மாதவிடாய் முதல் நாளில் சம்பளத்துடன்கூடிய விடுமுறை : இந்திய நிறுவனத்தின் புதிய முன்னெடுப்பு

ஜப்பான், இந்தோனேஷியா, இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் இத்திட்டம் அமலில் இருக்கிறது. இந்தியா இவர்களைப் பின்பற்றுமா?

1

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படுவது வழக்கம். அவ்வாறின்றி, வலி குறைவாக இருக்கும் பெண்களுக்குக்கூட பணிக்குச் செல்வதற்காகப் பயணிப்பதும், பல மணி நேரம் தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவதும் கடினமானதாகவே இருக்கும்.

மும்பையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் 'கல்ச்சர் மெஷின்' (Culture Machine) டிஜிட்டல் மீடியா ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த மாதத்திலிருந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி பெண் ஊழியர்கள் தங்களது மாதவிடாயின் முதல் நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்ச்சர் மெஷின் நிறுவனத்தின் மனித வளத்துறை தலைவர் தேவ்லீனா எஸ் மஜும்தார் ஹெர்ஸ்டோரியுடன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார். 

’ப்ளஷ்’ (Blush) என்கிற எங்களது யூட்யூப் சேனல் பெண்களுக்கு அதிகாரமளிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் இதில் மையப்படுத்தப்படுகிறது. அதனால் எங்களுடன் பணிபுரியும் பெண்களுக்கும் ஆதரவான பணிச்சூழலையும் வசதியான திட்டங்களையும் வழங்க நினைத்தோம்.”

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் பொதுவாக விடுப்பு எடுத்துக்கொள்ளத் தயங்குவார்கள். ஆனால் பணிக்குச் செல்கையில் அவர்களது உடல்ரீதியான அசௌகரியம் காரணமாக முழுமையான ஈடுபாட்டுடன் பணிபுரிய முடியாது. மாதவிடாய் சார்ந்த மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியவேண்டும். தினசரி உரையாடல்களில் மாதவிடாய் என்கிற அம்சமும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றார் தேவ்லீனா. 

கல்ச்சர் மெஷினில் தற்போது 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மொத்த ஊழியர்களில் பெண்களின் விகிதம் 35 சதவீதம். இதை 50 சதவீதமாக உயர்த்த விரும்புகிறது இந்த ஸ்டார்ட் அப். மாதவிடாய்க்காக அறிவிக்கப்படும் இந்தக் கூடுதல் விடுப்பு உற்பத்தித்திறனை பாதிக்குமா என்கிற கேள்விக்கு தேவ்லீனா பதிலளிக்கையில்,

”உற்பத்தித்திறன் என்பது மனநிலை சார்ந்தது என்பதே என்னுடைய கருத்து. நமது பெண்கள் ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டால் புத்துணர்ச்சியுடன் பணிக்குத் திரும்புவார்கள். இதனால் நீண்ட கால அடிப்பட்டையில் நிச்சயமாக உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.”

பெண்களுக்குப் பலனளிக்கும் விதத்தில் திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கான எதிர்பாளர்களும் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட முயற்சிகள் பெண்ணியத்திற்கு ஆதரவளிப்பதாகவும் பாலினச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதாகவும் இந்த எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவார்கள். தேவ்லீனா கூறுகையில், 

“உயிரியல் அடிப்படையில் ஆணும் பெண்ணும் சமம் அல்ல. இந்த காரணத்தினால்தான் ஏற்கெனவே மகப்பேறு விடுப்பு போன்ற சலுகைகள் பெண்களுக்கு உள்ளன. இளம் தாய் அவரது பச்சிளம் குழந்தையுடன் அதிக நேரம் இணைந்திருக்க மகப்பேறு விடுப்பு உதவும். இதனால் பெண்கள் அதிக சிறப்பான மனநிலையில் பணிக்குத் திரும்புவார்கள். அதேபோல் இந்தக் கொள்கையானது எங்களது பெண் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.”

உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுதல்

மாதவிடாய் விடுப்பு இந்தியாவில் வழக்கத்தில் இல்லை எனினும் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இப்படிப்பட்ட திட்டங்கள் பெண்களின் இயற்கையான உடல் சுழற்சியுடன் அவர்களது பணி ஒத்திசைந்து செல்வதற்கான முயற்சியாகும்.

நைக் நிறுவனம் அவர்களது நடத்தை குறியீட்டில் மாதவிடாய் விடுப்பை 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் தரநிலைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களது வணிக கூட்டாளிகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்தது நைக் நிறுவனம்.

ஜப்பானில் பல ஆண்டுகளாக மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ளது. அவர்களது 1947 தொழிலாளர் தரச் சட்டத்தின்படி பெண்களுக்கு வலி நிறைந்த மாதவிடாய் இருந்தாலோ அல்லது மாதவிடாய் வலியை அதிகப்படுத்தும் விதத்தில் அவர்களது பணி இருந்தாலோ அவர்களுக்கு ‘செய்ரிக்யூகா’ (Seirikyuuka – உடலியல் விடுப்பு) அளிக்கப்படும். பணியாளர்கள் குழுவில் பெண்கள் அதிகம் இணையத் துவங்கியபோதே இந்தச் சட்டம் எழுதப்பட்டது. மேலும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பணியிடங்களில் சுகாதார வசதிகள் மோசமாகவே இருக்கும். பொருளாதார மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சட்டம் பார்க்கப்பட்டது. மேலும் ஜப்பான் போன்ற பழமைவாத சமூகத்தில் மாதவிடாய் சார்ந்த மூடநம்பிக்கைகளை குறைக்கவும் இச்சட்டம் உதவியது.

சமீபத்தில் தாய்வான் நாட்டிலும் மாதவிடாய் விடுப்புச் சட்டம் அறிமுகப்பட்டுள்ளது. அந்நாட்டின் வேலைவாய்ப்புகளில் பாலின சமத்துவ சட்டத்தில் 2013-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து ஊழியர்களுக்கும் 30 நாட்கள் பாதி சம்பளத்துடன் கூடிய நோய் விடுப்புடன் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுப்பையும் உறுதி செய்கிறது.

சீனாவின் பல மாகாணங்களில் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்தோனேஷியப் பெண்களுக்கு ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. எனினும் பல நிறுவனங்கள் இச்சட்டத்தை பின்பற்றுவதில்லை.

தென் கொரியாவில் இந்தக் கொள்கை பல்கலைக்கழக மாணவர்களிடையே சோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவிகள் கல்லூரிக்கு வராமல் விடுப்பு எடுப்பதற்கு இந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்தியதாகப் பேராசிரியர்கள் கருதியதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. எனினும் 2001-ல் தென் கொரியாவிலுள்ள பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கப்பட்டது. இதற்கு ஆண்களின் உரிமைக்காக போராடுபவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கெனவே கொரியாவில் ஆண்களின் ஆதிக்கமே பணியிடத்தில் மேலோங்கியிருந்தது. இவ்வாறு பெண்களுக்கு சிறப்புச் சலுகை அளிப்பது ஆண்களைப் பாகுபடுத்தும் என்று போராடுபவர்கள் தெரிவித்தனர்.

ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும்கூட மாதவிடாய் விடுமுறை அளிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்னமும் இது அமலுக்கு வரவில்லை.

சமீபத்தில், முதல் முறையாக இத்தாலி, பெண்களுக்கான சம்பளத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. இவ்வாறு செய்யும் முதல் ஐரோப்பிய நாடு இதுவே. இந்த விடுமுறை மாதவிடாய் நேரத்தில் அதிக வலி கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே. இவர்கள் மாதம் மூன்று நாள் சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்