ஏடிஎம், வங்கிகள் முன் வரிசையில் நின்ற மக்களுக்கு இலவச டீ கொடுத்து ஆச்சர்யப்படுத்திய தொழில்முனைவோர்கள்!

0

’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு சூழ்நிலையை தங்களுக்கு தகுந்த வாக்கிலும், அதேசமயம் பிறருக்கு நலம் பயக்கும் வகையிலும் ஆக்கிக்கொள்வது ஒரு தொழில்முனைவரின் சாமர்த்தியம் ஆகும். அந்த வழியில் பிறரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி மகிழவைக்கும் நிறுவனமான 'தி6.இன்' மற்றும் சுவையான பலவகை தேநீர் வகைகளை தயாரிக்கும் ‘ChaiKing' மையமும் இணைந்து, ரூபாய் நோட்டை மாற்ற வங்கிகள், ஏடிஎம்’கள் முன் நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கும் மக்களுக்கு இலவசமாக டீ அளித்து ஆச்சர்யத்தில் திளைக்க வைத்தனர். 

பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என்று பாரபட்சமின்றி பலமணி நேரம் வங்கிகள் முன் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க இடத்தை விட்டு நகர்ந்து சென்றால் இடம் போய்விடும் என்பதால், எத்தனை மணிநேரம் ஆனாலும் வரிசையில் நிற்கவேண்டிய சூழலில் தற்போது அனைவரும் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகவும் அதே சமயம், மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்திக் கொள்ள நினைத்த 'தி6.இன்' நிறுவனர் சக்திவேல் மற்றும் ‘ChaiKing' நிறுவனர் சுரேஷ், இருவரும் இணைந்து மக்களிடையே ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்த முடிவெடுத்தனர். 

வரிசையில் நின்று கொண்டிருக்கும் மக்களிடம், தி6.இன் குழுவினர் சென்று எத்தனை நேரமாக அவர்கள் அந்த வரிசையில் காத்திருக்கின்றனர் என்று கேட்டுவிட்டு, இப்போது சுடச்சுட டீ கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கேட்க அவர்களும். ‘நல்லாத்தான் இருக்கும்...’ என்று சொல்ல, உடனடியாக டீ வழங்கி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். "பணம் கிடைக்கலானாலும் டீ கெடச்சுது சந்தோஷம் ! " என்று அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.  இதன்மூலம் மக்களுக்கு உதவியதோடு, தங்களின் ப்ராண்டையும் விளம்பரப்படுத்தி உள்ளனர் இந்த தொழில்முனைவர்கள்.