3 கல்லூரிகளில் இடைநின்று, சமூக நிறுவனராக மார்க் வாங்கிய கதை!

0

"கல்லூரியில் இருந்து வெளியேறி, என் கனவைப் பின்தொடர்வதற்காக, என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் போராடினேன். நான் கடவுளிடம் அளித்த சத்திய வாக்கை வார்த்தைகளால் பதிய முடியாது" என்கிறார் 'ஐ இம்பாக்ட் இந்தியா' நிறுவனர் ஓங்கார் கே.குல்லார்.

கல்லூரியில் இருந்து மூன்று தடவை நின்றவர் ஓங்கார். 2010-ல் ஐஐஎல்எம் லோதி ரோடு - ஒரு தனியார் கல்லூரியில் இருந்து படிப்பை நிறுத்தினார். இரண்டாவதாக, கால்சாவில் 2011-ம் ஆண்டு படிப்பை இடையில் நிறுத்தினார். அதன்பின், 2013-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் முக்கிய கல்லூரிகளில் ஒன்றான எஸ்எஸ்சிபிஎஸ்-ல் இருந்து வெளியேறினார். "என் இலக்கைத் தேடுவதற்காகவே முதல் இரண்டு கல்லூரிகளில் இருந்து வெளியேறினேன். அப்போது, 'மேக் எ விஷ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தேன். ராதிகா என்ற எட்டு வயது சிறுமியின் பரிச்சயம் ஏற்பட்டது. அவருக்கு ரத்தப் புற்றுநோய். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டிய நிலை. ஒவ்வொரு முறைக்கும் 1.5 லட்ச ரூபாய் செலவாகும். அந்த சிறுமியின் தாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கும் ஏறி இறங்கினார். எங்கேயும் அவரால் சரியான முறையில் நிதி திரட்ட முடியவில்லை. என்னிடமும் அவர் உதவி நாடினார். பங்குச்சந்தையில் சிறப்பாக ஈடுபட்டு வந்ததால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், பணம் கொடுப்பதுதான் சரியான தீர்வு என்று நினைக்கவில்லை. அவர்களின் நிலையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பது தெளிவு" என்ற ஓங்கார், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார்.

தனது குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தாமல், வளரும் துறைகளில் நிலவும் உண்மையான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம், நிதி ஆதாரம் என்பது பிரச்சனை அல்ல; தொடர்புத் திறனில் வல்லுநர்கள் இல்லாததுதான் பிரச்சனையே என்ற முடிவுக்கு வந்தார். "என் வாழ்க்கையில் படைப்பாற்றல் மீதுதான் அதிக ஈடுபாடு என்பதை அறிந்தேன். அதன் தொடர்ச்சியாக எழுந்த கேள்விதான்: பணம் ஈட்டுவதற்காக தாக்கத்தை உருவாக்க வேண்டுமா அல்லது தாக்கத்தை உருவாக்குவதற்காக பணம் ஈட்ட வேண்டுமா?"

வளரும் துறைகளில் குறைந்த செலவில் அதிக பலன் அளித்திடும் வகையில் தொடர்பியல் (கம்யூனிகேஷன்) சிக்கல்களுக்குத் தீர்வு காண வல்லுநர் குழுவை உருவாக்க வேண்டும் என்ற யோசனை பிறந்தது. கோக கோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு உத்திகளை வகிக்கும் சிறந்த குழுவை கொண்டிருப்பது போலவே வளரும் நிறுவனங்களுக்குப் பயன்படக் கூடிய குழுவை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

இதுகுறித்து ஓங்கார் மேலும் கூறும்போது, "முதலீட்டு நிதிக்காக ஏஞ்சல் கேபிடலிடம் விண்ணப்பித்தேன். நான் பட்டதாரி இல்லை என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக இருந்தது" என்றார்.

எனவே, மேனேஜ்மென்ட்டிலே இந்தியாவின் சிறந்த கல்லூரியில் விண்ணப்பித்தார். எஸ்எஸ்சிபிஎஸ்-சில் பி.எஃப்.ஐ.ஏ. கிடைத்தது. இந்தப் படிப்புக்கு இந்தியாவில் வெறும் 60 இடங்களே உள்ளன. ஒரு டிகிரி வாங்குவதற்காக கல்லூரியில் ஆறு மாத காலம் போராடியவர், டெல்லியில் பிசினஸ் பிளான் போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்றார். அதில் சிலவற்றில் வெற்றி பெற்று ரூ.50,000 அளவில் பணத்தையும் ஈட்டினார். "ஒருநாள் என் ஆசிரியரிடம் சென்று, நிறைய பிசினஸ் பிளான் போட்டிகளில் வெற்றி பெற்றதால் என் வருகைப் பதிவை கேட்டேன். பிசினஸ் பிளான் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்; ஆனால், அந்த பிளான்கள் நடைமுறையில் வெற்றியைத் தந்தால் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றார் ஆசிரியர்.

என் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ல் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். 'ஒன் பாக்கெட் பெர் வியூ' என்ற முதல் இயக்கத்தை ஆரம்பித்தோம்; ரோட்டரி இன்டர்நேஷனல், நேஷனல் அசோஷியேஷன் ஃபார் பிளைண்ட் மற்றும் டிஎல்எஃப் முதலான வாடிக்கையாளர்களைப் பெற்றோம். நான்கு மாதங்களுக்குப் பிறகு, எங்கள் பார்டன்ர்கள் இருவர் எம்பிஏ படிப்பதற்காக நிறுவனத்தில் இருந்து விலகினர். நானும் கல்லூரியை விட்டு வெளியேறினேன். நான் முழு நேரமாக நிறுவனத்தை நடத்த வேறு வழி தெரியவில்லை.

ஓங்கார் உடனான உரையாடலில் இருந்து சில பகுதிகள் இதோ...

எண்ணங்களின் சந்திப்பு

எங்களிடையே மோசமான நினைவுகளுடன் பிரிவு ஏற்பட்டது. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. நாங்கள் மூவருமே சிறு வயதில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்தொம். ஆனால், சிறந்த நண்பர்கள் உடன் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட முடியாது என்பதை உணர்ந்தேன்.

கடந்த 2013-ல் முதல் சம்மர் இன்டெர்ன்ஷிப் தொடங்கினேன். 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அது ரொம்ப சீக்கிரம் என்பது எனக்குத் தெரியும். நான் சரியானவற்றைச் செய்திட கடவுள் உதவினார்.

நான் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு, இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது, நிறுவன மசோதாவும் சிஎஸ்ஆர் (நிறுவன சமூப் பொறுப்பு) சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், எனக்கு பின்னடைவு என்ற நிலை. 'இவனுக்கு என்னதான் ஆச்சு' என்று என் குடும்பத்தினர் மிகுந்த கவலையுற்றனர். ஆனால், உண்மையுடன் நம்பிக்கை வைக்கும்போது, அது உண்மையிலேயே நிகழ்ந்துவிடுவதும் உண்டு. நான் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது, 'ஐ இம்பாக்ட் இந்தியா' (I Impact India) நிறுவனம் 25 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா முழுவதும் விரவியிருக்கிறது.

ஐ இம்பாக்ட் இந்தியாவின் தாக்கம்

அடுத்த அண்ணா இயக்கத்துக்கான பிராண்டுகள் (இயக்கத்தை சந்தைப்படுத்துதலும், மக்கள் நலன்சார்ந்த நோக்கத்தை சந்தைப்படுத்துவதும்), பாலியல் பலாத்கார தடுப்பு நடவடிக்கைகள் (பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் வகுத்துத் தருதல்), அரசு பள்ளிகளிலும், என்ஜிஓ பள்ளிகளிலும் வருகைப் பதிவை மேம்படுத்துதல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதிய நிதி ஆதாரங்கள் பெற உறுதுணைபுரிதல் முதலான பணிகளைச் செய்யும் நிறுவனமாக கருதச் சொல்கிறார் ஓங்கார். தொழிலில் நிலவும் சங்கிலித் தொடர் சிக்கல்களை நீக்குவதற்கு, சிஎஸ்ஆர் மற்றும் பிஆர் பிரச்சனைகளை முற்றிலும் களைந்து, பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்குவதுதான் தனது நிறுவனத்தின் முக்கியப் பணி என்கிறார். மேலும், பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்துவதும், பொது விநியோக முறையில் சர்வதேச அளவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் ஈடுபாடு காட்ட விரும்புவதாகச் சொல்கிறார்.

"சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல தொடர்புத்திறனும், சமூக புத்தாக்கமும்தான் எல்லா பிரச்சனைகளின் மையமாக உள்ளது. இவற்றை கம்யூனிகேஷன் மற்றும் இன்னவோஷன் என்ற ஆங்கிலச் சொற்களில் எளிதாகக் குறிப்பிடலாம்" என்கிறார் அவர்.

பிராண்டிங், பிஆர், டிசைன், ஈவன்ட்ஸ், மார்க்கெட்டிங், விளம்பரம், சமூகப் புத்தாக்கம் மற்றும் வியூகம் முதலானவற்றில் உள்ள ஷோஷியல் இம்பாக்ட் கம்யூனிகேஷன் சார்ந்த தீர்வுகளை அணுகுகிறது, ஐ இம்பாக்ட் இந்தியா. "தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தனித்தனியாக வெவ்வேறு நிறுவனங்களை அணுகக் கூடிய அளவுக்கு வசதி படைத்தவை அல்ல. ஆனால், நாங்கள் தொழில் துறையின் முன்னோடிகளைக் கொண்ட எங்கள் வாரிய அட்வைஸர்கள் மூலம் அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை வழங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்."

குறைந்த செலவில் 90 நாட்களுக்குள் எந்த ஒரு கம்யூனிகேஷன் தீர்வையும் ஏற்படுத்தவல்ல இம்பாக்ட் திங்க்கிங் முறை என்றழைக்கப்படும் வியூகத்தை ஓங்கார் வகுத்திருக்கிறார். இது தொடர்பான ஸ்லைட் ஷோ ஒன்றை இங்கே காணலாம்.

சில தவறான புரிதல்களை களைய விரும்புகிறேன். ஐ இம்பாக்ட் இந்தியா (ஐஐஐ) என்பது என்ஜிஓ-வா? இல்லை. இது என்ஜிஓ அல்ல. இது லாப நோக்கம் கொண்ட நிறுவனம்தான், தொழில் மூலம் பணம் ஈட்டப்படுகிறது என்பதும், சிறந்த நிபுணத்துவம் மதிக்கப்படுகிறது என்பதும் அவர்களது நம்பிக்கை. என்ஜிஓ-க்களுக்காக நிதியைத் திரட்டுகிறதா ஐஐஐ? இல்லை. ஐஐஐ என்பது என்ஜிஓ-க்களுக்கு நிதி திரட்டி வழங்கும் நிறுவனம் அல்ல; மாறாக, நிதி திரட்டுவதற்கு மிகச் சிறந்த உத்திகளை வடிவமைத்து தரும் நிறுவனம். மற்ற கன்சல்டன்ட்டுகள் போல, செலவிடப்படும் நேர அளவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது இல்லை; மாறாக, கிடைத்த பலன்களுக்கு ஏற்பவே கட்டணம் பெறப்படுகிறது.

முக்கிய வாடிக்கையாளர்கள்

சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து ஐ இம்பாக்ட் இந்தியா செயல்படுகிறது. Swamimusic.com தொடங்கி லண்டனைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான சக்ரவியூக், ரோட்டரி இன்டர்நேஷனல் வரையிலான சர்வதேச நிறுவனங்களையும், தேச அளவில் பிரயாஸ் மற்றும் பிரபாவ் ஃபவுண்டேஷன் போன்ற தன்னார்வ நிறுவனங்கள், சிட்டிவாக், டிஎல்எஃப் மற்றும் பார்தி ஃபவுண்டேஷன் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது.

