18 வயதில் 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கி மூன்றே ஆண்டுகளில் கோடி ரூபாய் வருவாய்!

0

2015-ம் ஆண்டு ஹுசைன் சைஃபி தனது அப்பாவின் ஷூ ஸ்டோரில் பணியாற்றினார். அங்கு பண பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பேற்றார். அத்துடன் கோடிங் படித்தார். தற்போது மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் 21 வயதான ஹுசைன் கணிணி பயன்பாடுகள் பிரிவில் இளநிலை பட்டம் முடித்த பிறகு ’ஹாக்கர்கெர்னல்’ (HackerKerner) என்கிற ஸ்டார்ட் அப்பை நடத்தி வருகிறார். இது போபாலின் முன்னணி ஸ்டார்ட் அப்களில் ஒன்றாகும். 5,000 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு அமைக்கப்பட்ட இவரது மென்பொருள் சேவை ஸ்டார்ட் அப் தற்போது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டி வருகிறது.

ஹுசைன் மூன்றாண்டுகளுக்குள்ளாகவே 200-க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு சேவையளிக்கும் 25 பொறியாளர்களை பணியிலமர்த்தும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். Eduzina, Zingfy, Madce உள்ளிட்டவை இவரது க்ளையண்டுகளாகும்.  

ஹுசைன் இளம் வயதான 12-வது வயதிலேயே தாமாகவே C++ மற்றும் HTML கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 2015-ம் ஆண்டு பகுதிநேர வெப் டிசைனராக பணியாற்றத் துவங்கினார். அந்த சமயத்தில் தனது இணையசேவைக்கான கட்டணத்தை தானே செலுத்தவேண்டும் என்பதே அவரது ஒரே லட்சியமாக இருந்தது. உள்ளூர் பிராண்டிற்காக மின்வணிக வலைதளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

”ஒரு உள்ளூர் துரித உணவு ப்ராண்ட்தான் என்னுடைய முதல் வாடிக்கையாளர்,” என்றார் ஹுசைன்.

அந்த உணவகம் மிகச்சிறந்த பர்கர்களை வழங்கியபோதும் அதன் உரிமையாளர் இணையத்தின் வலிமையை அறியவில்லை என்றார் ஹுசைன். ஒரு வலைதளத்தை உருவாக்கி அதில் சேவைகளை விவரித்தால் இந்த உணவகம் பலரைச் சென்றடைய உதவும் என ஹுசைன் பரிந்துரைத்தார்.

இவருக்கு கிடைத்த முதல் காசோலைத் தொகையான 5,000 ரூபாயை ஹாக்கர்கெர்னல் முயற்சிக்காக முதலீடு செய்தார். அப்பாவின் ஸ்டோரில் பணிபுரிந்துகொண்டே ஜாவாஸ்கிரிப்ட், ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் போன்ற தொழில்நுட்பங்களை கற்கத் துவங்கினார். ப்ரோக்ராமிங் குறித்த வலைப்பதிவுகளை எழுதினார். ப்ரோக்ராமிங் குறித்து யூட்யூப் பயிற்சிகளையும் உருவாக்கினார். இதுவே 2015-ம் ஆண்டு இறுதியில் ஹாக்கர்கெர்னல் அறிமுகப்படுத்த வழிவகுத்தது.

”இந்த வீடியோக்களால் நான் பிரபலமானேன். பலர் என்னை தொடர்புகொண்டு ப்ராஜெக்ட் குறித்து விசாரணை செய்தனர். இந்த ப்ராஜெக்டுகளை ஏற்றுக்கொண்டு மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டத் துவங்கினேன்,” என நினைவுகூர்ந்தார். 

ப்ராஜெக்ட் எண்ணிக்கை அதிகரித்ததும் ஹுசைன் தனது நண்பரான ரிதிக் சோனியை அணுகி தன்னுடன் இணைந்து ப்ரோக்ராமிங் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். விரைவிலேயே போபால் மற்றும் இந்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் ஹாக்கர்கெர்னல் உடன் இணையத் துவங்கினர்.

பின்னர் அவர்கள் மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கத் துவங்கினர். மூன்றாவது இணை நிறுவனராக யாஷ் தாபி 2016-ம் ஆண்டு சேர்ந்தார். ஹுசைனின் நிறுவனம் வருவாய் ஈட்டுவதால் இரண்டு இணை நிறுவனர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஐடி ப்ராஜெக்டும் முன்பணம் செலுத்தப்படும் விதத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.

செயல்பாடுகள்

உலகம் முழுவதும் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஹாக்கர்கெர்னல் மொபைல் மற்றும் வெப் டெவலப்மெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. துபாய், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பகுதிகளில் க்ளையண்டுகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மிகச்சில நிறுவனங்களில் ஒன்றாகும்.

”ஃப்ளட்டர், ரியாக்ட் நேடிவ் போன்ற நேடிவ் அப்ளிகேஷன் தொழில்நுட்பங்களில் பணியாற்றி வருகிறோம். இதுவே எதிர்காலத்தில் பரவலாக இருக்ககூடிய தொழில்நுட்பமாகும்,” என்றார் ஹுசைன்.

இந்தியாவில் 50 மில்லியனுக்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்களும் 20,000-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களும் இருப்பதாக E & Y தெரிவிக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு 8,000-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் அறிமுகமாகியுள்ளன.

ஹாக்கர்கெர்னெல் நேரம் மற்றும் மெட்டீரியல் மாதிரியில் பணிபுரிகிறது. ஒரு நிறுவனம் ஒரு செயலியை உருவாக்க விரும்பினால் அதை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல் மற்றும் அந்த ப்ராஜெக்டை நிறைவு செய்வதற்கு சம்பதப்பட்ட குழு செலவிடும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிறுவனம் SLAs அடிப்படையிலேயே பணிபுரிந்து டெலிவரிக்கு உத்தரவாதமளிக்கிறது.

மின்வணிக அம்சங்களுடன்கூடிய ஒரு வழக்கமான வலைதளத்திற்கு 5,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது வணிக விவரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். UI/UX—க்கான கட்டணம் இணைக்கப்படும். ஏனெனில் இதில் நுகர்வோர் தொடர்பிற்கான ப்ரோக்ராமிங் இடம்பெற்றிருக்கும். இது சேவை அல்லது ப்ராடக்டை நுகர்வோர் அணுகுவதை எளிதாக்கும்.

உதாரணத்திற்கு ஹாக்கர்கெர்னல் PhysioDesk Pro என்கிற ஒரு ஆன்லைன் கிளினிக் மேலாண்மை செயலியை உருவாக்கியுள்ளது. இது உலக சந்தைகளில் உள்ள பிசியோதெரபிஸ்ட்களுக்கானது. சுகாதார மற்றும் உடற்பயிற்சி நிறுவனமான PhysioDesk நிறுவனத்திற்கான பிரத்யேக செயலி பிசியோதெரபிஸ்டுகள் நோயாளிகளையும் ஆன்லைன் மருந்துசீட்டுகளையும் நிர்வகிக்க உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சிறு வணிகத்திற்கும் வலைதளங்களும் செயலிகளும் தேவைப்படுகிறது. ஹாக்கர்கெர்னல் போன்ற நிறுவனங்கள் இந்த ப்ராஜெக்டுகளை சிறு குறு வணிகங்களின் சார்பாக முழுமையாக செயல்படுத்துகிறது. Nu Ventures நிறுவனர் வென்க் கிருஷ்ணன் கூறுகையில்,

 “இந்த சிறு வணிகங்களே இந்தியாவின் உண்மையான முதலாளிகள்,” என்றார்.

இன்று ஹாக்கர்கெர்னல் ஒரு கோடி ரூபாய் ஈட்டுகிறது. ஆனால் வெப் மற்றும் செயலி உருவாக்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் இது மேலும் வளர்ச்சியடைவதைக் காணலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா