திவாலான நிலைமையிலும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி வாழும் சென்னை தம்பதி!

0

சந்தோஷம் எந்த நிலையில் இருக்கும் என்று என்னை யாராவது கற்பனை செய்துபார்த்துச் சொல்லச்சொன்னால் நான் திரவ நிலை என்றுதான் சொல்வேன். நம்முடைய சந்தோஷத்தை கற்பனையான கப்பிலோ, பாட்டிலிலோ அல்லது கிண்ணத்திலோ எடுத்து நம் பங்கை பருகுகிறோம் அல்லவா? வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் அவரவர் தனித்திறனுடன் கையாளும் விதத்திற்கும் அதிலிருந்து பெறும் அனுபவத்திற்கும் ஏற்ப நாம் சந்தோஷத்திற்கு வடிவம் கொடுப்போம். 

இந்த புதிரான நிலைதான் இப்போது உலகளவில் பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறியுள்ளது. சுய உதவி, ஆரோக்கியம் மற்றும் நேர்மறை உளவியல் போன்றவற்றை சூழ்ந்துள்ளது. சந்தோஷம் என்ற ஒன்றை ஒரு பொருள் போல சுய உதவி புத்தகங்களாக விற்கிறார்கள். நாடுகள் தங்களின் வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியை மையமாக வைத்துதான் அளவிடுகிறார்கள். பூட்டான் நாட்டின் அரசாட்சியில் GDP க்கு எதிராக GNH (Gross National Happiness) அளவிடுகிறார்கள்.

விஸ்வநாதன் (AVIS இவரது புனைப்பெயர்) குறித்து கேள்விப்பட்டேன். அவர் தன்னை மகிழ்ச்சியின் பொறுப்பாளர் என்றுதான் அடையாளப் படுத்திக்கொள்கிறார். இதைக்கேட்டு நான் சந்தேகப்பட்டேன். ஆனால் ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து முடிவு செய்யக்கூடாது என்று விரைவில் தெரிந்துகொண்டேன்.

வாணி அவரது வாழ்க்கைத்துணை மட்டுமல்ல அவரது பிஸினஸ் பார்ட்னரும் கூட. 1996 முதல் 6 ஆண்டுகள் அவர்கள் வெற்றிகரமாக நடத்தி வந்த தொழில் திவாலாகிவிட்டது. 5 கோடி ரூபாய் கடனை சுமந்தார்கள். எட்டு வருடங்களில் இந்த ஜோடி பல நெருக்கடிகளை சந்தித்தது. சட்ட ரீதியான பல துன்புறுத்தல்கள். குடும்பத்தில் பாரபட்சம். சமூகத்திலிருந்து கண்டனங்கள். இது போன்ற சூழலிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாக மகிழ்ச்சியாக இருக்க பழகிக்கொண்டனர்.

மகிழ்ச்சியாக இருப்பதுதான் நோக்கம்

அவர்கள் தங்களைக்குறித்து சொல்ல ஆரம்பிக்கையில் பொதுமக்களின் பார்வை குறித்து ஆரம்பித்தனர்.

“உடல்நலக் குறைவினால் போராடுபவர்களை பரிதாபத்துடன் நோக்கும் நம் சமூகம், அதற்கு எதிர்மறையாக, நிதி நெருக்கடியை சந்திப்பவர்களை கடுமையாக நடத்துக்கிறது,” என்கிறார் வாணி. 

AVIS எழுதிய “ஃபால் லைக் எ ரோஸ் பெட்டல்” எனும் புத்தகத்தில் பணம் இல்லாமல் எப்படி மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழலாம் என்பதற்கு அப்பாவின் குறிப்புகள்” என்று எழுதியுள்ளார்.

“பணத்தைக் காட்டிலும் நேர்மையான கொள்கைகள்தான் முக்கியம் என்று நாங்கள் அறிந்தோம். பயந்து ஓடுவதைவிட வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்டு எதையும் நேருக்குநேர் சந்திப்பது நல்லது.”