"குழந்தைகளுக்கான உலகின் மிகப் பெரிய மராத்தானை சோஷியல் மீடியாவில் வைராலாக்குவதற்காக பிராண்ட் ரீவாம்ப்களிலும் ஈடுபட்டோம்." இதோ சில ஆய்வுக் கட்டுரைகளுக்கான குறிப்புகள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தொழிலில் ஏற்ற இறங்கங்களைச் சந்தித்து வரும் ஓங்கார் தனது பயணம் குறித்து யுவர்ஸ்டோரியிடம் கூறும்போது, "வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் நிரம்பிய பாரம்பரிய முறையின் ஆதிக்கம் உள்ள துறையில் 23 வயதில் அடியெடுத்து வைப்பது மிகவும் கடினமானது. புதிய யோசனைகளையும் தீர்வுகளையும் அவர்களிடம் முன்வைத்து, அவர்களது மனநிலையை இளம் குழுக்கள் மாற்றுவது என்பது மிக மிகக் கடினமான காரியம். இந்திய மற்றும் சர்வதேச அளவில் 600-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகியிருக்கிறேன். அதன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 'What’s your cause?' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன். எங்கள் கன்சல்டன்சி பற்றி தெரியாதவர்கள், 2011 முதல் 2013 வரை எங்களது நடைமுறை செயல்பாடுகள் அனைத்தையும் அந்தப் புத்தகத்தில் அறியலாம். இப்புத்தகம் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும்.

"அறக்கட்டளை மாதிரி என்பது இறந்த காலம். இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் தொழில் போல செயல்பட வேண்டும். இல்லையென்றால், அவையெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். நிறைய நிதி திரட்டும் நிறுவனங்கள் கமிஷன் அடிப்படையில் லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்காக இயங்குகின்றன. இந்த முறையை நான் அடியோடு வெறுக்கிறேன். நன்கொடையில் இருந்து 50% கமிஷன் தரப்படுவது அபத்தம். ஒருவர் 10 ரூபாய் நன்கொடை செய்கிறார் என்றால், கமிஷன் ஏஜெண்டுக்கு ரூ.5, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு ரூ.3 போக, வெறும் 2 ரூபாய் மட்டும்தான் பயனாளிகளுக்கு கிடைப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல.

அதற்கு பதிலாக, அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு தொழில் நிறுவனம் போலவே நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உரிய வியூகங்களை வகுத்து, 90 நாட்களில் பலன் கிடைக்க வழிவகுக்கிறேன்" என்கிறார்.

ஐ இம்பாக்ட் இந்தியாவின் அடுத்த திட்டம்

எங்கள் குழு சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய விரும்புகிறது. நல்ல நோக்கங்களுக்கு உதவக் கூடிய மிகப் பெரிய வங்கி ஒன்றை இந்தியாவில் நிறுவும் திட்டத்தில் இறங்கியிருக்கிறோம்.

ஐ இந்தியா இம்பாக்ட் என்பதை ஐ இம்பாக்ட் இன்டர்நேஷனல் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அதற்காக, இந்த ஆண்டு முடிவில் கேபிஓ அல்லது பிபிஓ போன்ற அவுட்சோர்சிங் பிராசஸ்களில் சோஷியல் இம்பாக்ட் கம்யூனிகேஷனில் பங்குவகிக்க தீர்மானித்துள்ளோம். நியாயமான கட்டணத்தில், சர்வதேச அளவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சேவைகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.

முடிவாக...

இந்தியாவில் சுமார் 75 லட்சம் என்ஜிஓ.க்கள் செயல்படுகின்றன. சிஎஸ்ஆர் நெறிமுறைகள் 2013-க்குப் பிறகு, இந்த எண்ணிக்கை இரு மடங்கை விரைவில் எட்டுவதும் நடக்கக் கூடும். ஆயினும், நம் நாட்டில் இன்னமும் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் வாடுகின்றனர். ஐ இம்பாக்ட் இந்தியா போன்ற நிறுவனங்கள், வளரும் துறைகளில் புதுமைகளுக்கும், நல்ல நோக்க நிபுணர்களுக்கும் அடிகோலும் என நம்பலாம்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்