தொழில்முறை பிளாக் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹர்ஷ் அகர்வாலின் பயணம்!

3

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பலவிதமான தொழில்கள் பற்றி நிறையக் கதைகள் உள்ளன. ஆனால் நாமெல்லாம் பிளாகுகள் குறித்து மறந்து விடுகிறோம். பிளாகுகள் கூட தொழில் நிறுவனங்களுக்கு இணையாக வருமானம் தரக் கூடியவைதான். எந்த ஒரு வர்த்தகமானாலும் அது இணையதளத்தில் இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. நிறைய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் கையகப்படுத்துவதற்குரிய சாதனமாக பிளாகுககளை பயன்படுத்துகின்றன. பிளாக் நடத்தியே வருமானம் சம்பாதிக்கும் அனேக தொழில் நிறுவனங்களும் உள்ளன.

ஹர்ஷ் அகர்வால் எனும் இந்திய பிளாகர் ஒருவரைச் சந்தித்தேன். ஆரம்பதில் அவர் பொழுது போக்காகத்தான் பிளாகை ஆரம்பித்தார். இப்போது அதே வேலையில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவரது பிளாகின் வருமான அறிக்கையை (http://www.shoutmeloud.com/blogging-income-report) வெளிப்படையாக தெரிவிக்கிறார். தேடுபொறி அமைவு (search engine optimization – SEO), சமூக வலைத்தளங்கள், ஒரு பிளாகை தொடங்கி நிர்வகிப்பது, இணைய வழியில் பணம் சம்பாதிப்பது ஆகியவை பற்றி இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் ஹர்ஷ் அகர்வால். அவரைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

யுவர் ஸ்டோரி: ஒரு பிளாகராக நீங்கள் எப்படி தொழிலைத் தொடங்கினீர்கள்?

ஹர்ஷ், 2008ல் சாரதா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தேன். அக்சென்ச்சரில் (Accenture) வேலை கிடைத்தது. வேலையில் சேர்வதற்காகக் காத்திருந்த நேரத்தில் குர்கானில் ஒரு கால் சென்டரில் சேர்ந்தேன். படிக்கிற காலத்தில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் தொழில் நுட்பத்தில் எனக்கு நிறைய ஆர்வம். கன்வெர்ஜிஸ் (Convergys) நிறுவனத்திற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பிளாக் ஆரம்பித்தேன். ஒரே மாதத்தில் அதற்கு வாசகர்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 2008 டிசம்பர் 1ல் எனது பிளாகை ஒரு வேர்ட்பிரஸ் ஆக மாற்றினேன். பிறகு எனது நண்பர்களிடமிருந்து பணம் மற்றும் கடன் அட்டைகளை கடன் வாங்கி ஒரு ஹோஸ்ட்டையும் டொமைனையும் வாங்கினேன். அது ஒரு அதிசயமான நாள். இப்படித்தான் ஷட்மீலவுட்(ShoutMeLoud) இணையத்தில் உலா வரத் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் பிளாக் மூலம் ஒருவரால் சம்பாதிக்க முடியும் என்பது பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை.

யுவர் ஸ்டோரி: கேட்கவே ஆர்வமாக இருக்கிறது. உங்கள் முதல் ஆன்லைன் வருமானத்தை எப்படி சம்பாதித்தீர்கள்?

ஹர்ஷ்: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு ஏமாற்று என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சம்பாதிப்பதற்கு முன்பு வரையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதெல்லாம் சும்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை கூகுள் வெப்மாஸ்டர் டூல் மூலம் தேடுபொறியமைவு தொடர்பான பிரச்சனை ஒன்றிற்கு தீர்வு சொன்னதற்காக ஒரு நபர் எனக்கு 10 டாலரை ஆன் லைன் மூலம் அனுப்பினார். அப்போதுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்று எனக்குத் தெரிந்தது. அப்போதுதான் பே பால் அக்கவுன்ட் (https://www.paypal.com/)ஒன்றை ஆரம்பித்தேன். எனது முதல் ஆன் லைன் சம்பாத்தியம் அதுதான். அதன்பிறகு எனது நண்பர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து, நான் ஆன் லைன் மூலம் பணம் சம்பதித்தது பற்றிச் சொன்னேன். அது எனக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். பின்னர் அட்சென்ஸ் மற்றும் அப்ரிளியேட் மார்க்கெட்டிங் (இணைந்து சந்தைப்படுத்தல்) ஆகியவற்றின் மூலம் நேரடியாகப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

யுவர் ஸ்டோரி: ஒரு பொழுது போக்கு பிளாகராக இருந்து தொழில் முறை பிளாகராக மாற வேண்டும் என எப்போது முடிவு செய்தீர்கள்?

