ஆயுத பூஜைக்கு ஆயுதங்களால் செய்யப்பட்ட ரோபோ செய்த பூஜை!

0

பெரும்பாலும் ஆயுத பூஜை என்றால் நாம் பயன்படுத்தும் தொழிற்சார்ந்த ஆயுதங்களுக்கும் பொருட்களுக்கும் பூஜை செய்து கொண்டாடுவோம். ஆனால் இங்கு ஒருவர் தன் தொழிலுக்கு ஏற்ப ரோபோக்களை தயாரித்து பூஜை செய்து அசத்தியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த ஆயுத பூஜையை கொண்டாட ரோபோ ஒன்றை தயாரித்து அதனை பூஜைகளை செய்ய வைத்தார் கணசன் செந்தில்வேல். BMW கார் நிறுவனத்தில் பணிப்புரியும் இவர் ரோபோடிக்ஸ் துறையில் டிப்ளோமா முடித்தவர். ரோபோடிக்ஸ் படித்ததால், தன் படிப்பை ஏதேனும் இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று இந்த முயற்சியை செய்ததாக தெரிவித்தார். மேலும் அதை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு திறமை இருந்தால் அதை வெளிப்படுத்த தயங்காதீர்கள் என தன் சக நண்பர்களுக்கு ஊக்கம் அளித்திருந்தார்.

“ரோபோடிக்ஸ் படித்ததால் புதிய ஒரு கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு. என் வீட்டில் அதற்கான வசதிகள் இல்லை ஆனால் என் நிறுவனத்தில் இருந்தது. நிறுவனத்தின் அனுமதியோடு இதை செய்தேன்,” என்கிறார் .

2012ல் தன் டிப்ளோமா படிப்பை முடித்த இவர் இரண்டு வருடம் ஹுண்டாய் நிறுவனத்தில் பணிப்புரிந்தார். அந்நிறுவனத்தில் இருந்தே ஆயுத பூஜைக்கு தொழில்நுட்பங்களை வைத்து சிறிய ரோபோக்களை தயாரித்துள்ளார். அச்செயலை தற்பொழுது உள்ள நிறுவனத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 8 வருடங்களாக தனது ஆயுத பூஜையை இப்படிதான் கொண்டாடி வருகிறார் கணேசன்.

நிறுவனத்தில் ஏற்று கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது, இருப்பினும் தன் திறமையை காட்ட கிடைத்த வாய்ப்பாய் கருதி உதிரி பாகங்களை வைத்து ரோபோக்களை செய்துள்ளார் ரோபோக்கள் கற்பூரம் காட்டுவது, சாமி சிலை ரோபோவில் இருந்து வெளியில் வருவது என்பது போன்ற ஒரு சில துணுக்கங்களை வைத்து ரோபோவை தயாரித்துள்ளார். ஒவ்வொரு வருடம் புதிய செயல்களையும் தொளில்நுட்பங்களையும் வைத்து ரோபோக்களை தயாரிக்கிறார் இவர்.

“இயந்திரப் பராமரிப்பு துறையில் தான் நான் பணிப்புரிகிறேன், எனது வேலை அயல்நாட்டு இயந்திரங்களை பராமரிப்பது பழுது பார்ப்பது மட்டுமே. இந்த இடத்தில் எனது தனித்திறமையை காட்ட முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது,” என்கிறார்.

ஆனால் இதை நினைத்து வருத்தப்படாமல் தன் திறமையை காட்ட தனக்கான பாதையை உருவாக்கிகொண்டார் இவர். தன் திறமை அதோடு நின்று விடக்கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கும் வகுப்பு எடுத்து வருகிறார்.

“சில தனியார் பள்ளிகளில் ரோபோடிக்ஸ் பற்றிய பாடம் எடுக்கிறார்கள் ஆனால் அரசு பள்ளிகளில் அது கிடைப்பதில்லை. எனவே சில அரசு பள்ளிகளை கண்டறிந்து வாரத்திற்கு ஒரு முறை ரோபோடிக் வகுப்பு எடுக்கிறேன்.”

உதரணாமாக, ஒரு விளையாட்டு ரிமோட் கார் வாங்க வேண்டும் என்றால் ரூ. 600 வரை ஆகும் ஆனால் நாம் மூலப்பொருட்களை வைத்து செய்தால் ரூ.100க்குள் முடித்திவிடலாம் என தெரிவிக்கிறார் கணேசன். இதையே பள்ளிக் குழந்தைகளுக்கும் சொல்லி தருகிறார். ரோபோடிக்ஸ் மட்டுமின்றி மரம் வளர்ப்பு, மின்சார சேமிப்பு என்று சமூக நலன் கருதி பலவற்றையும் சொல்லித்தருகிறார் இவர்.

“என்னை சந்திக்கும் பலர் மாணவர்களுக்கு சொல்லித் தர அழைக்கிறார்கள் ஆனால் தனி ஒருவனாக அனைத்து இடத்திற்கும் செல்ல முடியவில்லை. தொழில்நுட்பவாதிகள் தங்கள் திறமையை மற்றவர்களுக்கு சொல்லித் தர முன் வர வேண்டும்,” என்கிறார்.

இதன் மூலம் மாணவர்களுக்கும் பட்டம் முடித்து வேலை தேடுபவர்களுக்கும் சிறு உதவியை நாம் செய்யலாம். தங்கள் திறமையை வளர்த்துக்கொண்ட தொழில்நுட்பவாதிகள் கல்லூரி மாணவர்களுக்கு இதுபோன்று கற்றுத்தந்து அவர்களை பணிக்கு தயார் செய்யலாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் இவர்.  

ரோபோ ஆயுத பூஜை காணொளி காண இங்கே க்ளிக் செய்யுங்கள்