சர்தார் பட்டேல் கொண்டிருந்த பொருளாதார சிந்தனைகள்...

0

சர்தார் பட்டேல் இந்திய அரசியலில் 1917 முதல் 1950 வரை ஆதிக்கம் செலுத்தினார். முதலாவதாக, விடுதலைப் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். 1947-ல் விடுதலைக்குப் பின்னர், துணைப் பிரதமராக, உள்துறை, மாநிலங்கள், செய்தி ஒலிபரப்பு ஆகிய முக்கிய இலாக்காக்களை அவர் வகித்தார். இரும்பு மனிதர் மற்றும் நவீன இந்தியாவின் நிறுவனர் என்று போற்றப்பட்டவரான அவர், அதிகாரிகளில் பெரும் பகுதியினர் பாகிஸ்தானுக்கு மாறுதலாகிப் போன பின்னர், இந்திய அதிகார வர்க்கத்தை மறுசீரமைத்தார். ஏராளமான சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒருங்கிணைத்த அவர், இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.

இந்திய ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, அரசின் உடனடி குறிக்கோளாக இருந்தது, தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன் கூடிய சிறந்த மறுகட்டுமானம்தான். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதே அதன் நோக்கமாகும். பிரிட்டிஷார் தங்களுக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக்கொண்டு, தங்களது சிலைகளை மட்டும் இங்கே விட்டுச் சென்றனர். அந்த நேரத்தில் இரண்டாவது உலகப்பபோரின் காரணமாக, இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணிக்கான நிதி, இங்கிலாந்து வங்கியிடம் இருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படவில்லை. இதன் விளைவாக, இந்தியாவுக்கு வந்து சேரவேண்டிய பாக்கி அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால்,போரால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்ததால், நிலுவையைச் செலுத்தும் நிலையில் அந்நாடு இல்லை.

1949 மே மாதம் இந்தூரில் நடந்த இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய சர்தார் பட்டேல், இந்திய பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற தமது நோக்கத்தை பிரகடனப்படுத்தினார்.

'’நமது நீண்டகால அடிமைத்தனம் மற்றும் ஆண்டுக்கணக்காக நடந்த போர் காரணமாக நமது பொருளாதாரம் பலவீனம் அடைந்துள்ளது. இப்போது அதிகாரம் நமது கையில் வந்துள்ள நிலையில், அதற்கு புத்துயிர் அளிக்க வேண்டியது அவசியமாகும். சொட்டு, சொட்டாக புது ரத்தம் பாயச்சப்பட வேண்டும்,’’ என்று அவர் கூட்டத்தில் பேசினார்.

நாட்டின் பிரிவினையும் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், வணிக நம்பிக்கையை உருவாக்குவது தலையாய அம்சமாக இருந்தது. தலைமுறை, தலைமுறையாக கொல்கத்தாவில் வர்த்தகம் புரிந்து வந்தவர்கள், பிரிவினை காரணமாக, பெரும் கவலை அடைந்து நகரத்தை விட்டே செல்ல விரும்பினர். சர்தார் தலையிட்டு அவர்களிடம் பேசி அங்கேயே தங்கி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கே பேசும்போது,’’ இங்கேயே தங்குங்கள் என்று அவர்களுக்கு நான் அறிவுரை வழங்கினேன். ஏனெனில், கொல்கத்தாவை நம்மிடம் இருந்து பிரிக்க பூமியில் எந்த சக்தியாலும் முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,’’ என்று அவர் கூறினார்.

