கட்டிங்... ஷேவிங்... வீடு தேடி வரும் நடமாடும் அழகுநிலையம் நடத்தும் ஸ்ரீதேவி!

டைட்டில் படித்த அடுத்த நொடி குசேலன் பட வடிவேலு காமெடிகள் கண்முன்னே ஓடியிருக்குமே!. கான்செப்ட் அது தான், பட் இது அப்டேட் வெர்ஷன். ஆமாம் மக்களே, கோவைவாசிகளுக்காக கோவையில் முதன் முறையாக நடமாடும் அழகு நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

1

லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ட்ஸ் இனி கட்டிங், ஷேவிங்கோ, பேசியல், பிளீச்சிங்கோ பார்லரைத் தேடி நீங்க அலைய வேண்டியது இல்லை. ‘நாங்க இருக்கோம்’ என்று வீட்டுக்கே வந்து பார்லர் சேவையை வழங்குகிறது ஸ்ரீதேவியின் ’க்யூ 3 சலூன் ஆன் வீல்ஸ்’

ஸ்ட்ரைடெனிங், ஹேர் கலரிங், மெனிக்யூர், பெடிக்யூர், என அழகியல் சார்ந்த எத்தேவையாக இருப்பினும் 9486694899 என்ற எண்ணுக்கு போன் கால் செய்தால் போதும், சவரக்கத்தி தொடங்கி சர்வதேச மேக் அப் அயிட்டங்கள் வரை அத்தைனியும் கொண்ட வண்டியுடன் வந்து இறங்கிவிடுகின்றனர் ஸ்ரீதேவியின் குழுவினர். 

இடது: ஸ்ரீதேவி
இடது: ஸ்ரீதேவி

கோவைவாசியான ஸ்ரீதேவிக்கு படிக்கும் காலங்களிலே, ஒருவர் புறத்தோற்றத்தை எப்படியெல்லாம் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுடன் இருந்திருக்கிறார். கல்லூரி நண்பர்களுக்கும் பெர்சனாலிட்டி டெலப்மேன்ட்டுக்கும் ஆலோசனை வழங்கும் ஆலோசகராகவும் இருந்துள்ளார். காலேஜ் நாட்களிலே அவருடைய பேஷனை அறிந்துக் கொண்டாலும், அதற்குள் கல்யாணம், குடும்பம், அழகிய மகன் என வாழ்க்கை வேறுப் பாதையை காட்டியதில், பல ஆண்டுகள் உருண்டோடின. இனிவரக் கூடிய நேரங்கள் அவருக்கானவை என்று உணர்ந்த அவர், புனேவில் ஐ.டி ஊழியராக பணியைத் தொடங்கியுள்ளனர். 

ஏழு வருட ஐடி ஊழியர் பணி, அவருக்கு சமூகத்தில் தனிமனிதனின் பெர்சனாலிட்டி எந்தளவு கவனிக்கப்படுகிறது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறது. அங்கு கிடைத்த அனுபவத்தில் தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றி உள்ளது. 

என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுந்தப்போது அவர் மனதில் ஆப்சனேயின்றி தோன்றியது பியூட்டி சலூன். அதன் தொடக்கமாய், மும்பையில் இரண்டு ஆண்டுகள் பியூட்டிசியன் பட்டப்படிப்பு முடித்து பயிற்சி எடுத்து கொண்டார். பின்னே, 2008ம் ஆண்டு உதயமானது ‘திவா சலூன்’. அதன் நீட்சியே இன்றைய ’க்யூ 3 சலூன்’

தொழில் தொடங்கும் எண்ணம் உதித்தது எப்படி? பார்லர் தொடங்குவதற்கான அத்தியாவசியமானவைகள் எவை? லாப, நஷ்ட கணக்கு, என்று மொத்த பயோடேட்டாவையும் பகிரத் தொடங்கினார் அதன் உரிமையாளர் ஸ்ரீதேவி பழனிச்சாமி.

“முதலில் 12 லட்ச முதலீட்டில் ‘திவா சலூன்'-ஐ ஆரம்பித்தோம். 5 ஆண்டுகளுக்கு முன் கிராமப்புறத்தில் இருந்து அதிகப்படியான மாணவிகள், பணிக்காக சென்னை, பெங்களூரை நோக்கி படையெடுத்தனர். அப்போது அவர்களுக்கு புறத்தோற்றம் குறித்து ஆலோசனைகள் வழங்கியதில், அவர்களே எங்களின் பிரதான கஸ்டமர்களாகினர். அவர்களுடைய திருமணங்களுக்கு எங்களையே புக் செய்தனர். அந்த காலக்கட்டத்தில் கஸ்டமர்களின் மனம் அறிந்தோம். 

“பார்லர் செல்வதற்கே தனியாக மேக் அப் போட்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது என வாடிக்கையாளர்கள் பார்லர் செல்வதில் உள்ள சிரமங்களை பகிர்ந்துக் கொண்டனர். இக்குறையை போக்க யோசித்தப் போது தான், வீட்டு வாசலிலே அனைத்தும் கிடைக்கையில் ஏன் மொபைல் பியூட்டி பார்லரும் ஏற்படுத்தக்கூடாது என்று தோன்றியது. திட்டமிடலுக்கு முன், மக்களின் தேவையை அறிய ஆய்வு செய்தேன்,” 

எனும் ஸ்ரீதேவி, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், என அனைவருக்குமான நடமாடும் அழகு நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

செகண்ட் ஹேண்ட் வேனில், ஹை டெக் மியூசிக் சிஸ்டம், திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடி, ரோலிங்ங் சேர், ஹேர் வாஷ் பேஷன், என பியூட்டி பார்லருக்கு தேவையான சகலத்தினையும் பொருத்தி, வேனை வேற லெவலுக்கு மாற்றியுள்ளார். ஆண்களுக்கு என்று தனி ஹேர் ஸ்பெஷலிஸ்ட், பெண்களுக்கு தனி ஹேர் ஸ்டைலிஸ்ட் என ஒருங்கிணைந்த குழுவாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் மொபைல் பியூட்டி பார்லர் பற்றி புரியாத மக்களுக்கு, புரிய வைக்கவும் முடியாமல் திணறியவர், ஒவ்வொரு நாள் அனுபவத்தையும் பாடமாக எடுத்துக் கொண்டார். 

பின், மக்கள் புரிந்து கொள்ளவே, க்யூ 3- யை அழைத்து குடும்பம் குடும்பமாய் ஹேர் கட், பேசியல் செய்து கொண்டுள்ளனர். மக்களிடையே நன்வரவேற்பு கிடைக்கவே, இன்று ‘க்யூ 3 சலூன்’ வேன் கோவை முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் தான், கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் செயலாளர் க்யூ 3 -யைத் தொடர்புக் கொண்டு கல்லூரிக்கு வரச் சொல்லி இருக்கிறார்.

“கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகள் புருவசரிச் செய்தலுக்காகவும், மாணவர்கள் ஹேர் கட்டுகாகவும் பெர்மிஷன் போட்டு வெளியில் செல்வதால், எங்களை அழைத்திருந்தார். மாணவிகளின் பாதுகாப்புக்காக தான் உங்களை அழைத்தோம். ரொம்ப பயனுள்ள சேவையாக இருக்கிறது என்றார், சந்தோஷமாக இருந்தது. கல்யாண வீடுகளுக்கும் எங்களையே புக் பண்றாங்க. நாங்க வேன் எடுத்துக் கொண்டு மகாலுக்கு முன் நிறுத்தினால், மணமக்கள் உட்பட வந்திருக்கும் விருந்தினர் எல்லாரும் மேக் அப் செய்து கொள்கிறார்கள். 

”முன்னெல்லாம் கல்யாணத்துக்கு வந்தா, சாப்பாடு நல்லாயிருந்ததுனு சொல்லுவாங்க, எங்க கல்யாணத்தில் பார்லர் வேன் வச்சிருந்தத உறவினர்கள் பெருமையாக சொன்னதாக ஒரு கல்யாண வீட்டார் கூறினர். வெரி ஹாப்பி, இதுவரை போன் காலில் மட்டுமே புக் செய்யும் வசதியிருக்கிறது. விரைவில் பிரத்யேக செயலியும் அறிமுகப்படுத்த உள்ளோம்,” எனும் ஸ்ரீதேவி தொழிலை விரிவுப்படுத்துவதற்கான பக்கா பிளானுடன் இருக்கிறார்.

விருப்பமுள்ளவர்கள் ‘க்யூ 3 சலூன்’ நிறுவனப் பெயரிலே ப்ரான்சைஸ் கிளையைத் தொடங்குவதற்கான உரிமை வழங்க உள்ளோம். 

15 லட்ச முதலீட்டில் தொழிலைத் தொடக்கலாம். அதற்கான முழுப் பயிற்சியும் வழங்கப்படும். முதலில் கோயம்புத்தூரில் தொழிலை விரிவுப்படுத்த இருக்கிறோம். மற்ற தொழிலைக் காட்டிலும் பார்லர் தொழில் தொடர்ச்சியாய் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவும் இல்லாமல், மற்றத் தொழில் போல் மார்க்கெட் குறைந்துவிடும் என்ற அச்சமும் தேவையில்லை. கையில் காசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒருவர் 3 மாதங்களுக்கு ஒரு முறையேனும் முடி வெட்டித் தான் ஆக வேண்டும். அதனால், முதலீட்டு பணத்தினை 2 ஆண்டுகளிலே எடுத்து விடலாம். மாதம் ரு 2 லட்சம் வரை ஏற்ற இறக்கங்களுடன் வருமானம் ஈட்டலாம். 

உழைப்புக்கு ஏற்ற உயர்வு நிச்சயம், என்று கூறி நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்துக் கொண்டார் அவர்.