இணைய வர்த்தகத்தை எளிமையாக்கும் ஷிப்டெஸ்க்!

0

ஆன்லைன் சில்லறை வாணிபம் வளர வளர, இணைய வர்த்தகத்திற்கான திட்டமுறைகளான லாஜிஸ்டிக்ஸும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. 2018ல் ஆன்லைன் சில்லறை வாணிபத்தின் மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாய் இருக்கும் என்றும், 2019ல் இந்திய இ-காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸின் மதிப்பு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருக்குமென்றும் கணிக்கப்படுகிறது.


இணைய வர்த்தகத்திற்கான திட்டங்களை, செயல்முறைகளை வகுக்கும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நித்தமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இ-காமர்ஸ் துறையின் முக்கிய அங்கமான லாஜிஸ்டிக்ஸை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது "ஷிப்டெஸ்க்" (Shipdesk) நிறுவனம்.  

2014 டிசம்பரில் லிப்ஜோ ஜோசப், பி.வி ஸ்ரீகிருஷ்ணா ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது ஷிப்டெஸ்க். கிளவுட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஷிப்டெஸ்க் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கான தளமாக விளங்குகிறது. தேவைகள், சேவைகள் ஆகியவற்றை தொழில்நுட்ப உதவியோடு மதிப்பிட்டு வர்த்தகம் மேற்கொள்ள உதவுகிறது ஷிப்டெஸ்க்.

“ஆன்லைன் வர்த்தகர் ஒருவர் எங்களோடு கைகோர்க்கும்போது, அவருக்கு வரும் ஆர்டர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் கிளவுட்டில் பதிவு செய்கிறோம். இதனால் அந்த வர்த்தகருக்கு உடனே தகவல் போய் சேருவதோடு அவர் விரைந்து பொருட்களை கப்பல் வழியாக அனுப்பவும் உதவியாக இருக்கும். கணிசமான நேரம் மிச்சப்படுவதால் வர்த்தகருக்கு அதிக லாபம் கிடைக்கும்” என்கிறார் லிப்ஜோ. ஒரு எளிய மென்பொருள் மூலம் சந்தையையும், இ-காமர்ஸ் தளங்களையும் இணைத்து, ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களையும் அறிந்துகொள்ள வழிவகை செய்திருக்கிறது ஷிப்டெஸ்க். இந்த வசதி மூலம் நிறுவனங்களுக்கு ஏராளமான பணமும், நேரமும் மிச்சமாகிறது. வாடிக்கையாளர்களுக்கும் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் பற்றிய விவரங்கள் அறிந்துகொள்ள எளிமையாய் இருக்கிறது. இருபக்கமும் லாபம் என்பதால் விற்பனையாளர்-வாடிக்கையாளர் உறவும் இங்கே பலப்படுகிறது.

இன்று 550க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஷிப்டெஸ்க்கோடு கைகோர்த்துள்ளன. மாதந்தோறும் 150 நிறுவனங்கள் புதிதாய் இணைகின்றன. ஜிங்கோஹப்(Zingohub), ப்ரீகார்ட்(Frekart), புட்லி(Budli.in), டெய்லிகேட்சர்(Dailycatcher), நிவிஸ்பேஷன்(Nivysfashion), கமல்ஸ்பொட்டிக்(Kamalsbotique), சாராஸ்பொட்டிக்(Zarasbotiques) என ஏராளமான நிறுவனங்கள் இவர்களோடு கூட்டு சேர்ந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் 40சதவீதம் வரை வளர்ச்சி காண்கிறது ஷிப்டெஸ்க்.

மொத்தமாய் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது ஷிப்டெஸ்க். விற்பனை, மார்க்கெட்டிங், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு ஆன்லைன் வர்த்தகர்கள் மேல் மட்டுமே கவனம் செலுத்தினாலும் எதிர்காலத்தில் சிறு, குறு வர்த்தகர்களோடு கைகோர்க்கும் எண்ணம் இருக்கிறது இந்த குழுவுக்கு.

இந்த தளம் இரண்டு வித வருமான கோட்பாடுகளை வைத்திருக்கிறது. ஒன்று கப்பல் வழியே நடக்கும் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வருமானம், மற்றொன்று சந்தாவின் வழியே வரும் வருமானம். “எங்களுக்கு இப்போது வரை ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்துள்ளது. ஒரு ஆண்டின் முடிவில் இது இன்னும் அதிகரிக்கும்” என்கிறார் லிப்ஜோ.

சவால்களும் அதைத் தாண்டிய வளர்ச்சியும்

குறைந்த செயல்திறன், சமநிலையற்ற சந்தை, திறமையின்மை ஆகியவையே லாஜிஸ்டிக்ஸில் உள்ள முக்கிய சவால்கள். சிறந்த வழிமுறைகளை தேர்ந்தெடுப்பது மூலமாகவும், மனித தலையீடுகளை குறைப்பது மூலமாகவும் இந்த சவால்களை சமாளிக்கலாம். “குறைகளை களைந்து, எங்கள் நிறுவனத்தின் மேலான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறோம்” என்கிறார் லிப்ஜோ.

இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆன்லைன் வர்த்தகர்கள் இருப்பதால் ஷிப்டெஸ்க் சீரான வளர்ச்சி பெறுவது உறுதி என்கிறார் லிப்ஜோ. மேலும், நாடு தாண்டிய அளவிலும் இந்த தளத்தை எடுத்துச் செல்லலாம். அதுபோக, எண்ணற்ற சிறு, குறு வியாபாரிகள் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களோடு கூட்டு சேர்வதன் மூலமாக மேலும் மேலும் வளரலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் லிப்ஜோ.

சந்தையும் போட்டியும்

சிங்கி அட்வைஸர்ஸ்(Singhi Advisors) என்னும் முதலீட்டு வங்கியின் கூற்றுப்படி, கடந்த 5 ஆண்டுகளாக லாஜிஸ்டிக்ஸ் துறை ஆண்டுக்கு பதினாறு சதவீதம் என்ற விதத்தில் வளர்ந்து வருகிறது. உலகளவில் 2013ல் லாஜிஸ்டிக்ஸ் துறையின் மொத்த மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இருந்தது. மொத்த உலக ஜி.டி.பியில் இது பத்து சதவீதமாகும்.

ஃபெடெக்ஸ்(Fedex), ப்ளூடார்ட்(Bluedart), டெல்லிவரி(Delhivery), இகாம் எக்ஸ்பிரஸ்(Ecom Express) இகார்ட்(eKart), கோஜவஸ்(Gojavas)போன்றவை லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயல்படும் முக்கிய நிறுவனங்களாகும்.

“இந்தத் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் இங்கே எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தங்களுக்கான தளத்தை தீர்மானித்து அதில் தீவிரமாய் உழைத்தால் வெற்றி நிச்சயம். சவால்களும் போட்டிகளும்தான் இந்தத் துறையை மேலும் நிலையானதாக மாற்றும்” என்கிறார் லிப்ஜோ. சமீபத்தில்தான் இந்த தளம் தங்களது செயலியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளா முகவரி: ShipDesk