இந்தியாவின் இளம் ட்ரோன் டெவலப்பர்!

1

'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு சாதனை இடம்பெற்றுள்ளது. லூதியானாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' நாட்டின் இளம் ட்ரோன் டெவலப்பர்' என்கிற சாதனையை படைத்துள்ளார். ஆர்யமன் வர்மா 70 அடி உயரத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் விமானம் (Quadcopter) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சாட் பால் மிட்டல் பள்ளி மாணவரான ஆர்யமன் இதற்கு முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளார். தொழில்நுட்பத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் இந்த ட்ரோனை உருவாக்க ஒரு மாதம் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். நாட்டிற்கு பயனுள்ள வகையில் ஒரு ரோபோவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கும் இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்யமன் அதிலும் இடம்பெறுவார் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் ஆர்யமனின் குடும்பத்தினர் ’ஏஷியன் ஏஜ்’ உடனான உரையாடலில் தெரிவித்தனர். ’ட்ரிப்யூன்’ உடனான நேர்காணலில் ஆர்யமன் தெரிவிக்கும்போது,

"ட்ரோனை உருவாக்க எனக்கு ஒரு மாதம் ஆனது. என் அனைத்து நடவடிக்கைகளிலும் என் அப்பா எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் எனது படைப்பிற்கு பண வெகுமதி அளிப்பார். காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவி ஒன்றை உருவாக்கி வருகிறேன். இது காற்று சுவாசிக்கத் தக்கதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும். ப்ரோக்ராமிங் தவிர மற்றவை தயார்நிலையில் உள்ளது. நீண்ட கால அடிப்படையில் நாட்டிற்கு உதவக்கூடிய ரோபோக்களை உருவாக்க விரும்புகிறேன்.

ஆர்யமன் ஒன்பது வயதில் ஒரு ரோபோவை உருவாக்கினார். இது ரோபோடிக் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்தது என்று ’நியூஸ்பைட்ஸ்’ வலைதளப் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவரது சமீபத்திய கண்டுபிடிப்பு சென்சார்கள், கேமராக்கள், ஜிபிஎஸ் கருவி ஆகிய வசதிகளைக் கொண்டது. இந்த சாதனைக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சர்வதேச ரோபோடிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA