தொழில்முனைவோர் கடன் பெறும் முறையை எளிதாக்கும் 'குயிக்ருபீ.காம்'

சிறுதொழில் மற்றும் தொழில் முனைவோர் கடன் தேவையை எளிதாக்கும் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள்

46

தொழில்முனை ஆர்வம், அதே நேரத்தில் தங்களின் அனுபவத்தை கொண்டு தொழில்முனைதலில் இருக்கும் சவால்களை களையும் விருப்பம்; இதுவே குயிக்ருபீ.காம் (Quikrupee.com) தோன்ற காரணம்.

ஆண்கள் அதிகமிருக்கும் ஸ்டார்ட்அப் உலகில் பெண்களை கூட்டு நிறுவனர்களாக காண்பது அரிது. அதனாலோ என்னவோ குயிக்ருபீ.காமின் நிறுவனர்களின் ஒருவரான ஜோத்சனா வாசுதேவனை முன்னிலை படுத்தவே விரும்புகிறார் ஹெச் டீ ஷெரிப். இவர் குயிக்ருபீ.காம் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் மற்றும் ஜோத்சனாவின் நீண்ட கால நண்பர்.

லட்சியப் பெண்மணி ஜோத்சனா

ஜோத்சனாவை சந்திக்கும் எவரும் அவரின் புத்துணர்ச்சியும், சிரித்த முகத்தையும் கவனிக்காமல் இருக்க முடியாது. "நான் மிகுந்த லட்சிய நோக்குடையவள்" என்கிறார்.

1993 ஆம் வருடம் எல் ஐ சி நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கினார் ஜோத்சனா. பின்னர் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், ICWA படிப்பையும் கணினியில் முதுகலை பட்டமும் (MCA ) பெற்றுள்ளார். மூன்று முறை பதவி உயர்வை பெற்ற அவருக்கு, அத்துடன் தொலை தூர இடத்தில் பணி புரிய வேண்டிய சூழலை ஏற்க முடியவில்லை. 2002 ஆம் ஆண்டு தற்பொழுது ஆக்சிஸ் பாங்க் என்றழைக்கப்படும் வங்கியில் சிறுதொழில் சேவை வழங்கும் பிரிவில் ஏழு வருடம் பணி புரிந்தார். முன்னேற்றம் அதிகமில்லாத சூழலில் கோட்டக் வங்கியில் ஒரு வருடமும் பின்னர் வேறு துறையில் பணி புரியும் விருப்பத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கியில் பெரிய நிறுவனங்களை கையாளும் பிரிவிலும் இருந்துள்ளார் ஜோத்சனா. அவரின் வங்கி வாழ்க்கை எஸ் பேங்க் நிறுவனத்துடன் முடிந்தது. அங்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொறுப்பில் மூன்று வருடம் பணி புரிந்தார்.

வங்கி வேலையை விடுத்து டிஜிட்டல் துறையின் பக்கம் தன் பார்வையை செலுத்தினார் ஜோத்சனா. ஐந்து மாதங்கள் பாங்க்பஜார் என்ற ஆன்லைன் நிறுவனத்தில் பணி புரிந்தார்.

பல்லாண்டு கால வங்கி அனுபவத்தில் சிறுதொழில் நிறுவனர்கள் மற்றும் தொழில்முனைவர்கள் வங்கிக்கடன் பெற படும் இன்னல்களை அவர் நன்கு அறிந்திருந்தார். டிஜிட்டல் ஆர்வமும் தன் அனுபவத்தையும் கலந்து இந்த வேறுபாடுகளை களைய எண்ணம் தோன்றியது.

"ஷெரிப், ஜோத்சனாவின் இருபது வருட கால நண்பர். "நாங்கள் இருவரும் ஆக்சிஸ் வங்கியில் ஒன்றாக பணி புரிந்துள்ளோம். என்னுடைய இந்த யோசனையை ஷெரிப்புடன் பகிர்ந்து கொண்டேன். அவரும் வங்கியின் சூழலை அறிந்திருந்ததால் இலகுவாக இருந்தது." என்கிறார் ஜோத்சனா.

