251 ரூபாய் ஸ்மார்ட்போன்; மலிவான போனா? மார்கெட்டிங் வித்தையா?

0

251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என்பது நிச்சயம் வாயை பிளக்க வைக்கும் தலைப்புசெய்தி தான். உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்பட்ட இந்த போன் புருவங்களை உயர்த்தியுள்ளதோடு, எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. பரபரப்புக்கு மத்தியில் சந்தேகமும் எழாமல் இல்லை. கேள்விகளுக்கு மேல் கேள்விகள் எழுந்தாலும் தெளிவான பதில்கள் இல்லை.

புதிய நிறுவனம் ஒன்று சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சமூக வலைப்பின்னல் தளமான வேர்ல்டுபிலோட் 6 மில்லியன் பயனாளிகளை கொண்டிருப்பதாகவும், 300 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. அது ஒரே ஒரு நிலையான பக்கத்தை மட்டும் கொண்டிருந்தது.

ஃப்ரீடம் 215 அதன் இணையதளம் முடங்குவதற்கு முன்பான 30,000 ஆர்டர்களை பெற்றது. ஆர்வத்துடன் குவிந்த பயனாளிகள் எணிக்கைக்கு அதன் சர்வர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ப்ரீடம் 251 போனை அனுப்பி வைக்க 40 ரூபாய் கட்டணத்துடன் சேர்ந்து அதன் விலை 291 ஆக இருக்கிறது. ஆக நிறுவனம் ஆரம்ப வேகத்திலேயே ரூ.8,730,000 பெற்றது.

இதனிடையே சமூக ஊடங்களிலும் இது பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில:

1. ஆப்பிளின் நகல்; முகப்பு பக்கம், ஐகான்கள் என எல்லாமே ஆப்பிளின் ஐபோனில் இருந்து உருவப்பட்டது போல இருக்கிறது. இது பற்றி கேட்கப்பட்ட போது ரிங்கிங்பெல்ஸ் தொழில்நுட்ப பிரிவித்தலைவர் விகாஸ் சர்மா, “ஆப்பிள் தனது வடிவமைப்பிற்கு காப்புரிமை பெறவில்லை என்பதால் ஆப்பிளின் ஐகான்களை பயன்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் அளித்திருக்கிறார். ஆப்பிள் காப்புரிமை பெற்றிருக்கிறது எனும் விஷயத்தை பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

2. இணையதளம்; இணையதளத்தில் தொடர்பு முகவரி இல்லை. அதற்கு பதிலாக தொடர்பு படிவும் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதள வடிவமைப்பிலும் விஷயம் இல்லை. பின்னணி விவரம் தேடினால் முகவரி பிப்ரவரி 10 ம் தேதி தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என அறிய முடிகிறது.

3. மறுவிற்பனையா? இந்த போன் ஆட்காம் பிராண்டை கொண்டுள்ளது. இது மறைக்கப்பட்டு ப்ரீடம் 251 என எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆட்காம் நிறுவனமே ரிங்கிங்பெல்சிற்காக விற்பனை செய்யும் அல்லது தயாரிக்கவில்லை என மறுக்கிறது.,

4.டெலிவரி; ஆர்டர் செய்வதவர்களுக்கு போன் 4 மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். (இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது). அதோடு ரிங்கிங்பெல்ஸ் விரும்பியிருந்தால் பிளிப்கார்ட் அல்லது அமேசான் போன்றவற்றுடன் முன்பதிவிற்கு ஒப்பந்தம் செய்திருக்கலாம். இத்தகைய எண்ணிக்கையை அவற்றால் கையாள முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இல்லை என்றால் இண்டிகோகோ அல்லது கெட்டோ போன்ற கிரவுட்பண்டிங் தளத்தில் கோரிக்கை வைத்து போனை உருவாக்க நிதி கோரியிருக்கலாம். ஆனால் இவ்வாறும் செய்யவில்லை.

5. நிதி எங்கே? செய்தியாளர் சந்திப்பில் ரிங்கில்பெல்ஸ் நிறுவனர்கள் தங்கள் சொந்த பணத்தை போடவில்லை என்றும் எல்லாமே சமபங்கு மூலதனம் மற்றும் கடன் வழி நிதி என்றனர்.

6. விலை மாயம்; தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இந்த அளவு விலையில் ஸ்மார்ட்போனை தயாரிக்க வழியில்லை. மானியம் பெற்றால் கூடா ரூ.3800 க்கு தான் தயாரிக்க முடியும். ஆனால் நிறுவனம் அரசு அல்லது வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் மானியம் பெறவில்லை என தெரிவித்துள்ளது. விலை ரகசியம் புரியாத புதிர் தான்.

7. சேவை மையங்கள்; இணையதளத்தில் 650 சேவை மையங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சேவை மையம் கூட எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

8. பாதி போன்; நிறுவன இணையதளத்தில் ரூ.125 விலையில் பாதி போனை கூட ஆர்டர் செய்யலாம் தெரியுமா? ஒரு பயனாளி இந்த தகவலை நொந்துபோய் பகிர்ந்து கொண்டுள்ளார்.

9. புக்கிங் குழப்பம்; போனை புக்கிங் செய்வதிலும் குழப்பம் உள்ளது. இணையதளத்தில் புக்கிங் முடிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. எனினும் சைபர்கேப் உரிமையாளர்கள் பணம் வாங்கி கொண்டு ரசீது கொடுப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இது போன்ற இன்னும் பல சந்தேகங்களுக்கு விரைவில் விடை தெரிகிறதா என பொருத்திருந்து பார்க்கலாம்.

ஆக்கம்: ஆதித்ய பூஷன் திவேதி | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்