லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் புதுமையான பயணம்!

1

செயற்கை பதப்படுத்தும் பொருட்கள் இல்லாத உணவுகளை இணையம் மூலம் வழங்கும் நோபிரசர்வேட்டிவ்.இன் (nopreservative.in) நிறுவனரான பெங்களூருவைச்சேர்ந்த சந்தா அகர்வாலை (Chanda Agarwal) பொறுத்தவரை பொருட்களை கொண்டு செல்வதற்கான வர்த்தக வாகனங்களை தேடிப்பிடிப்பது எப்போதுமே மிகவும் சோதனையானதாக இருந்திருக்கிறது. கட்டணம் ஒரு பிரச்சனை என்றால் அவரால் நம்பகமான ஒரு ஒப்பந்ததாரர் அல்லது டிரைவரை தேடிப்பிடிப்பதும் சிக்கலானதாக இருந்திருக்கிறது. அவரது கணவரான எஸ்.ஏ.பி நிறுவன மூத்த அதிகாரி சஞ்சய் சர்மா தனது மனைவியின் பிரச்சனைகளை பார்த்து இது பற்றி, பல்வேறு நிறுவனங்களில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவை கவனித்த தனது நண்பர்களுடன் விவாதித்தார். அவர்களும் அதேப் போல பிரச்சனையை எதிர்கொண்டிருந்ததை உணர்ந்தார்.

“நான் மேலும் ஆய்வு செய்த போது இந்த பிரச்சனை ஒரு பக்கத்தை சேர்ந்தது அல்ல என புரிந்தது. வெண்டர்களுக்கும் பிரச்சனை இருந்தது புரிந்தது. அவர்கள் சரக்குகள் கிடைக்காமல் மாதத்தில் பாதி நாட்கள் தங்கள் வாகனங்கள் சும்மா நின்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.தேவை மற்றும் சப்ளை இடையே பெரும் இடைவெளி இருப்பதையும் அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் உணர்ந்தேன்” என்கிறார் டிரக்டிரான்ஸ்போர்ட்.இன் (Trucktransport.in.) நிறுவனருமான சர்மா.

கடந்த டிசம்பரில் சஞ்சய், 40, டிரக் உரிமையாளர்கள், மூவர்ஸ் மற்றும் பேக்கர்ஸ் ஆகியோரை வாடிக்கையாளர்களுடன் எளிமையான, செயல்திறன் மிக்க வழிகளில் இணைக்க தீர்மானித்தார். அடுத்த சில மாதங்கள் அவர் போக்குவரத்து நிறுவனங்கள், வெண்டர்கள் மற்றும் பயனாளிகளை சந்தித்துப்பேசி அவர்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயன்றார்.

2015 செப்டம்பரில், சஞ்சய், டிரக்டிரான்ஸ்போர்ட்.இன் நிறுவனத்தை துவக்கினார். இந்த தளம் டிரக் அல்லது மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை சரிபார்க்கப்பட்ட வெண்டர்களுடன் இணைத்து வைக்கிறது. அதே நேரத்தில் உடனடி விலைகள், விலை ஒப்பீடு மற்றும் புக்கிங் வாய்ப்புகளை அளிக்கிறது.

"சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கான அல்கோரிதமை உருவாக்கி இருக்கிறோம். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெண்டர்களை ஒப்பிட்டு உடனடியாக சேவையை புக் செய்யும் வகையில் விலை பட்டியல் மற்றும் ரேட்டிங்கை அளிக்கிறோம்” என்று கூறும் சஞ்சய் மும்பை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்டிரியல் இஞ்சினியரிங்கில் ஆப்பரேஷன் மேனஜ்மெண்ட் படித்தவர்.

வருவாய் மாதிரி

இந்த தளத்தின் வருவாய், நகரங்களுக்கு இடையிலான சேவைக்காக பதிவு செய்யப்படும் டிரக் புக்கிங் மற்றும் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் (ரூ200 ) மூலம் வருகிறது. நிறுவனம் நிதி, மார்கெட்டிங், ஐடி மற்றும் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 10 பேர் கொண்ட குழுவை பெற்றுள்ளது.