அப்படியானால் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நேரடி தொடர்பு இல்லையா? மகிழ்ச்சி என்பதன் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் நமது திடமான நம்பிக்கை என்னவென்றால் பணத்தால் மகிழ்ச்சியை வாங்கமுடியாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் அவசியம் தேவை. அப்படித்தானே? ஆனால் இல்லை என்கிறார் AVIS. மேலும்,

"மகிழ்ச்சியாக நாம் பல விஷயங்களை செய்யச்செய்ய மகிழ்ச்சியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும்."

இந்த கதை AVIS மற்றும் வாணி இருவரும் எப்படி இழப்பை சந்தித்தார்கள் என்றும் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்றும் எப்படி அதிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டார்கள் என்பதை விளக்குகிறது. மேலும் எப்படி திடநம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கை என்னும் கடலில் தொழில்முனையும் வேட்கையுடன் பெரும் சூராவளியை எதிர்த்து துணிந்து நீந்தத்தொடங்கினார்கள் என்றும் விளக்குகிறது. 

புயலுக்கு முன் அமைதி

இருவரும் சந்தித்துக்கொண்டபோது AVISன் வயது 19, வாணியின் வயது 20. 1996இல் சொந்த தொழில் தொடங்க AVIS பெங்களூருவிலிருந்து சென்னை வந்தார். “எங்கள் நிறுவனம் டோட்டல் ரெப்யூடேஷன் மேனேஜ்மெண்ட் சம்பந்தப்பட்டது. ஆறு வருடங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது. இது ஒரு புதிய முயற்சி. CEOக்களுடன் கலந்துரையாடல் நடத்துவோம். அவர்களின் நிறுவனத்தின் கொள்கைகள், நோக்கம் போன்றவற்றை பணியாளர்களுக்கு வொர்க் ஷாப் மூலம் எடுத்துரைப்போம். எங்களின் மற்றுமொரு சேவை வெளிப்புற தொடர்பு மற்றும் ப்ராண்டிங்.” என்கிறார் AVIS.

இவர்களது ஒரு ஆலோசனை நிறுவனம். இதை உலகளவில் செய்வதே இவர்களின் நோக்கம். இவர்களது முக்கிய க்ளையண்ட் ஹாங்காங்கை சேர்ந்தவர்கள். மொத்த வருவாயில் 60 சதவீதம் இந்த ஒரே க்ளையண்ட் மூலமாக கிடைத்தது.

2002ம் வருடம் இந்த குறிப்பிட்ட க்ளையண்ட்டின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க சென்றபோதுதான் நிலைமை மாறியது. “அவர்களின் தேவைக்கேற்ற சிறந்த சேவையை அளித்தபோதும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.“ என்று நினைவுகூர்ந்தார் AVIS. மீட்டிங்கில் AVISன் நிறுவனத்தை அவர்களே வாங்கிக் கொள்வதாகவும் ஹாங்காங்க் அலுவலகத்தில் அவருக்கு வேலை கொடுப்பதாகவும் விருப்பம் தெரிவித்தனர். “

அவர்கள் அப்படி ஒரு அநாகரிகமான விருப்பத்தை தெரிவிக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நான் அந்த வாய்ப்பு குறித்து யோசித்திருப்பேன். செர்விஸ் வேல்யூவிற்கே என் கம்பெனியை கேட்டார்கள். ஏன் அவ்வளவு குறைவாக மதிப்பிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு இந்திய நிறுவனத்திற்கு இதற்கு மேல் நீங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள்? என்றனர்.” AVIS கோபத்துடன் அவர்களின் வாய்ப்பை நிராகரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

“ஒரு சிறந்த செயலறிவு நிறைந்த தொழில்முனைவர் நிதிநிலைமை சரியில்லாதபோது பணியாட்களை குறைத்து செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். தொழில்முனைவில் அதீத பற்று கொண்டவரும் இதே போன்றுதான் முடிவெடுப்பார்.” 

என்கிறார் அவர். ஆனால் இவர்கள் அதற்கு எதிர்மறையாக முடிவெடுத்தனர். நிலைமையை சமாளித்து வருவாய் அதிகரிக்கும் வரை தொடர்ந்து போராடவேண்டும் என்று முடிவெடுத்தனர். நிதியை அதிகரிக்க கடன் வாங்கத் திட்டமிட்டனர்.