ஷெரிப் சில்லறை வங்கி சேவையில் பத்து வருட அனுபவம் பெற்றவர். வங்கி பணியை அடுத்து ஐந்து வருட காலம் சில தொழில்முனை நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

"வங்கியின் வழிமுறைகள் மற்றும் தொழில்முனைவர்களின் சூழ்நிலையும் நன்றாக அறிந்திருந்த காரணத்தால், எங்களின் இந்த முயற்சியின் மூலமாக இதில் இருக்கும் வேறுபாடுகளை எளிதாக நிவர்த்தி செய்ய முடியும் என்றே எண்ணினோம். அக்டோபர் மாதம் 2014 ஆம் ஆண்டு தீவிரமாக செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தோம். இருவரும் இணைந்து 25.5 லட்சம் ரூபாய் சொந்த முதலீட்டில் இந்நிறுவனத்தை இந்த வருடம் மே மாதம் தொடங்கி தொழில்முனைவர்கள் ஆகிவிட்டோம்" என்று குயிக்ருபீ ஆரம்பித்த பயணத்தை பகிர்கிறார் ஷெரிப்.

குயிக்ருபீ .காம் செயல்பாடு

புதிதாக தொழில்முனைபவர்களுக்கு வங்கி வலியுறுத்தும் கோட்பாடுகளை பூர்த்தி செய்வது கடினமாக அமையலாம். உதாரணமாக அவர்களின் கடன் செலுத்திய வரலாறு. இந்த சில செயல்முறை கடினங்கள் நம்பிக்கைக்குரிய தொழில் முனைவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். இதைத் தவிர சிறு தொழில் நிறுவனங்கள் நடத்தும் பெரும்பாலான தொழில்முனைவர்களுக்கு வங்கியில் கடன் பெறும் செயல் முறை, வங்கியின் தொழில் சேவை கடன்கள் பற்றிய புரிதல் இருக்காது.

இவர்கள் பெரும்பாலும் தனி நபர் ஆலோசகர்களையே நாடுவர். இது பெரும்பாலும் அவர்களுக்கு நன்மையை பயக்காது. உதாரணமாக, கடன் பெரும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் நம்முடைய விண்ணப்பத்தை சமர்பிக்கும் பொழுது, சிபில் போன்ற சரிபார்ப்பு நடைமுறையில் இருக்கும் போது, இந்த பல்முனை முயற்சி அவர்களுக்கு சாதகமாக அமையாது. இது அவர்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற சிறு சிறு நுணுங்கள் அறிந்திருத்தல்அவசியம். 

இது ஒரு புறமிருக்க, வங்கிகள் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆமோதிக்கும் நேரமும் மிக அதிகம். சிறுதொழில் மற்றும் தொழில்முனைவோரின் தேவை உடனடி பணம் என்று இருக்கும் பொழுது இத்தகைய தாமதங்கள் அவர்களின் வர்த்தக போக்கையே மாற்றி அமைக்கும் சூழலையும் உருவாக்கலாம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்தால் அதற்கான காரணத்தை பெரும்பாலும் கூற மாட்டார்கள். எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்தால் தான் அதனை அடுத்த முறை சரி செய்ய இயலும். 

இத்தகைய சவால்களை எளிதாக எதிர்கொள்ள எங்களின் இணையதளம் உதவுகிறது.

1. கடன் தேவையிருப்பின் எங்கள் தளத்தில் அதற்கான தகுதி பற்றி முதலில் அறிந்து கொள்ளலாம்.

2. தேவை மற்றும் தகுதிக்கேற்ப எந்தெந்த வங்கிகள் ஏற்றவை என்றறிந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

3. உங்களின் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி கொள்ளலாம். இது நேரத்தை வெகுவாக சேமிக்க உதவும்.

குயிக்ருபீ.காம், கடன் பெறுபவர்களிடம் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. இது கடன் பெறுவோர்களுக்கு பெரும் நன்மை; இல்லையேல் தனிநபர் ஆலோசனையாலர்களை நாடும் பொழுது அவர்களுக்கு கடன் தொகைக்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை தர வேண்டியிருக்கும்.