சணல் உற்பத்தி பாகிஸ்தானில் இருந்ததால், அதைச் சார்ந்து வளர்ந்து வந்த ஆலைகள் பாதிப்புக்கு உள்ளாகின. அண்டை நாடாக மாறிய பாகிஸ்தான் ஒப்பந்தங்களை மதிக்க மறுத்து வந்தது. அட்வான்சாக பெறப்பட்ட தொகைக்கு சணலை வழங்கவில்லை. இந்தியா எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சர்தார் பட்டேல், தன்னிறைவு என்னும் தாரகமந்திரத்தை வெளியிட்டார். 1950 ஜனவரியில், தில்லியில் நடந்த பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘’உடன்படிக்கைகளை செயல்படுத்தும் உத்தரவாதத்தை அவர்கள் அளிக்கத் தவறினால், அவர்களைச் சார்ந்து நாம் இருக்க வேண்டியதில்லை. நமக்குத் தேவையான சணல், பருத்தி மற்றும் உணவு தானியங்களை நாமே பயிரிடுவோம்’’ என்று அறைகூவல் விடுத்தார்.

நாட்டு நிர்மானம் மற்றும் இந்திய அரசியல் ஜனநாயகத்தின் முன்னணி தலைவராக விளங்கிய சர்தார் பட்டேலின் சிந்தனைகளும், அணுகுமுறையும் இந்தியாவின் பொருளாதார சவாலைச் சமாளிக்க பெரும் துணை புரிந்தது. தன்னிறைவு என்பது அவரது பொருளாதார சித்தாந்தத்தின் முக்கிய கருத்தாக இருந்தது. அதனால், கிராம அளவில் தன்னிறைவு இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தில் இருந்து பட்டேல் மாறுபட்டு, பண்டிட் நேருவின் கருத்தை ஆதரித்தார். 

மக்கள் நலன் சார்ந்த அரசை உருவாக்குவதில் பெரும் பங்கை அவர் வகித்தார். அதேசமயம், மற்ற நாடுகள் இந்த வகையில் அடைந்த முன்னேற்றத்தையும் அவர் உணர்ந்திருந்தார். பொதுவுடைமை முழக்கங்களால் அவர் திருப்தி அடையவில்லை. பேச்சை விடுத்து, நாட்டுக்கு வளம் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது கொள்கையாக இருந்தது. நாட்டுடைமையை அவர் முற்றாக நிராகரித்தார். தொழில் என்பது வர்த்தக சமுதாயத்தினரின் கையில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட திட்டமிடுதல் முறையில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

நாடு சுதந்திரமடைந்தபோது பெரும்பகுதி அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டதால், குறைந்த அளவு அதிகாரிகளுடன் நிர்வாகத்தை மேற்கொள்ள நேர்ந்தது. மேலும் உலகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்ட தூதரகங்களுக்கும் மூத்த சிவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டி இருந்தது. 1950 ஏப்ரலில் நடந்த மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பட்டேல்,

’’நாம் அதிகாரத்துக்கு வந்தபோது இருந்த நான்கில் ஒரு பகுதி அதிகாரிகளைக் கொண்டு நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். அதனால், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க 50 சதவீதத்தினர் போதும். மற்றப் பணிகளை உதவியாளர்களைக் கொண்டு திறம்பட முடிக்க வேண்டும்,’’ என்று வலியுறுத்தினார்.

லாப நோக்கம் பெரும் முயற்சிக்கான தூண்டுதலே தவிர அதைக் குறையாக கருதமுடியாது என்பது அவரது கருத்து. இதை அவர் நடுத்தரப்பிரிவு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் பிரச்சாரம் செய்யவும் முனைந்தார். இதற்காக, நடைமுறை சிக்கல்களை அவர் உணர்ந்திருக்கவில்லை என அர்த்தம் அல்ல. மக்களிடம் குடிமை உணர்வு இருக்க வேண்டும் என்றும், இதற்காக எல்லை கடப்பது தேசிய கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். மரபு மற்றும் தேச நலனைக் கருத்தில் கொண்டு, வளங்களை முறையான வழிகள் மூலம் திருப்பி விடவேண்டும் என்பது அவரது வாதமாகும். 

செல்வம் ஓரிடத்தில் சேருவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். பேராசைக்கு எதிராக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். பங்கு கேட்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாட்டின் வளத்தை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டும் என்று தொழிலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். தொழிலாளி-முதலாளி உறவு பற்றிய மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை பட்டேல் ஆதரித்தார். மகாத்மாவின் கொள்கைப்படி, தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வெகுமதி நிச்சயம் கிடைக்கும் என்று அவர் நம்பினார்.

இந்தியா விரைவாக தொழில்மயமாக வேண்டும் என்று அவர் விரும்பினார். வெளி ஆதாரங்களைச் சார்ந்து இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது அவரது கருத்து. ஆயுதங்கள், வெடி பொருட்கள், சீருடைகள், வாகனங்கள், பெட்ரோல், விமானங்களைத் தவிர்த்து, எந்திரங்களால் உருவாக்கப்படும் உபகரணங்களே நவீன ராணுவத்துக்கு தேவையாகும். ஆனால், மக்கள் தொகை மிகுந்த நாட்டில் எந்திரமயமாக்கலால் வேலையின்மை என்னும் நோய்க்குத் தீர்வு காண முடியாது. கோடிக்கணக்கான கைகளுக்கு எந்திரங்கள் மூலம் வேலை வழங்க முடியாது என்று அவர் முதலமைச்சர்கள் கூட்டத்தில் கூறினார். 1950-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பண்டிட் நேருவின் பிறந்த நாளன்று பட்டேல் ஆற்றிய வானொலி உரையில், 

‘’விவசாய நாடான இந்தியாவில், வேளாண் மீட்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில் துறைக்கு இடையூறுகள், தடைகள், சிவப்பு நாடா முறைகள் இருக்காது, ‘’என அவர் உறுதி அளித்தார்.

அதே உரையில், முதலீடு சார்ந்த வளர்ச்சியை அவர் ஆதரித்தார். ‘’குறைவாக செலவழித்து, அதிகமாக சேமியுங்கள். இயன்றவரை முதலீடு செய்வது ஒவ்வொரு இந்திய குடிமகனின் லட்சியமாக இருக்க வேண்டும்,‘’ என்று வலியுறுத்தினார். வழக்கறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் ஒவ்வொரு அனாவையும் சேமித்து நாட்டு நிர்மானத்துக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 

அதே உரையில், ஒவ்வொரு காசையும் சேமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.’’ நமக்கு மூலதனம் வேண்டும். அந்த முதலீடு நமது நாட்டில் இருந்தே கிடைக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் இங்கொன்றும், அங்கொன்றுமாக கடன் வாங்க நம்மால் முடியும். ஆனால், வெளிநாட்டு கடன்களை நமது தினசரி பொருளாதாரம் சார்ந்திருக்கக் கூடாது,’’ என அவர் தெரிவித்தார். கட்டாய சேமிப்பு, முதலீடு வாய்ப்புகளுக்கான அழைப்பாக இது கருதப்பட்டது.

சர்தார் பட்டேலின் அணுகுமுறை நடைமுறைக்கு ஏற்ற, சமன்பாடான, சுதந்திரமானதாகும். பொருளாதாரம் அவரைப் பொறுத்தவரை தீவிர அரசியல் அறிவியல் ஆகும். குறுகிய வழிமுறைகள், தற்காலிக நலன் சார்ந்த தன்னிச்சையான கொள்கைகள் அல்லது செயற்கையான விலை குறைப்பு அல்லது முதலீட்டுக்கான ஊக்குவிப்பு ஆகியவை அவருக்கு உடன்பாடானதல்ல. உற்பத்தி அதிகரிப்பு, தொழில், விவசாய வளர்ச்சி சார்ந்த வளம் உயர்வு ஆகிய உறுதியான அடிப்படையில் இந்திய பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.


பொறுப்புத்துறப்பு: ஆங்கில கட்டுரையாளர்: பூஜா மெஹ்ரா, தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். இக்கட்டுரையில் இடம் பெற்றவை அவரது சொந்தக்கருத்து ஆகும். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.