மாற்றுத் திறனாளிகளின் தேவதை மல்லிகா: குறைகளைக் கடந்த மேன்மை பயணம்...

கிராமப்புறங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கைக்கு வித்திட்டவர், மாற்றுத் திறனாளி மல்லிகா!

0

குக்கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதரத்துக்குத் துணைபுரிவதையே தன் முழுநேர சமூகப் பணியாக செய்து வருகிறார் மாற்றுத் திறனாளி மல்லிகா (39).

புதுக்கோட்டை மாவட்டம் - வீரப்பட்டி ஒன்றியத்தில் உள்ள காலாடிப்பட்டி சத்திரம் எனும் சிறிய கிராமத்தில் வசிக்கும் மல்லிகா, ஸ்மார்ட்போன்கள் புழங்காத உள்ளூர்வாசிகளின் நடமாடும் கூகுளாகவேத் திகழ்கிறார். அரசின் 'புதுவாழ்வு' திட்டம் மூலம் தன் சமூகப் பணியைத் தொடங்கிய இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறார். அத்துடன், கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தனது பயணம் குறித்து யுவர் ஸ்டோரி தமிழிடம் அனுபவம் பகிர்ந்த மல்லிகா, "என் பெற்றோருக்கு ஒன்பது பிள்ளைகள். நான் சின்ன வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்குத் தொழில் விவசாயம். அவருடன் அண்ணன்களும்தான் எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கினார்கள். 

"எனக்குப் பிறவியிலேயே குறைபாடு. மிகவும் குள்ளமாக இருப்பேன். என் தம்பிக்கும் இந்தக் குறைபாடு உள்ளது. எனக்கு 30 வயது ஆன பிறகுதான், இந்தக் குறையை எண்ணி முடங்கிக் கிடக்கக் கூடாது என்ற உத்வேகம் ஏற்பட்டது. என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதற்கு, அரசின் 'புதுவாழ்வு' திட்டம் துணைபுரிந்தது," என்றார்.

'புதுவாழ்வு' திட்டம் என்பது உலக வங்கி நிதி உதவியுடன் ஆற்றலை மேம்படுத்தி வறுமை ஒழிக்கக்கூடிய திட்டமாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. வாழ்வாதரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிப்பதன் மூலம் ஏழை மக்களின் ஆற்றல் மேம்பாடு அடைவதற்காக, ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும் மக்கள் அமைப்புகளை கிராமங்கள் அளவில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்களின் திறன்களை வளர்ப்பதற்கு வழிகாட்டுதல், வாழ்வாதார மேம்பாட்டிற்கு மக்களுக்கு தேவையான தொழில்களில் நிதி உதவியுடன் முதலீடு செய்து சந்தைப்படுத்துதல் போன்றவை முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.

"புதுவாழ்வுத் திட்டத்தில் சேர்ந்தேன். மதுரையில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவகையில் உதவி செய்ய முடியும் என்பதை அங்கு கற்றுக்கொண்டேன். இதோ நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்து வருகிறேன். என் ஆர்வத்தின் உந்துதலால் பிசியோதெரபியும் கற்றுக்கொண்டேன். எங்கள் ஊரில் தேவைப்படும் குழந்தைகளுக்குப் பிசியோதெரபி செய்வேன்.

எங்கள் ஊராட்சி ஒன்றியத்துக்குக் கீழ் எட்டு கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகள், முதியோர் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டுவதுதான் என் முக்கிய சமூகப் பணி. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த தகவல்களும் வழிமுறைகளும் எனக்குத் தெரியும். எனவே, எங்கள் ஒன்றியத்தில் மட்டும் அல்லாது, மற்ற 43 ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் என்னிடம் உதவி கோருவார்கள்.

விருது மேடையில் மல்லிகா
விருது மேடையில் மல்லிகா
அடையாள அட்டை வாங்கித் தருவது, உதவித் தொகைகள் பெற்றுத் தருவது, சான்றிதழ்கள் விண்ணப்பித்து தருவது என பல்வேறு பணிகள் இருக்கும். இதற்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் சென்று வேண்டியதைச் செய்வேன். எங்கள் பகுதியில் பெரும்பாலான குக்கிராமங்கள் உள்ளன. இங்கே மாற்றுத் திறனாளிகளின் நிலை மிகவும் மோசமானது. வெளியுலகம் பெரிதாகத் தெரியாததால் வீட்டிலேயே முடங்கும் நிலை. அவர்களை அணுகி, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலையும் உதவியையும் செய்வேன். 

குழுக்களை அமைத்து தொழில் தொடங்குவதற்கு அரசு திட்டங்களில் கடன்களை ஏற்பாடு செய்து தருவது, தனிநபர்கள் கடனுதவித் திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருப்பது உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்," என்றார் மல்லிகா.

வீரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் தேவதையாக வலம் வரும் மல்லிகா, தன் குடும்பத் தேவைக்காக நூறு நாள் வேலைப் பணியைச் செய்கிறார். மண் கூடை சுமப்பது உள்ளிட்ட பளுவான வேலைகள் செய்ய முடியாததால், பதிவேடு எழுதுவது முதலான நிர்வாகப் பணிகளில் துணைபுரிகிறார்.

மேலும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வுத் திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு கிராமங்களில் கழிப்பிடத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுப் பாடங்களையும் நடத்துகிறார். இவரது சமூகப் பணிக்கு சமீபத்தில் விருது கிடைத்ததை உத்வேகமாக எண்ணுகிறார் மல்லிகா.

டாடா தேசிய இணைய கல்விக் கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விருது விழா கடந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்தியாவின் 9 மாநிலங்களில் இருந்து 34 பெண்கள் உட்பட 74 கல்விக் கழகப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தப் பட்டமளிப்பு சான்றைப் பெற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்களில் மல்லிகாவும் ஒருவர். சமுதாயத்தில் மிக எளிய மனிதராக பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள பங்கினையும், மக்கள் நலனுக்கு ஆற்றிய மகத்தான சேவையைக் கெளரவிக்கும் வகையிலும் இவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

"இதுவரை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நீச்சல், பேச்சுப் போட்டிகளில் வென்றிருக்கிறேன். எனது சமூக சேவைக்காக எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சத்தமின்றி செய்து வந்த சேவையை கண்டுகொள்ளப்பட்டதில் மகிழ்ச்சி," என்றார் உற்சாகத்துடன்.

தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மல்லிகா விவரித்தார். அதைக் கேட்டபோது, அசாதாரண சூழலை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு மனநிறைவு கொள்ளும் வாழ்க்கையைச் செதுக்கிக்கொள்ளும் அவரது அணுகுமுறை அசரவைத்தது.

"எங்கள் குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். குடும்ப அமைப்பில் இருந்து தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்தச் சூழலில்தான் எனக்கு ஒரு மகன் கிடைத்தான்.

என் அக்காவுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்தது. அவருக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக மூன்றாவதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாத நிலை. எனவே, அந்தக் குழந்தையை நானே வளர்க்க ஆரம்பித்தேன். அவன்தான் என் மகன். அவனே இப்போது என் உலகம். நாம் பிறரிடம் அரவணைப்பாக இருக்கும் அதே சூழலில், நமக்கும் அரவணைப்புடன் கூடிய பந்தம் தேவைப்படும்தானே?!

ஏழாம் வகுப்புப் படிக்கும் என் மகனை நிறைய படிக்கவைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அதேவேளையில், எனக்கு மனநிறைவைத் தரும் சமூகப் பணியை அப்படியே தொடரவேண்டும். என் இந்தப் பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மாற்றுத் திறனாளிகள் என் உதவியைக் கூட நாடாத வகையில் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு அவர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். நிச்சயம் செய்வேன்.

நான் சிறுமியாக இருக்கும்போது என் தோற்றத்தைக் கருதி வெளியே போகப் பயப்படுவேன். மற்றவர்களைப் போல் வாழ முடியவில்லை என்ற கவலை வெகுவாக இருந்தது. நான் சாலையில் நடந்துபோகும்போது, என்னைப் பார்த்து சிறுவர்கள் வித்தியாசமாகப் பார்த்துச் சிரிக்கும்போது மனம் வலிக்கும். இதனாலேயே வீட்டை விட்டு வெளியே போகாமல் முடங்கிக் கிடந்தேன். ஒருநாள் மனத்தடைகளை உடைத்துக்கொண்டு சமூக வெளியில் பயணிக்கத் தொடங்கினேன்.

இப்போதும் என்னைப் பார்த்து மக்கள் புன்னகைக்கிறார்கள். அது, என்னைப் பார்த்துவிட்ட உற்சாகத்தில் வெளிவரும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. "மல்லிகா இருக்கா... நமக்கு எந்தக் கவலையும் இல்லை" என்று அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் என் மீதான மதிப்பு ஒட்டியிருக்கும். சிறுவர்கள் இப்போதும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். இதன் அர்த்தமும் முற்றிலும் மாறிவிட்டது. பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பேசும்போது என்னை வியப்புடன் பார்க்கிறார்கள். நேசிக்கிறார்கள். அன்போடு "டீச்சர்" என்றே அழைக்கிறார்கள்.

"நம்மிடம் ஏதோ குறைபாடுகள் இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொண்டு, சமூகத்திடம் இருந்து விலகி இருப்பது தவறான அணுகுமுறை என்பதையே என் வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்தது. நான் கண்டு அஞ்சிய சமூகத்திடம் நெருங்கி, இயன்ற அளவில் சேவையாற்றும்போது நம் மீதான மக்களின் பார்வையும் மாறும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் விவரித்தார் உயர்ந்த மனுஷி மல்லிகா!
இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்