“இதுதான் எங்களது மிகப்பெரிய முதல் தவறு” என்று நடந்த சம்பவத்தை நினைத்து வருந்தினார் AVIS. “ஆனால் கம்ப்யூட்டரில் எக்ஸல் ஷீட்டில் உருவாக்கும் சிறந்த வணிக திட்டத்தைப்போல வாழ்க்கையை உருவாக்கமுடியாது என்று இப்போது புரிந்துகொண்டேன்.”

நிறுவனத்தை தகர்த்திடுங்கள்

இப்போது இது பணத்திற்கான விளையாட்டாக மாறியது என்கிறார் வாணி. ஆரம்பத்திலேயே க்ளையண்ட்ஸை சரியாக தேர்ந்தெடுத்திருந்தால் PR மற்றும் வெளிப்புற தொடர்புப் பணிகளை எதிர்பார்க்கும் க்ளையண்ட்ஸ் இப்போது கிடைத்திருப்பார்கள். “இதுவே பூதாகாரமானதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை.” என்று அவர்களின் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தை நினைவுகூர்ந்தார்.

2004ஆம் ஆண்டு புத்தாண்டின் போது அவர்கள் குடும்பத்துடன் கூர்க் சென்றிருந்தனர். அப்போது AVISக்கு திடீரென்று சென்னைக்கு திரும்பிச் செல்லவேண்டாம் என்று தோன்றியது. ஒரு சாதாரண PR நிறுவனமாக நாம் தாழ்ந்துவிடும் நிலைமையை எட்டிவிடுவோமோ என்ற பயம் முளைத்துவிட்டதாக அவரது மனைவியிடம் தெரிவித்தார்.

“உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் பிடிக்கவில்லையா தகர்த்துவிடுங்கள். இந்த வரிகளுக்கேற்ப என் நிறுவனத்தின் கலாச்சாரம் பிடிக்காத காரணத்தால் நானும் அதைத்தான் செய்தேன்” என்றார் AVIS. 

வீட்டிற்கு திரும்பியதும் அவரது நிறுவனத்திற்கான விரிவான செயல்திட்டத்தை தயார் செய்தார். “PR பணிகளை முற்றிலும் மறுக்க முடிவெடுத்தேன். அதற்குபதில் ரெப்யூடேஷன் மெனேஜ்மென்ட்டில் கவனம் செலுத்தலாம் என்று யோசித்தோம். மேலும் நிறைய பணியாட்கள் கொண்ட எங்கள் குழுவை கலைக்க முடிவெடுத்தோம்.” இந்த முடிவை எடுக்க மூன்று வருடங்கள் கால தாமதமானது.

இது குறித்து நாங்கள் மதிப்பிடும் போது எங்களிடம் 40 ஊழியர்கள், 6 அலுவலகங்கள், 38 வாடிக்கையாளர்கள் இருந்தனர். அந்த 38 வாடிக்கையாளர்களுடனும் PR சம்பந்தப்பட்ட பணிதான் நடந்துகொண்டிருந்தது. அப்படியானால் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தகர்க்கிறோம்.” என்றார் அவர். அதன் பின்விளைவுகளை அப்போது அவர்கள் அறியவில்லை. “ஏதோ ஒரு பாதை கண்முன் தோன்றும் என்று நம்பினோம்... “ என்றார். ஆனால் அந்த பாதையில் பல கன்னிவெடிகள் பரவியிருந்தது.

மகிழ்ச்சியின் உதாரணம்

இருவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். குற்ற உணர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் காணப்பட்டார் AVIS. சூழ்நிலையை நினைத்து வருந்தினார். நிறுவனத்தை தகர்த்திவிட்டாலும், பெங்களூருவில் ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இரண்டு அலுவலகங்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டார். பழைய ஊழியர்கள் PF மற்றும் போனஸ் தொகையில் ஒரு பகுதியை கொடுக்காத காரணத்தால் வேலைக்கு வரவில்லை. இதனால் புதிய ஊழியர்களை பணியிலமர்த்தினார். “கடன் வாங்கிக்கொண்டே இருந்தோம்” என்று தன் தவறுகளை நினைவுகூர்ந்தார். தனிப்பட்ட முறையில்தான் லோன் கிடைத்ததே ஒழிய கார்ப்பரேட் லோன் கொடுக்க வங்கிகள் முன்வரவில்லை. 

“ஒரு தொழில்முனைவர் எங்கிருந்து கடன் வாங்குகிறார்கள் என்பதை அவசியம் மதிப்பிடவேண்டும். எங்களை வழிநடத்த யாருமில்லை.” என்கிறார். 2006-ம் வருடம் பிறந்தபோது எங்களின் நிதி நிலைமை பூஜ்யம். “நாங்கள் கூர்கில் நடத்திய விவாதத்தின்போது எங்களது பழைய அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன். அப்படியானால் மகிழ்ச்சியின் அடிப்படையில் நாம் முடிவெடுக்கும்போது நாம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் பணிபுரிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் க்ளையண்ட்களுடன் நாம் ஏன் பகிர்ந்துகொள்ள கூடாது என்று யோசித்தோம்”. இந்த எண்ணத்தில் உதித்ததுதான் “ஹேப்பினெஸ் ஸ்ட்ராடெஜி.”

பணியிடத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும் நிறுவனமாக அவர்கள் மறுபடி அடையாளப்படுத்தத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாக மூன்று மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்தொகையளிக்க முன்வந்தனர். “புதிய ஸ்ட்ராடெஜி வெற்றிபெறத் தொடங்கியது” என்றார் அவர்.

விநோதமான கனவு

ஒரு வேடிக்கை நடந்தது. “2007-ம் வருடத்திற்குள் நுழையும்போது நாங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகை அதிகமாக இருந்தது. 2006-ல் நாங்கள் சம்பாதித்தது அனைத்தும் குடும்பத்தை நடந்துவதற்கே சரியாக இருந்தது. மீதமிருந்த தொகை ஒரு சில கடனை அடைக்கவும் சட்டரீதியான செலவுகளுக்கு உபயோகிக்கப்பட்டது.” 2006-ல் கையொப்பமிடப்பட்ட கான்ட்ராக்ட்ஸ் அனைத்தும் கேலண்டர் இயருக்கானது.

வங்கிகளைத்தாண்டி யாரையாவது தொடர்புகொண்டே தீரவேண்டும் என்ற நிலையில் இருந்ததாக குறிப்பிடுகிறார் AVIS. “இப்போது குடும்பத்தினரையும், நண்பர்களையும், மரபு சாரா நிதியாளர்களையும் அணுகினோம். 2007 முழுவதும் 365 நாளும் ஒருவரிடம் வாங்கி மற்றொருவரின் கடனை அடைத்துக்கொண்டிருந்தோம். அதே நேரம் பிஸினஸ் கொடுக்க சாத்தியமான 185 வாடிக்கையார்கள் கிடைத்தனர். ஆனால் யாரும் ஒப்பந்தத்தில் நுழையவில்லை.

“2007ம் வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதி எங்கள் வக்கீல் நண்பர் நாங்கள் திவாலாகிவிட்டோம் என்று தெரிவித்தபோது எங்கள் வயிற்றில் ஏதோ பிசைவது போல் உணர்ந்தோம். எங்களால் நம்பமுடியாத விசித்திரமான தருணம் அது”.

2008ம் ஆண்டு தொடங்கியபோது அவர்கள் கையிருப்பு 2000 ரூபாய். கடன் தொகை 5 கோடி ரூபாய். “என் மகன் பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்பிற்காக அயல்நாட்டிற்கு செல்ல விரும்பினான். என் மகளுக்கு 13 வயது. அவளுடைய எந்த விருப்பத்தையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை” என்றார் AVIS.

நம் அனைவருக்கும் தெரிந்ததுபோல பிரச்சனைகள் எப்போதும் தனியாக வராது. அடுத்தடுத்த பிரச்சனைகள் தொடரும். AVISன் உடல்எடை 20 கிலோ அதிகரித்தது, புகையிலை பழக்கதிற்கு அடிமையானார், சர்க்கரை நோய் வந்தது, இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. “எங்கள் மருத்துவ நண்பர் நான் 40 வயதை கடக்க மாட்டேன் என்று விளையாட்டாகச் சொன்னார்.” எல்லாவற்றிற்கும் மேல் அவருக்கு எதிராக சட்டரீதியான குற்றச்சாட்டுகள் பதிவாகின. கடன்கொடுத்தவர்களில் சிலர் அவரை தொடர்புகொண்டு அவரது மகளை கடத்தப்போவதாக மிரட்டினார்கள். அவரது அம்மாவும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று முத்திரை குத்தினார்கள்.

“நான் பாத்ரூமிற்குள் சென்று கண்ணாடி முன் நின்று அழுவேன்.”

என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இப்படிப்பட்ட சூழலிலிருந்து குடும்பத்தை மீட்டெடுக்க எதையும் செய்யத் துணிந்தார். ஜோசியரை சந்தித்தார்கள். வெவ்வேறு அதிர்ஷ்ட்ட மோதிரங்களை அணிந்துகொண்டார். “ரியல் எஸ்டேட் தொழில், நிறுவனங்களுக்கு ஆட்களை சேர்க்கும் பணி, ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சேரலாம், இப்படிப் பலர் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். “நான் சொன்னால் நம்பமாட்டீர்கள் அனைத்தையும் முயற்சி செய்தேன். ஒரு வருடம் வேலை செய்தேன். ஆனால் எனக்கு எதிராக பல வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் அதை கவனிப்பதே பெரிய வேலையாகிவிட்டது.” என்கிறார் AVIS. மற்றொருபுறம் வாணியின் அப்பாவிற்கு கேன்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் தன் தந்தையை பார்த்துக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது.

“அப்போதுதான் எனக்கு “மவுனா” எனப்படும் உள்மனதை அமைதிப்படுத்தும் நிலை குறித்து தெரிந்தது. உறக்கத்திலோ அல்லது ஒரு குகையிலோ எந்த மனிதனாலும் அமைதியை உணர முடியும், ஆனால் குழப்பத்தின் நடுவே உங்களால் அமைதியாக இருக்க முடிந்தால் உங்களின் மையம் கண்டுகொள்ளப்பட்டது’எனும் விவேகானந்தரின் மேற்கோள் எவ்வளவு சக்திவாய்ந்தது என்று தெரிந்துகொண்டேன். எனக்கும் அப்படி இருக்க ஆசையாக இருந்தது.”

இந்த உந்துதலுடன் வாழ்க்கையை திசைத்திருப்பினார். புகையிலை பழக்கத்தை விட்டார். ஆறு மாதத்தில் 20 கிலோ உடல் எடையை குறைத்தார். உடலில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வந்தது. 

உடலும் மனதும் சீரானதும் ஒரு புதிய தெளிவு பிறந்தது. நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். எங்கள் நான்கு பேருக்கும் ஏதோ நடந்ததே தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை. நாம் யார் என்பதிலும் நம் உள்மனதின் மகிழ்ச்சியிலும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்று நான் வாணியிடன் சொன்னேன்.”

மீண்டெழுவது ப்ளூடூத் போன்றது

2008 முதல் 2012 வரை சின்னச் சின்ன ப்ராஜெக்ட்கள் கிடைத்தது. “2007-ம் வருடத்தைப் போலவே 2014-ம் வருடமும் போராடினோம். ஆனால் பாதிக்கப்பட்டதாக உணரவில்லை. மேலும் மேலும் சிறப்பாக போராடக் கற்றுக்கொண்டோம்.”

