்டி செயலி தற்பொழுது ஐஓஎஸில் மட்டுமே கிடைக்கிறது. இதுவரை 250 பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை. இந்த செயலியின் ஆண்ட்ராய்டு வர்சன் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் விண்டோஸ் தொடர்பான செயலி உருவாக்கத்தில் ஆர்வமாக இருந்த தானே, அதில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை புரிந்துகொண்டார். தற்பொழுது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் சக்கைபோடு போடுகின்றன என்பதை கருத்தில் கொண்டே இந்த தளத்தை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறார்.

எனக்கு கோடிங் எழுத வேண்டும் என்று தோன்றினால் பள்ளி முடிந்ததும் எழுதுவேன். நான் ட்யூசனுக்கோ, கோச்சிங் கிளாஸுக்கோ செல்லாததால், படிப்பையும், ப்ராக்சிமிட்டியையும் ஒரே நேரத்தில் கையாள முடிகிறது.

மெய்டன் ஹேக்கதான்

2013ல் மெய்டன் ஹேக்கத்தனில் கலந்து கொண்ட அனுபவம் தானேவுக்கு புதுவித அனுபவமாக இருந்திருக்கிறது. அந்த ஹேக்கதானில் 100 பேர் கலந்துகொண்டார்கள். 30 மணிநேரங்கள் நடந்தது. சாதாரணமாக நாம் பேசும் மொழியில் இருக்கும் வார்த்தைப் பிழையை கண்டுபிடித்து சொல்வது போன்ற அல்காரிதத்தை உருவாக்க வேண்டும் என்பதே போட்டி. தானேவுக்கு இது சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. தனக்கு அதை எப்படி செய்வது என புரிந்திருக்கவில்லை என்கிறார் வெளிப்படையாக.

அங்கே சில டாக்டர் மாணவர்களும், ப்ரொஃபசனல் டெவலப்பர்களும் ஆயிரக்கணக்கான வரிகளில் கோடிங் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக இதை முடித்துவிட துடித்தார். விடிய விடிய உழைத்து நூற்றுக்கணக்கான வரிகளில் அல்காரிதம் எழுதினார். "paper stamds" என்று தவறாக எழுதினால் “paper stamps" என்று அதுவே திருத்தும்.

கடினமான காரியங்களை சின்னச்சின்னதாக உடைத்துவிட்டால் எளிதில் சரி செய்ய முடியும். அது கணிதமோ, ப்ரொக்ராமிங்கோ, வாழ்க்கையோ.. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவும் எழுதப்படாத ஸ்லேட் போல் இருந்தால் போதும்.

இது போன்ற சவாலான செயல்களில் ஈடுபட்டால் தான் புதிது புதிதாக கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் தானே. மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்று பொறியியல் படிக்கப்போகிறாராம். எனினும் தன் நிறுவன பணிகள் தொடரும் என்கிறார்.

படிப்பும், நிறுவனமும் ஒரே நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். முன்பு பள்ளியில் படித்த போது அதைத் தான் செய்தேன். அடுத்து கல்லூரியிலும் அதை தான் செய்யப்போகிறேன்

ஐஓஎஸ் செயலி - Proximity

ஆங்கிலத்தில் : jai vardhan | தமிழில் : Swara Vaithee


இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற மாணவர்கள் தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி!

சென்னை மாணவன் அர்ஜுன் உருவாக்கியுள்ள பள்ளி வாகன செயலி!