’பெண்கள் சக்தி விருது 2018’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் ’பெண்கள் சக்தி விருது’ (நாரி சக்தி புரஸ்கர்) 2018-க்கான விண்ணப்பங்கங்களை வரவேற்றுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது இது. பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக அயராது பாடுபடும் பெண்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்தன்று குடியரசுத் தலைவர் பெண்கள் சக்தி விருதினை வழங்கி கவுரவித்து வருகிறார். இந்த ஆண்டு 19-வது ஆண்டாகும். சமூகத்திற்காக சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண்களுக்கு, சமூகத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கி, பெண்களுக்கு நிலையான நிதி இருப்பை உறுதி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

1999 ஆம் ஆண்டு முதல் பெண்கள் சக்தி விருது வழங்கப்படுகிறது. தடைகளை மீறி சாதித்து, இதற்கு முன் ஆய்ந்தறியப்படாத துறைகளில் தடம் பதித்து சமூகத்திற்கு நிரந்தரமான பங்களிப்பை அளித்த சிறந்த பெண்கள் சாதனையாளர்களின் தரவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த ஆண்டும் சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண்களும், நிறுவனங்களும் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31, 2018 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை துணைச் செயலர் (டபிள்யு டி & ஐ.சி.), மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், அறை எண்.632, 6-வது மாடி, சாஸ்திரி பவன், புதுதில்லி 110001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விருது குறித்த விதிமுறைகளை http://www.wcd.nic.in/award என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை காணலாம்.