ஹர்ஷ்: நான்கே மாதத்தில் பிளாக்-இன் திறன் குறித்துத் தெரிந்து கொண்டேன். பணம் கொட்ட ஆரம்பித்து விட்டது. மாதத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். கன்வெர்ஜிஸ்-(http://www.convergys.com/)இல் நான் சம்பாதித்ததைப் போன்று இரண்டு மடங்கு.

2009 ஜூன் மாதம் எனது பிளாகிங் தொழிலில் ஒரு திருப்பு முனை. அக்சென்ச்சரில் சேர்வதா அல்லது பிளாகிங் தொழிலைத் தொடர்வதா என முடிவு செய்ய வேண்டியிருந்தது. என் மனதைக் கேட்டேன். பிளாகிங்கைத் தேர்வு செய்தேன்.

இப்படித்தான் நான் ஒரு தொழில் முறை பிளாகர் ஆனேன்.

யுவர் ஸ்டோரி: உங்கள் டீம் பற்றிச் சொல்லுங்கள். அது எவ்வளவு பெரியது? 

ஹர்ஷ்: கடந்த காலத்தில் நான் நிறைய பகுதிநேர பணியாளர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அலுவலகத்தில் வேலை பார்ப்பதில் எப்போதும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வேலை செய்யலாம் என்ற சாத்தியம்தான் உண்மையான சுதந்திரம் என நான் கருதுகிறேன். வருங்காலத்தில் இந்தக் கலாச்சாரம் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரப் போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு முழு நேரப் பணியாளராக போகாததற்கு இது ஒரு காரணம். இப்போதைக்கு என்னிடம் ஒரே ஒரு முழு நேரப் பணியாளர்தான் இருக்கிறார். மற்ற அனைவருமே உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வேலை செய்யும் பகுதி நேர பணியாளர்கள் மற்றும் நம்பகமான உதவியாளர்கள்தான்.

யுவர் ஸ்டோரி: ஒரே ஒரு பிளாக்தான் நடத்துகிறீர்களா?

ஹர்ஷ்: இப்போதைக்கு எனது ஷவுட் ட்ரீம்ஸ்(ShoutDreams) பிராண்டுக்குக் கீழே, எட்டு பிளாகுகள் இயங்குகின்றன. அதில் ஷவுட்மீலவுட்(http://www.shoutmeloud.com/) தான் மிகவும் பிரபலம். அதனைத் தொடர்ந்து பிரபலமான பிளாகுகள் ஷட்மிடெக் (http://shoutmetech.com/) மற்றும் டபிள்யூபி ப்ரிசெட்அப்(http://wpfreesetup.com/).

யுவர் ஸ்டோரி: உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

ஹர்ஷ்: பிளாகிங் மூலம் வந்த வருமானத்தில் சமீபத்தில் குர்கானில் ஒரு பிளாட் வாங்கினேன். இந்த ஆண்டு(2015) இறுதியில் அதை மாற்றப் போகிறேன். அதன் பிறகு ஒரு அலுவலகத்தைத் திறந்து, என் சிந்தனையோடு ஒத்துப் போகும் திறமை மிக்க நபர்களை என்னோடு வேலை செய்ய பணிக்கு அமர்த்தலாம் என திட்டமிட்டிருக்கிறேன். எனது பிளாகிங் வர்த்தகத்தை வளர்க்க அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இதோடு, ஷர்மிலவுட்.காம் இணைய தளத்திற்கான கருத்துருக்களின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாகிங் குறித்துக் கற்பிக்கும் ஆன் லைன் வகுப்புக்கான திட்டம் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யுவர் ஸ்டோரி: பிளாகிங் தொடங்க விரும்பும் புதியவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

ஹர்ஷ்: இப்போதே தொடங்குங்கள்; பெரும்பாலானவர்கள் பிளாக் தொடங்குவதற்கு ஒரு சரியான வழிமுறைக்காகவும் நல்ல நேரத்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எனது அறிவுரை இதுதான்: இப்போதே தொடங்குங்கள். தொடங்கி விட்டால் போதும் பிறகு இயங்கிக் கொண்டே இருப்பீர்கள்.

கற்றுக் கொள்ளுங்கள், பயிற்சி எடுங்கள்: கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. தேடு பொறி அமைவு (SEO), சமூக வலைத்தள மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் குறித்து கற்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதமேனும் செலவு செய்ய வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் உங்களை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். நீங்கள் ஒரு வளமான எழுத்தாளராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நினைவில் வையுங்கள். ஒரே ஒரு விரலசைவில் தகவல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சகாப்தத்தின் உச்சியில் இருங்கள். உங்கள் துறையின் இப்போதைய தகவல் என்ன என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொண்டே இருப்பது அவசியம்.

ஹர்ஷ்சை டிவிட்டரில் தொடர்பு கொள்ள 

இணையதள முகவரி: Shoutmeloud

ஆக்கம்: பிரதீப் கோயல் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா