கேரளாவில் மாணவர் சேர்க்கையில் சாதி, மதத் தகவல்களை குறிப்பிடாத 1.2 லட்சம் மாணவர்கள்!

0

சாதி மற்றும் மதம் குறித்த தொடர் விவாதங்களும் பிரிவினைகளும் நிலவும் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு முன்னுதாரணமாக நடந்துகொண்டுள்ளனர். 1.2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது சாதி மற்றும் மதம் குறித்த தகவல்களை வழங்க மறுத்துள்ளனர்.

கேரள மாநில கல்வித்துறை அமைச்சர்  சி.ரவீந்திரன் இது குறித்து  சட்டசபையில்  தெரிவித்தார். இந்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 3.16 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர் கூறுகையில்,

இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது பள்ளியில் சேர அனுமதி கோரிய 1.24 லட்சம் மாணவர்கள் சாதி மற்றும் மதம் சார்ந்த தகவல்களை நிரப்பவேண்டிய கட்டத்தை நிரப்பாமல் காலியாக விட்டுள்ளனர். சமூகத்தின் மதச்சார்பற்ற போக்கிற்கு இதுவே சான்றாகும்.

மாநிலத்தில் உள்ள 9,000-க்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த வருடம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வி டி பலராம் மற்றும் சிபிஐ (எம்) நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி ராஜேஷ் தங்களது சாதி மற்றும் மதம் சார்ந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளாதது தலைப்புச் செய்தியாக மாறி கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் கால்பந்து வீரர் சி கே வினீத் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்தபோது மதம் என்கிற கட்டத்தை நிரப்பாமல் விட்டதும் செய்திகளில் வலம் வந்தது. இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வருடம் இந்த மாநிலத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 3.04 லட்சம் மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றுள்ளது.

”சமீபத்தில் நான் கடந்து வந்த செய்திகளில் இது மிகவும் இனிமையான ஊக்கமளிக்கும் செய்தியாகும்,”

என எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் எம் என் கரசேரி ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’-க்கு தெரிவித்தார்.

சாதி மற்றும் மதம் அடிப்படையிலான ஒதுக்கீடுங்கள் காணப்படும் இந்திய கல்வி அமைப்பானது எப்போதும் உலகெங்கும் பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்த நடவடிக்கையானது மற்ற மாநிலங்களும் முன்னெடுக்கவேண்டிய முயற்சியாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA