’ஆன்லைன் மட்டுமே வர்த்தகத்தின் வழி இல்லை...’ - Shopclues இணை நிறுவனர் சஞ்சய் சேத்தி

0

'ஷாப்க்ளூஸ்’ Shopclues, மிக பிரபலமான ஒரு தளம். இது இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களை குறிவைத்து வெற்றிகரமாக தொழில் புரிந்து வருகின்றது. மற்ற இ-காமர்ஸ் தளங்கள் நுழையமுடியாத இடங்களில் எல்லாம் இது சென்று விற்பனையில் வெற்றிகரமாக திகழ்ந்து, நாட்டின் யூனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளது. 

“எங்கள் தளத்தில் பல லட்சம் வியாபாரிகளை அனுமதிக்கிறோம். இதன்மூலம் பல லட்சம் பேர் எங்களின் தளம் மூலம் இந்த பொருட்களை வாங்குகின்றனர்,” 

என்று ஷாப்க்ளூஸ் சி இஒ மற்றும் இணை நிறுவனர் சஞ்சய் சேத்தி கூறினார். யுவர்ஸ்டோரியின் மொபைல் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது சஞ்சய் இதை தெரிவித்தார். அவர் இணைய வர்த்தகத்தில் உள்ள எல்லா சிக்கல்கள் மற்றும் அது சம்மந்தமான தொழில்முனைவோரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

பங்கேற்பாளர்களில் ஒருவர், தொடர்ந்து அமெரிக்காவை பார்த்து இந்தியா காப்பி அடித்து செய்யும் தொழில் மாடல்கள் பற்றி கேள்வி எழுப்பினார். இந்தியா எவ்வாறு தனித்து தொழிலில் விளங்கமுடியும் என்றும் கேட்டார்.

“நாம் நமக்கு ஒன்று நன்றாக தெரியும் என்று நினைத்து அதில் இறங்கும்போது, அதில் என்ன தவறு செய்வோம் என்று யூகிக்கிறோம். கடந்த காலத்தில் ஒருவர் அதே விஷயத்தில் தவறை செய்திருந்தனால் நாமும் அதையே செய்வோம் என்பதில்லை,” என்றார் சஞ்சய்

மேலும் விளக்கிய அவர், ஒவ்வொரு சந்தையும் மாறுபட்டவை, ஒவ்வொரு தொழிலும் வெவ்வேறாக வளர்ச்சி அடையும் என்றார். ஒரே தொழில் திட்டத்தை நாடு முழுதும் கொண்டு அமல்படுத்துவது சாத்தியமற்றது. அதன் வாயிலாகவே புதிய தொழில் ஐடியாக்கள் உருவாகும் என்றார். ஷாப்க்ளூஸ் சந்தையில் நுழைந்த போது, அது இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களை குறிவைத்தது. இதுவே எங்களின் தனித்துவமான இணைய வர்த்தக மாதிரி என்றார். 

தொழில் தொடங்க முதலீடு பற்றி கேட்டதற்கு, கடந்த சில ஆண்டுகளாக இதில் பல மாற்றங்கள் வந்துள்ளதாக சஞ்சய் கூறினார். பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே புதிய பிசினசை தொடங்கமுடியும் என்றிருந்த காலம் மலையேறி விட்டது. புதுயுக தொழில்முனைவோர் இன்று எல்லாவற்றையும் மாற்றிவிட்டனர். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெரிய தொழில்களை அவர்கள் கட்டமைக்கின்றனர். 

ஆஃப்லைன் விற்பனை பற்றி கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தொடக்க நிறுவனங்கள் தங்களின் விற்பனை வழிகளை அதிகரித்து, நல்ல பலனை பெறவேண்டும். ஜிஎஸ்டி போன்ற புதிய பாலிசிகள், பிளாஸ்டிக் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், ஆன்லைன் கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் இணையம் மட்டுமே வர்த்தகத்தின் வழி இல்லை என்றார். 

“தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு சிறந்த இடத்தில் நிற்கிறது. டெஸ்க்டாப், லாப்டாப் தொழில்நுட்பத்தை கடந்து இன்று மொபைல் தொழில்நுட்பத்துக்கு தாவி வந்துள்ளது. அதனால் தொழில்முனைவோர் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் தங்களின் முதலீடை செய்து நாளை அதன் பலனை அடைய கேட்டுக்கொள்கிறேன்,” என்று அறிவுரைத்தார் சஞ்சய்