அதிகரிக்கும் கடன் தேவை

இந்தியாவில் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து மில்லியன் சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளதாக IFC சர்வே கூறுகிறது, இதில் எழுபத்தைந்து சதவிகித நிறுவனங்கள் கடன் பெறத் தகுதியுள்ளதாக இருந்தாலும் வெறும் முப்பத்தைந்து சதவிகித சிறு தொழில் நிறுவனங்களே வங்கி அமைப்பில் உள்ளன. இதன் படி பார்த்தல், சுமார் 2.94 ட்ரில்லியன் இடைவெளி பூர்த்திசெய்யப் படாமல் இருக்கிறது.

சந்திக்கும் சவால்கள்

"சிறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் இன்னும் ஆன்லைன் வசதிக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர்களிடம் எங்கள் சேவையை கொண்டு செல்வது கடினமாக உள்ளது" என்கிறார் ஷெரிப்.

கடன் கொடுப்பதில் உள்ள ஆபத்து காரணிகள் மற்றும் தொழில் முனைவராக ஆன பின் உள்ள நெருக்கடிகளை பற்றி ஜோத்சனாவிடம் கேட்டால், புன்முறுவலுடன் பதில் வருகிறது "ஆபத்து எதில் தான் இல்லை, நிறுவனத்தில் பணி புரிந்தாலும் நெருக்கடிகள் இருக்கத் தான் செய்யும். நிச்சயமற்ற தருணங்களை கொண்டதே வாழ்க்கை, அது தான் வாழ்கையின் சுவாரஸ்யமும் கூட". வங்கிப் பணி, சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் செயல்முறைகள் மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தியது. சுதந்திரமாக செயல்படக் கூடிய இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

உந்திச் செலுத்தும் சக்தி

"டிஜிட்டல் பயன்பாடு செல்லும் வேகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதுவே எங்களின் வளர்ச்சிக்கான பாதையை செழிப்பாக்கி கொள்ள உந்துகிறது" என்கிறார் ஜோத்சனா.

"எங்களின் இணையத்தளம் செப்டம்பர் மாதத்தில் தான் முழுவதுமாக செயல்பட ஆரம்பித்தது. தொடங்கி ஐந்து நாட்களுக்குள் வந்த முதல் கடன் பெறுதலுக்கான விசாரணை தந்த மகிழிச்சியை விவரிக்கவே முடியாது, இது போல சின்னச்சின்ன மைல்கல் எங்களை மேலும் நம்பிக்கையோடு முன்னேற வைக்கிறது" என்கிறார் ஷெரிப்.

சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழல், பிறரின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுதே பெறும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள் இருவரும்.

எதிர்கால திட்டம்

எதிர்கால வளர்ச்சித் திட்டத்தை பற்றி கேட்டால் மிகுந்த உற்சாகத்தை காண முடிகிறது இவர்களிடம். நிறைய யோசனைகள் தினமும் உதித்துக் கொண்டு தான் இருக்கிறது. வளர்ச்சிப் பாதை தெளிவாக தெரிகிறது. அடுத்த மூன்று வருடத்திற்குள் குயிக்ரூபி.காம் ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவையையும் அளிக்கும் நிதி போர்டலாக உருவாக்கும் இலக்கை வைத்துள்ளோம். இது தவிர நிரந்தர கணக்கு எண்ணை ஒருங்கிணைக்க NSDL நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யும் எண்ணத்திலும் இருக்கிறோம்.

குயிக்ரூபி.காம் சிறுதொழில் கடன் சேவையை ஆன்லைனில் வழங்கும் முன்னோடி நிறுவனமாக தற்பொழுது திகழ்கிறது. மூன்று பேருடன் தொடங்கிய இந்நிறுவனம் தற்போது 9 பேர் கொண்ட குழுவுடன் செயல்படுகிறது. குறுகிய நாட்களிலேயே நானூறு பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த இணையதளம், நூற்றிபத்து விண்ணப்பங்களையும் பெற்றுள்ளது. இதில் எண்பத்தைந்து விண்ணப்பங்கள் இறுதிக் கட்ட அனுமதியில் உள்ளன. சென்னை தவிர ஐதராபாத், பூனே, மும்பை, கொல்கத்தா மற்றும் கேரளாவிலிருந்து இவர்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவையெல்லாம் சாத்தியப்படுத்த நல்ல முதலீட்டாளர்களையும் எதிர்நோக்கி உள்ளனர் இவர்கள்.

இணையதள முகவரி QuikRupee.com