ஆந்திராவை சேர்ந்த 106 வயது யூட்யூப் பிரபல பாட்டி!

6

இணையம் பலபேரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, பல பேரை பிரபலமாக்கி லட்சங்களை ஈட்டவைத்தும் உள்ளது. தங்களுக்கான திறமையை யாருடைய அனுமதியும் இன்றி பகிர இண்டெர்நெட் ஒரு சிறந்த தொடர்பாக இருந்து வருகிறது. குறிப்பாக யூட்யூப் மூலம் பலர் தங்களுக்கு வரும் கலையை அதாவது சமையல், பாட்டு, காமெடி, சினிமா விமர்சனம் என்று வீடியோ பதிவுகளாக போட்டு பிரபலமாகி உள்ளது நாம் அனைவருக்கும் தெரியும். 

ஆனால் இந்தியாவை சேர்ந்த இந்த யூட்யூப் பிரபலம் சற்று வித்தியாசமானவர். இவரின் வயது 106. மஸ்தானம்மா என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இந்த பாட்டி, இண்டெர்நெட் பிரபலம். சமையல் கைப்பக்குவத்தை வீடியோவாக போட்டு ஜமாய்கிறார் இவர். 

டெக்கன் க்ரானிக்கல் செய்தியின் படி, மஸ்தானம்மா பெயரில் ஒரு யூட்யூப் சேனல் உள்ளது. இதை அவரது பேரன் நடத்தி வருகிறார். தன் பாட்டி அற்புதமாக சமைப்பதை சிறுவயது முதல் பார்த்துவந்த அவருக்கு இந்த ஐடியா பிறந்தது. யூட்யூப் சேனல் தொடங்கி அதில் பாட்டியில் கைவண்ணத்தை செய்முறையோடு பதிவிட்டால் என்ன என்று தொடங்கினார். இன்று அந்த சேனலுக்கு 2,50,000 பதிவாளர்கள் உள்ளனர். 

ஆந்திர மாநிலத்தில் குடிவாடா என்ற இடத்தை சேர்ந்த மஸ்தானம்மா, தனது 106-வது வயதிலும் தன் வேலைகளை தானே செய்து கொள்கிறார். யாருடைய உதவியுமின்றி சமையல், வீட்டு வேலை என அனைத்தையும் வளைந்துகட்டி செய்கிறார். குடும்பத்தாரின் உதவியை எதிர்பாராமல் தன் சொந்த காலில் நின்று, தன் வீட்டிற்கு வருவோரையும் நன்கு கவனித்து ஆச்சரியத்தில் ஆழ்துவார் மஸ்தானம்மா. 

மஸ்தானம்மாவின் பேரன் கே.லஷ்மன், ஒரு யூட்யூப் சேனலை தொடங்கி ஒரு நாள் தான் சமைத்ததை பதிவிட்டுள்ளார். மேலும் விளக்கிய அவர்,

“பசியோடு இருந்த ஒரு இரவு நானும் நண்பர்களும் சேர்ந்து சமைத்தோம். அப்போது ஒரு யூட்யூப் சேனலை தொடங்கி செய்முறையை வீடியோவாக போட்டோம். அந்த வீடியோ வைரலாக, அப்போது அதை மேலும் பிரபலப்படுத்த முடிவெடுத்தேன். பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் அதை செய்வது பற்றியும் தன் பாட்டியை கொண்டு வீடியோவாக்கினார். அவருக்கு நான் என்ன செய்கிறேன் என்று ஆரம்பத்தில் புரியவில்லை, பின்னர் மகிழ்ச்சியுடன் பாட்டியும் பகிர்ந்து கொண்டார்.”

மஸ்தானம்மா மீன் வகைகள் மற்றும் பிற கடல்வாழ் உணவுகளையும், முட்டை தோசை செய்வதிலும் வல்லவர். அவரது சமையல் ருசிக்கு ஊர் மக்கள் அனைவருமே அடிமை. நூறு வயதை தாண்டியும் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு மஸ்தானம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

கட்டுரை: Think Change India