நீங்கள் எந்த அளவுக்கு சுரணையற்றவர்?

0

வாழ்க்கையில் உங்களின் பெரிய இலக்கு என்ன? பல காலமாக, நீங்கள் அடைய நினைப்பது எதை? பலருக்கு ஓர் அற்புதமான விடுமுறைப் பயணம், சிலருக்கு உடலை கட்டுக்கள் கொண்டுவருவது, இன்னும் சிலருக்கோ முதலீடுகளைப் பெறுவது... ஆனால் நானோ, சுரணையற்றவளாக என்னை மாற்றிக்கொள்ள சில நாட்களாகவே ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்...

பல ஆண்டுகளாக அதை அடைய முயற்சித்து வருகிறேன். ஆனால், அது இயற்கையில் பருமனான உடலமைப்பு உடையோர் இளைக்க உடற்பயிற்சி மேற்கொள்வது போலவும், மிகக் கடுமையாக உழைத்து விரும்பிய அழகிய உடலைப் பெறுவது போலவும் கடினமானச் செயல். ஆம், ஒரு சுரணையற்றவர் ஆவதற்கு கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது. 

வாழ்க்கையில் மற்றவைகளைப் போலத்தான் இதுவும். ஒருவர் சுரணையற்றவராக உருவாகாததற்கு, அவருடைய பெற்றோர், ஆசிரியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் வளர்ப்புமுறைகளையே காரணமாகச் சொல்வேன். அவர்கள் கூறியதைக் கேட்டு நீங்கள் உடனடியாக செயலில் இறங்கவில்லையென்றால், எப்படியெல்லாம் கண்டிக்கப்பட்டிருப்பீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?

"நான் சொல்வதை கேள்," "காதுகேட்காதது போல் நடிக்காதே," "கவனம் செலுத்து!" இப்படியெல்லாம்தானே நமது பெற்றோர், ஆசிரியர்கள் எல்லாருமே நமக்குக் கட்டளையிட்டனர். இதனால்தானே நாம் அனைவரும் மற்றவர்கள் பேச்சை கேட்டு நடக்க ஆரம்பித்தோம்... அவர்கள் சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டோம், திட்டுக்களை வாங்கிக்கொண்டோம்.. தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதை இனி செய்யமாட்டோம் என 100 முறை புத்தகத்தில் எழுதியோ... வீடு, பள்ளிக்கூட வாசலில் நாமே நம் தவற்றை உணரும் வரை நிற்கவைக்கப்பட்டிருப்போம்...

இந்த பண்டைய பழக்கமுறையை நான் முற்றிலும் ஒப்புக்கொண்டாலும், அதுவே சிலசமயங்களில் நம்மை பாதிக்கப்பட்டவராக மாற்றிவிடுகிறது என்று எண்ணுகிறேன். சிலசமயம் நம்மைச் சுற்றியுள்ளோரின் பேச்சுக்களையே கேட்டுப் பழகிய நாம், அவர்களின் சத்தம் அதிகரிப்பதால் நம் எண்ணத்தின் மொழியையே கேட்க மறந்துவிடுகிறோம்.

எனது ஆரம்பக்கட்ட தொழில்முனைவுப் பயணத்தின்போது, ஒருவரின் கடும் சொற்கள் கூட என்னை அழவைத்திருக்கிறது... அன்று அந்த நபரின் கடும் சொற்களைக் கேட்டு வெளியே வந்த என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அவர் என்னை அவமானப்படுத்தி, கீழ்த்தரமாக பேசியதை நான் உணர்ந்தேன், ஆனால் அந்த நொடியில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது என் அப்பா எனக்கு போன் செய்தார். அங்கு எதுவும் நடக்காததைப் போல் நான் அவரிடம் நார்மலாக பேசினேன். ஆனால் பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள்தானே... என் பேச்சில் இருந்த சிறிய தடுமாற்றத்தையும் புரிந்துகொண்ட அவர், என்ன நடந்தது எனக் கேட்டார்? நான் அவமானப்பட்டதை அவரிடம் சொல்ல விரும்பவில்லை; இருந்தாலும், நடந்ததை அவரிடம் சொன்னேன்.. அதற்கு அவர் இப்படிச் சொன்னார்...

"நீ சாலையில் நிற்கும்போது அதற்கு ஏற்ப நடந்துகொள்; சாலையை கடக்கக் கற்றுக்கொள், இடையில் வரும் போக்குவரத்தை சமாளிக்கவும் தெரிந்துகொள்..." 

இத்தனை ஆண்டுகள் கழிந்துவிட்டன. நான் சாலையை ஒழுங்காக கடக்கக் கற்றுக்கொண்டு விட்டேனா? இருக்கலாம்... முன்பைவிட இப்போது ஓரளவு கற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் இன்றும் சிலசமயம் வாழ்க்கையில் சந்திக்கும் முட்டாள்தனமான செயல்களையும் மனிதர்களையும் என்னால் சமாளிக்கமுடியவில்லை.

சுரணையற்றவராக இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு நான் சொல்வதெல்லாம்... "நீங்கள் அவ்வாறு பிறக்காததற்கு, வேறுவகையான மனப்பான்மையுடன் இல்லாததற்கும் நன்றி தெரிவியுங்கள்." இந்த இயந்திர உலகிலும் உணர்ச்சியுள்ள மனிதராக இருப்பது அற்புதமான விஷயமே. பெரும்பாலும் உணர்ச்சிவயப்படுபவரை தாழ்த்திப் பார்க்கும் மனப்பான்மை இங்கு உண்டு, முக்கியமாக ஒரு தொழிலின் தலைவருக்கு இருக்கக்கூடாத குணமாக அது பார்க்கப்படுகிறது. ஆனால் நான் இதை மறுக்கிறேன்... நமது உணர்ச்சிகளே நமது மிகப்பெரிய பலம்...

உரக்க அழுபவரால் மட்டுமே உரக்க சிரிக்கவும் முடியும்... எனவே, முதலில் உங்கள் உணர்ச்சிகளையும், உங்கள் சுற்றியுள்ளவர்களையும் நேசியுங்கள்!

இருப்பினும் சுரணையற்ற தன்மையை ஏற்படுத்திக்கொள்வது தினசரி பழக்கமாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இரக்கமற்றவர்களை புறக்கணித்து அவர்களையும் அன்புடன் நடத்துங்கள்... அதுவே நம்மை பலசாலி ஆக்கிவிடும்.

ஒவ்வொரு அவமானமும், ஒவ்வொரு புறக்கணிப்பும் மட்டுமே நம்மை சுரணையற்றவராக மாற்றிக்கொள்ள உதவும்.

வாழ்த்துக்கள்... சுரணையற்றவர் ஆவதற்கு!

(யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)