அமெரிக்காவில் 15 வயதில் இன்ஜினியர் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி சிறுவன்...

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 15 வயது சிறுவன் தனிஷ்க், மிக இளம் வயதில் பயோ மெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமெண்டோவில் 2003-ம் ஆண்டு பிறந்தவர் தனிஷ்க் ஆபிரகாம். இவரது தந்தை பிஜூ ஆபிரகாம் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கால்நடை மருத்துவரான அம்மா தஜி ஆபிரகாம், மகனுக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டார். தனிஷ்க்கு தியாரா தங்கம் ஆபிரகாம் என்ற சகோதரி உள்ளார். கேரள மாநிலம் திருவல்லாவை பூர்வீகமாக கொண்ட இத்தம்பதி, கலிபோர்னியாவில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

சிறுவயதில் இருந்தே தனிஷ்க்கு புத்தகம் படிப்பதுடன், அவற்றை திரும்பச் சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது போன்றவை தான் பெரும்பாலும் பொழுதுபோக்காகவே இருந்துள்ளது. அவரது இந்த ஆர்வம் தான் அவரைக் கல்வியில் அடுத்ததடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

பட உதவி: தி பெட்டர் இந்தியா
பட உதவி: தி பெட்டர் இந்தியா

அடிப்படையாக பள்ளிக் கல்வி பெறாமல் வீட்டில் இருந்தவாறு பாடம் பயின்ற தனிஷ்க், தனது ஏழாம் வயதில் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வில் ஆஜராகி வெற்றி பெற்றான். அமெரிக்காவில் இந்த தனிப்பெரும் சிறப்பிடத்தை பிடித்ததற்காக, தனிஷ்க்கிற்கு பாராட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா.

அதன் தொடர்ச்சியாக கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் ரிவர் காலேஜில் சேர்ந்த தனிஷ்க், அங்கு சுமார் 1800 கல்லூரி மாணவர்களுடன் பயின்று, கடந்த 2015ம் ஆண்டு தனது 12-வது வயதில் பட்டதாரியானார். அந்தக் கல்லூரியின் வரலாற்றில் இத்தனை இளம்வயதில் ஒருவர் பட்டதாரியானது, அதுவே முதல்முறை ஆகும். பின்னர், டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயோ-மெடிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பை அவர் தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது, தனது 15வது வயதில் கல்வி பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக பொறியியல் படிப்பையும் வெற்றிகரமாக படித்து முடித்து சாதனை படைத்துள்ளார். பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க், அடுத்ததாக பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார்.

“கல்லூரி இறுதியாண்டு படிப்பின்போது தினமும் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே தனிஷ்க் தூங்கினான். `எதற்காக இவன் இப்படி இரவுமுழுவதும் படிக்கிறான்' என்று இவனது வகுப்பைச் சேர்ந்த 22 வயதுடைய நண்பர்கள் சில சமயங்கள் நிச்சயம் யோசித்திருப்பார்கள். ஆனால், இன்று அவன் தனது கடின உழைப்பு மூலம் சாதித்துக் காட்டியுள்ளான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். இது மிகுந்த உற்சாகம் அளித்து இருக்கிறது. இது எங்களுக்கு பெருமிதம் அளித்துள்ளது,’'

என தங்களது மகனின் சாதனை குறித்து ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளனர் தனிஷ்க்கின் பெற்றோர்.

தீக்காயம் அடைந்த நோயாளிகளின் உடலை தொடாமலேயே அவர்களின் இதயத்துடிப்பை அறிந்துகொள்ள உதவும் கருவியை தனிஷ்க் வடிவமைத்து உள்ளார். அடுத்ததாக புற்று நோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரி செய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய திட்டமிட்டுள்ளார் தனிஷ்க்.

“ஆராய்ச்சி படிப்பைத் தொடங்கினாலும், எனது வாழ்நாள் லட்சியம் அமெரிக்காவின் அதிபராக அமர்வதுதான்...” என்கிறார் தனிஷ்க்.

உலகின் அறிவாற்றல் மிக்கவர்கள் (ஐ.கியூ) இடம்பெற்றுள்ள ’மென்சா’ கிளப்பில் தனது நான்காம் வயதில் முதல் தனிஷ்க் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய மாணவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் ‘மழலை மேதை’ தனிஷ்க் ஆபிரகாமிற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தனது அடுத்தடுத்த கல்விச் சாதனைகளால் சர்வதேச ஊடகங்களில் செய்தியாகியுள்ளார் தனிஷ்க் ஆபிரகாம்.