தொழிலில் பெரிதாக முன்னேற்றம் காணப்படாத நிலையில் வெற்றிபெற விரும்புவதற்கு பதிலாக பயனுள்ளதாக இருக்க முடிவெடுத்தனர். புத்தகம் அச்சிடப்பட்டு வெளியானது. அவர்களின் வக்கீல் நண்பர் வெவ்வேறு கூட்டங்களில் பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். “எங்களின் நோக்கத்தின் அடிப்படையாகக்கொண்டு மக்களிடம் எங்கள் கதையையும் அதன் மூலம் எங்களது படிப்பினையையும் பகிர ஆரம்பித்தோம்” என்கிறார் AVIS.

“மகிழ்ச்சியோடு இருக்க நீங்களே உதவிக்கொள்ளுங்கள்” என்ற பெயரில் வொர்க்ஷாப் நடத்த ஆரம்பித்தனர். முதலில் இலவசமாகவும் பின்னர் கட்டணத்துடனும் நடத்தினர். ‘Bliss Catchers’ என்ற பெயரில் தடைகளை எதிர்த்து போராடியவர்களும் பேரின்பத்தின் பொருட்டு தங்கள் சுகங்களை துறந்தவர்களும் பேசினார்கள்.

அவர் சோன்னதுபோல அதிசயம் நடந்தது. “எங்களுக்கு மகிழ்ச்சியளித்த விஷயத்தை நாங்கள் செய்ததினால் அந்த மகிழ்ச்சியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது”. வெளிநாட்டில் படிக்கவேண்டுமென்ற அவரது மகனின் கனவுகளுக்கு அவர் குறுக்கே நிற்கவில்லை. எப்படி பணம் கட்டுவது என்று தெரியவில்லை. “ஆனால் ஒவ்வொரு காலாண்டிலும் ஏதோ ஒரு நண்பர் உதவி செய்தார்.” அவர்கள் தங்கியிருந்தது வாணியின் இரட்டை சகோதரியின் ப்ளாட். அதனால் வாடகை இல்லாமல் தங்கினார்கள்.

“என் சகோதரர் கேட்பார், இப்படிப்பட்ட அதிசயங்கள் உனக்கு எப்படி நடந்தது?’ எனக்கு உண்மையில் தெரியாது ஆனால் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று வாழக் கற்றுக்கொண்டோம்,” என்றார் AVIS.

அவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் மொத்தம் 179 பேர். சிலருக்கு அவர்கள் மேல் சந்தேகம் இருந்தாலும், சிலர் அவர்களை நம்புகிறார்கள். “எங்களுக்கு கடன் இருக்கிறது. ஆனால் என்றாவது ஒருநாள் நாங்கள் அனைத்தையும் கொடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.

தோல்வியிலிருந்து AVIS கற்றுக்கொண்ட பாடங்கள் மிகப்பெரியது. எங்களால் எதற்கும் வளைந்துகொடுக்கமுடியும் என்று கண்டுகொண்டோம். இந்த மீண்டெழும்திறன் ப்ளூடூத் போன்றது. நீங்கள் இதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இரண்டாவது தடைகளை எதிர்கொள்ளும் திறன். கவலைகளுக்கிடையில் எப்படி கவலைப்படாமல் இருப்பது என்று தெரிந்துகொண்டோம். அடுத்த மிகவும் முக்கியமான படிப்பினை நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளல். மகிழ்ச்சி என்பது இதுதான். இன்னும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை ஆனால் நாங்கள் பயனுள்ளவர்களாக இருக்கிறோம்” என்கிறார்.

இது சலித்துப்போன விஷயமாக இருந்தாலும் AVIS மற்றும் வாணியின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த பாடம் அன்பின் முக்கியத்துவம். அவர்களின் துரதிர்ஷ்டத்தை இருவரும் ஒன்றாகச்சேர்ந்து எதிர்கொண்டதற்கு அவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் அன்புதான் காரணம். ஒரு சின்ன கருத்துச்சுருக்கம். அன்பு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அதை வாயு நிலையில் பார்க்கவேண்டும். அழுத்தம் கொடுக்கும்போது சுருங்கக்கூடிய தன்மை கொண்டது. 

ஆக்கம் : தீப்தி நாயர் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை தயாரிக்கும் கோவை ஜோடி!

குழந்தை கற்றல் மற்றும் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவும் தம்பதிகள்!