அக்-1 முதல் அமலுக்கு வரும் டிசிஎஸ்: இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்... 

0

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்ட விழாக்காலத்திற்கு தயாராகி வரும் நிலையில், டி.சி.எஸ் மற்றும் டி.டீ.எஸ் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் எனும் உத்தரவு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஜி.எஸ்.டி முறை அமலுக்கு வந்தது முதல் தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த அம்சம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு வந்து பலவிதமான மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையாக அமலுக்கு வந்துள்ளது. ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலில் வந்துள்ளது.

ஜி.எஸ்.டி முறையில் உள்ள குறைகளும், சிக்கல்களும் படிப்படியாக சரி செய்யப்பட்டு வந்தாலும், சில பிரிவுகளில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இ-காமர்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை சிக்கலாக்கும் டி.டீ.எஸ் மற்றும் டிசிஎஸ் முறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜி.எஸ்.டி படி, டாக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் ( டீடிஎஸ்) மற்றும் டாக்ஸ் கலெக்டட் அட் சோர்ஸ் (டிசிஎஸ்), ஆகியவை பொருந்தும். இந்த வரி பிடித்தம் மற்றும் வரி கழிவு ஆகியவை இணையம் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யும் மேடைகளான இ-காமர்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். எனினும், இதன் செயலாக்கம் இதுவரை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு பிரிவு அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் படி, மத்திய மற்றும் மாநில அரசு ஜிஎஸ்டி கீழ் ஒரு சதவீதம் டிசிஎஸ் வசூலிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகம் எனில், அதற்கும் ஒரு சதவீத வரி பொருந்தும்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் வெண்டர்களுக்கு பணம் செலுத்தும் போது இந்த தொகையை பிடித்தம் செய்து செலுத்த வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இ-காமர்ஸ் துறை ஏற்கனவே பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இந்த நெறிமுறை மேலும் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. இதற்கு காரணம், இ-காமர்ஸ் நிறுவனங்கள் டிசிஎஸ் வரி செலுத்த அந்த அந்த மாநிலங்களிலும் பதிவு செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என கருதப்படுவது தான்.

தற்போது முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை டிசிஎஸ் பிடித்தம் செய்யும் போது சம்பந்தப்பட்ட சப்ளையர் அதன் மீதான கழிவை கோர வேண்டும் எனில் அவரது மாநிலத்தில் இ-காமர்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது இது தொடர்பாக தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வரி பிடித்தம் செய்வதற்காக இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்ய வேண்டிய நிலை இருக்கக் கூடாது என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்திய இண்டெர்நெர்ட் மற்றும் மொபைல் சங்கம், டிசிஎஸ் அம்சம் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீதான தேவையில்லாத சுமையாக அமையும் என தெரிவித்துள்ளது. ஐடி சட்டம் 2000 படி, இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான தொழில்நுட்ப இடைமுகமாக செயல்படுகின்றனவேத்தவிர அவை சில்லறை விற்பனையில் ஈடுபடவில்லை என்பதால் டிசிஎஸ் பொருந்தாது என சங்கம் தெரிவித்துள்ளது.

விற்பனையாளர்கள் மேற்கொள்ளும் வர்த்தகத்திற்காக தொழில்நுட்ப இடைமுக நிறுவனங்களை வரி பிடித்தம் செய்யக்கூறுவது, இவை வழங்கும் இடைப்பட்ட சேவைக்கு பொருத்தம் இல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.