இயந்திரமயமாக்கலின் காரணமாக 11,000 பணியிடங்களை விடுவிப்பதாக இன்போசிஸ் அறிவிப்பு!

0

இன்போசிஸ் நிறுவனத்தின் 36-வது ஆண்டு பொதுக்கூட்டம் பெங்களுருவில் கடந்த வாரம் நடைப்பெற்றது. அதில் இயந்திரமயமாக்கலின் காரணமாக 11,000 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஷேசசாயி குறிப்பிடுகையில், தானியங்கிகளின் காரணமாக, முழுநேர ஊழியர் ஒருவரின் வருமானம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் (full-time employeeFTE) அதன் காரணமாக அவர்களின் செயல்திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

“நம்மை சுற்றி நடைப்பெறும் அதிவேக டிஜிட்டல்மயமாக்கலின் காரணமாக பல தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் புதிய ஊடுறுவல்களை சந்திக்கின்றது. இந்த வரலாற்று மாற்றத்தினால் நமது வாய்ப்புகள் இரண்டு மடங்காகிறது,”

என்று எக்கனாமிக் டைம்ஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார் ஆர்.ஷேசசாயி. புதிய தானியங்கி சேவைகள் மற்றுன் மென்பொருள் சார்ந்த செயல்திறன்களையும் தொழில்நுட்ப சேவைகளில் கொண்டுவருவதை இன்போசிஸ் நிறுவனம் ஊக்குவித்து வருவதாக கூறினார். இது, பல புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சிறந்த விழியாக திகழும் என்றும் தங்கள் வாடிக்கையாளர்களையும் டிஜிட்டல் வழிக்கு மாற உதவிகரமாக இருக்கும் என்றார். 

இன்போசிஸ் ஆண்டு பொது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 11 ஆயிரம் பணியிடங்கள் விடிவிப்பு என்பது பிசினஸ் மாடலில் மென்பொருளின் ஆதிக்கத்தை தெளிவாகவே காட்டுகிறது. 

அண்மையில் ஊடகங்களில் இன்போசிஸ் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே நடந்த சில முக்கிய சம்பவங்கள் பற்றி செய்திகள் வந்ததை அடுத்து, பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக மேனேஜ்மெண்ட் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு தொகையில் உள்ள வேறுபாடுகள் பற்றி விளக்கப்பட்டது. விரைவில் இந்த வேறுபாடு களையப்பட்டு அனைவருக்குமான இழப்பீட்டு தொகை பட்டியல் திட்டமிடப்படும் என்றும் அறிவித்தனர். 

மேலும், நிறுவனம் தன் முக்கிய மூன்று மாற்றங்கள் பற்றி அறிவித்தது. அதில், தொழில் மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் மற்றும் சுதந்திரமான போர்டு அமைப்பு ஆகும்.

”முதலில் பாரம்பரிய ஐடி சேவைகளில் இருந்து புத்தாக்க மென்பொருள் கூடுதல் சேவைகளுக்கு தொழில் மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக சர்வதேச அளவில் தலைவர்களை இணைப்பதன் மூலம் கலாச்சார மாற்றம். மூன்றாவதாக, ப்ரமோட்டர்கள் தலைமை வகிக்கும் போர்டில் இருந்து சுதந்திரமாக செயல்படும் தலைமை குழு மாற்றம் ஆகும்.,” என்று கூட்டத்தில் அறிவித்தார் ஷேசசாயி.