டிரக்டிரான்ஸ்போர்ட்.இன் நான்கு ஐடி நிறுவனங்கள் மற்றும் ஆல்லைன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் ஒப்பந்த நிர்பந்தம் காரணமாக அவற்றின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார். 30 சரி பார்க்கப்பட்ட சேவை நிறுவனங்களை கொண்டுள்ளது. விரைவில் தில்லி பகுதியில் செயல்பட உள்ளது. மாதம் 150 புக்கிங்களை பெற்று வருகிறது. 2018 ல் 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அப்போது ஆண்டு வருவாய் ரூ. 26 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தில்லி பகுதியில் செயல்பாடுகளை துவக்கியது. 2016 இரண்டாம் காலாண்டில் கவுஹாத்தி, புனே மற்றும் சென்னையில் விரிவாக்கம் செய்ய உள்ளது. மொத்த சந்தை, சில்லறை வியாபாரிகள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களை இலக்காக கொண்டுள்ளது. முன் நிர்ணயித்த விலையில் சேவைகளை வழங்க ஆன்லைன் நிறுவனங்களிடன் பேசி வருகிறது. 2016 இறுதிக்குள் ராஜ்ஸ்தான், கேரளா மற்றும் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யவும் சஞ்சய் திட்டமிட்டுள்ளார்.

முறையான லைசன்ஸ் மற்றும் பர்மிட் கொண்ட நம்பகமான சேவை அளிப்பவர்கள் மற்றும் டிரைவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. ஆனால் தேர்வில் கவனமாக இருப்பதாகவும் சரி பார்த்த பிறகே தளத்தில் இணைத்துக்கொள்வதாகவும் சஞ்சய் கூறுகிறார்.

சஞ்சய் தனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் நிறுவனத்தை துவக்கியுள்ளார். சேவை உருவாக்கம் மற்றும் மார்க்கெட் ஆய்வில் இதை செலவிட்டுள்ளார். சில முதலீட்டாளர்களுடனும் பேசி வருகிறார். “வெறும் முதலீடு மட்டும் எதிர்பார்க்கவில்லை. அனுபவம் மற்றும் நெட்வொர்க்கும் தேவை” என்கிறார் சஞ்சய். 2 மில்லியன் டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார்.

சந்தை மற்றும் போட்டி

இந்திய லாஜிஸ்டிக்ஸ் சந்தை 2020 வாக்கில் 1.17 சதவீத வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி, சில்லறை வர்த்தகம், நுகர்வோர் பொருள் மற்றும் மின்வணிகம் இதற்கு உதவும் என கருதப்படுகிறது. தற்போது ஜிடிபில் 14.4 சதவீதம் லாஜிஸ்டிகஸ் மற்றும் போக்குவரத்திற்கு செலவிடப்படுகிறது. மற்ற வளரும் நாடுகளில் இது 8 சதவீதமாக இருக்கிறது.

சந்தை மற்றும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் நிறுவனத்திற்கு போட்டியும் அதிகம் உள்ளது. பெங்களூருவைச்சேர்ந்த புளோஹார்ன், ஷிப்பர், எல்.ஓடிரக்ஸ், ஜைகஸ், இன்ஸ்டாவேன்ஸ் மற்றும் திகேரியர் மும்பையை சேர்ந்த திபோர்ட்டர், குய்பர்ஸ், தில்லியின் டிரன்மண்டி மற்றும் விசாகப்பட்டினத்தின் ரிட்டர்ன் டிரக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த பிரிவில் உள்ளன.

இவற்றில் பல நிதியும் பெற்றுள்ளன. கடந்த நவம்பரில் புளோஹார்ன் யுனிடஸ் சீட் ஃபண்டிடம் இருந்து சீட் நிதி பெற்றது. இந்த ஆண்டு மே மாதம் திகேரியர் , சோல் பிரைமெரோ, அவுட்பாக்ஸ் வென்சர்ஸ் மற்றும் நிகுஞ் ஜெயினிடம் இருந்து ரூ.15 கோடி பெற்றது. ஜூனில் ஷிப்பர், ஐ2 இந்தியா வென்ச்சர் பேக்டரியிடம் இருந்து 5 லட்சம் டாலர் பெற்றது. அதே மாதம் திபோர்ட்டர் செகோயா கேபிடல் மற்றும் இதர முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.35 கோடி நிதி திரட்டியது.

சஞ்சய் போட்டி பற்றி கவலைப்படவில்லை. மற்ற நிறுவனங்கள் மினி டிரக் பிரிவில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் தாங்கள் அனைத்து வகையான சேவை வழங்குவதாகவும் தெரிவிக்கிறார். “மேலும் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கை தருகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் எங்கள் அணுகுமுறையை விரும்புகின்றனர்” என்கிறார் அவர்.

இணையதள முகவரி: Trucktransport

ஆக்கம்: டாசிப் ஆலம் | தமிழில் சைபர்சிம்மன்