பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள அதன் சட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்!

0

பதினாறு வயது அஞ்சலி, பள்ளி செல்லும் வழியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ள முடியாமல், பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டாள். அந்தப் பாதையில் செல்லும்போது அவளைப் பார்த்து விசில் அடிப்பது, கண்டபடி கிண்டலடிப்பது என அவளுடைய தன்னம்பிக்கையை உடைத்துவிட்டனர். படிப்பின் முக்கியத்துவம் பற்றி அறிந்து வைத்திருந்தாலும், வீட்டிலிருந்த வேலைகளுக்குள்ளேயே மூழ்கிவிட்டாள் அஞ்சலி. தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகாத இடமாக அவர் உணர்ந்த என்.ஜி.ஓ.-விற்கு சென்று வருகின்றார்.

பொது இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கூட்டத்தில் தானும் ஒருவர் என்பதை உணர்ந்தார். இது தொடர்பான உரிமைகளைப் பற்றி தெரிந்து கொண்ட அவர், இதை தன்னுடைய சுற்றுப்புறத்திலும் பிராச்சாரம் செய்யத் தொடங்கினார். தற்போது மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ள அஞ்சலி எந்த வெளிப்புற சக்தியும் தனது படிப்பை தடுக்க இடம்கொடுப்பதில்லை.

இது பாதிக்கப்பட்ட ஒரேயொரு இளம்பெண்ணின் கதைதான். எங்களிடம் இன்னும் நிறைய கதைகள் உள்ளன.

ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், தமது வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதில் பாதிக்கும் மேலானோர் தமது பதினாறு வயதுக்குள் இத்தகைய சூழலில் சிக்குகின்றனர் என தெரியவந்துள்ளது. நிதர்சனம் என்னவென்றால், எண்பது சதவிகிதம் பேர், தமக்கு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்வதேயில்லை. இதைப் பற்றி தெரிவிக்காமல் இருக்க ஒரு பக்கம் பயம்தான் காரணம் என்றாலும், மறுபக்கம் தமது சமூக சூழலால் நாணி இதை அவமானம் எனக் கருதி போலீசாரிடம் தெரிவிப்பதில்லை. இவை அனைத்துக்கும் மேலாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய அறியாமை நிலவுவதும் முக்கியக் காரணம் எனலாம்.

டெல்லியில் நிகழ்ந்த கூட்டு பலாத்காரத்துக்குப் பின் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பலாத்காரத்துக்கு தண்டனை வழங்கும் ஐ.பி.சி. 375-ல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

1. பெண்ணின் விருப்பம் இன்றியோ;

2. அவளது அனுமதி இன்றியோ;

3. பயமுறுத்தி சம்மதிக்க வைத்தோ;

4. மணமுடித்த பெண்ணை கணவன் என ஏமாற்றி சம்மதிக்க வைத்தாலோ;

5. அவளுக்கு தெரியாமல் மயக்கம் தரும் வஸ்துவை கொடுத்து, அவளது சம்மதம் கேட்டாலோ; 

6.பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணின் சம்மதத்துடனோ/சம்மதமின்றியோ;

7. சம்மதத்தை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்வது உள்ளிட்டவை தண்டிக்கப்படலாம்.

மேலும், பெண்ணின் சம்மதத்தைப் பெறுவதன் அவசியம் பற்றிய பல தகவல்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்மதம் வாய்மொழியாகவோ, சைகையாகவோ இருக்கலாம். இந்த சட்டத் திருத்தங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். தருண் தேஜ்பால் வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சட்டம் தனக்கு ஆதரவாக இருப்பது உதவிகரமாக அமைந்தது. 

நம்மில் பலரும் பாலியல் துன்புறுத்தலாக கருதுவது இதன் உச்சகட்டமான பலாத்காரத்தையோ அல்லது பாலியல் ரீதியான தாக்குதல்களையோதான். நாம் தினந்தோறும் அனுபவிக்கும் சைகை மற்றும் வாய்மொழி சீண்டல்களை பாலியல் துன்புறுத்தல் என கருத முடியாத அளவுக்கு அவை நமக்கு பழக்கமாகிவிடுகின்றன. 

ஐ.பி.சி. 354 சட்டத்தின் கீழ் உள்ள ஏ,பி,சி,டி குற்றப் பிரிவுகள் ஆண் பெண்ணைத் தாக்குவது தொடர்பான குற்றங்களுக்கானவை. இதில், பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக தொடுவது, பாலியல் ரீதியான கோரிக்கைகள் வைப்பது, விருப்பமற்ற பெண்ணுக்கு ஆபாசப் படம் காண்பிப்பது, நேரடியாகவோ அல்லது இணையதளத்திலோ பின்தொடர்வது, அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது மற்றும் அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது போன்றவையும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ஆகவே, அனைவரும் தமது தனிப்பட்ட பாதுகாப்புக்காக சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. ஏனெனில், நமக்கான உரிமைகளைத் தெரிந்துகொள்வது நமது மாறிவரும் சமூக சூழலில் பாதிப்புக்குள்ளானவர்களைக் குற்றஞ்சாட்டும் நிலையிலிருந்து மாற்றலாம்.

இக்கட்டுரையை எழுதியவர் ‘சேஃப்சிட்டி’-ன் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான எல்சாமேரி டி’சில்வா. பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகபவர்களின் கிரவுட்மேப்பை தயாரித்துவருகின்றார். @elsamariedsilva என்ற கணக்கில் அவரை டுவிட்டரில் பின்தொடரலாம்.

தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெண்களுக்கு நேரிடும் பாலியல் கொடுமைகளை எதிர்கொள்ள உருவான 'துர்கா' 

நீங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுபவரா? பாலியல் தொல்லை தொடர்பான உங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!