ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிபுத்திசாலி இந்தியச் சிறுவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

11 வயது இந்திய சிறுவன், இங்கிலாந்தில் உள்ள பெரும் மதிப்பிற்குரிய மென்சா IQ டெஸ்டில் 162 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர் எடுத்துள்ள இந்த மதிப்பெண் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதாவிகளின் மதிப்பெண்களை விட இரண்டு பாயிண்ட் கூடுதல் ஆகும். 

ஆர்னவ் ஷர்மா என்ற இந்திய மாணவன் இங்கிலாந்தில் ரெடிங் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். சில வாரங்களுக்கு முன் நடந்த Mensa IQ டெஸ்டில் எந்தவித பயிற்சி மற்றும் தயார் இல்லாமல் கலந்து கொண்டார். அதிபுத்திசாலிகள் கலந்து கொள்ளும் ஐக்யூ டெல்ஸ்டான இதில் ‘ஜீனியஸ்’ என்ற குறியீட்டை பெற 140 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். ஆனால் ஆர்னவ் அதையும் முறியடித்து 162 புள்ளிகள் எடுத்து இதுவரை அதில் எடுத்த அதிக மதிப்பெண் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

வாய்வழி விளக்க ஆற்றலில் அதிக புள்ளிகள் எடுத்து ஐக்யூ பட்டியலில் அவர் டாப் இடத்தை பிடித்துள்ளார். Mensa IQ டெஸ்ட் மிகவும் கடினமான ஒரு ஐக்யூ தேர்வு. இதில் பலரும் பாஸ் செய்வதே அரிது. 

“நான் இதற்காக பயிற்சி ஏதும் எடுக்கவில்லை, தயாராகவும் இல்லை. தேர்வை எதிர் கொள்ளும் போது மட்டும் சற்று பதட்டமாக இருந்தது. தேர்வின் முடிவுகளை என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்,” என்றார் ஆர்னவ்.

ஆர்னவின் அம்மா மீஷா தமிஜா சர்மா ரிசல்ட் வரும்வரை ஆவலுடன் காத்திருந்தார். தேர்வில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது. ஆர்னவ் அதுவரை அந்த தேர்வு வினாத்தாள்களை பார்த்தது கூட இல்லை என்கிறார் அவர்.

ஆர்னவ்; கோடிங், பாட்மிண்டன், பியானோ, நீச்சல் மற்றும் புத்தகம் படிக்கும் பழக்கங்களை பொழுதுபோக்காக கொண்டவர். அவருக்கு பொதுவாகவே வரலாற்று பற்றிய அறிவும், உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்கள் அத்துப்படியாக தெரியுமாம். Mensa ஒருங்கிணைப்பாளர் ஆர்னவ் பற்றி கூறுகையில்,

“இது போன்ற அதிக மதிப்பெண்னை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு சிலரே இதில் தேர்ச்சி பெறுவார்கள்” என்கிறார்.

Mensa 1946-ம் ஆண்டு ஆக்ஸ்பர்டில் லான்ஸ்லட் லயோனெல் வேர் என்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் ரோலண்ட் பெரில் என்பவர்களால் தொடக்கப்பட்டது. பின்னர் உலக முழுதும் பிரபலமான இதன் நோக்கமே ‘சிறந்த மனித அறிவாற்றல் உள்ளவர்களை தேர்வு செய்து சிறப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும்’ என்பதாகும்.

கட்டுரை உதவி: IANS, Think Change India