ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது தொடர்பாக வந்த செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு!  

0

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.சி.டி.எஸ் (ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் பயன்களுக்கும் ரொக்க பரிமாற்றங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக சில செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஐ.சி.டி.எஸ் திட்டத்தின் கீழ் உலர் ரேஷன் பொருட்களுக்குப் பதிலாக வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்படும் என்று அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தவறான தகவலாகும். இது குறித்த விளக்கம் வருமாறு:

· ஐ.சி.டி.எஸ். திட்டத்தின் கீழ், கூடுதல் ஊட்டச்சத்து உணவுப்பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்ற (டேக் ஹோம் ரேஷன்) முறையில் பிறந்து 6 முதல் 36 மாதங்கள் வரையிலான குழந்தைகள் (ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகள் உட்பட), கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட சூடான உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் சமைக்கப்பட்ட சூடான உணவு தொடரும். இதற்கு பதிலாக அவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.

· வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சத்துணவு ரேஷன் பொருட்கள் திட்டத்தின் தரம் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. எனவே இதனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், அதனை மேலும் வெளிப்படையானதாக ஆக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இதனை நிபந்தனைகளுடன் பணப் பரிமாற்ற முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பரிசோதனை முறையில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

· தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013 பிரிவு 39ன் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கூடுதல் ஊட்டச்சத்து விதிகளை (ஐ.சி.டி.எஸ்.ன் கீழ்) அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் முதல் முறையாக 08.06.2105 அன்று உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 8ன்கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு உணவு அளிக்கப்படாவிட்டால் அவர்/அவள் உணவு பாதுகாப்பு படியைப் பெறத் தகுதி உண்டு. உணவுப் பாதுகாப்பு படி தொடர்பான இந்தப் பிரிவு எஸ்.என்.பி. விதிகளில் சேர்க்கப்பட்டு 20.02.2017 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 உணவு பாதுகாப்பு படி அளிக்கப்படுவதை கட்டாயமாக்கியுள்ளது என்பதுடன் எஸ்.என்.பியின் நிபந்தனை பணப் பரிமாற்றத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆதார் இல்லை என்பதால் ஐ.சி.டி.எஸ். திட்டத்தின் கீழ் யாருக்கும் பயன்கள் மறுக்கப்படாது!

· அரசின் திட்டங்கள் பயனீட்டாளர்களுக்குச் செல்லாமல் கசிவுகளை தடுப்பதில் ஆதார் சிறப்பான முறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், விநியோக முறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், அரசின் தொகுப்பு நிதியில் இருந்து செலவிடப்படும் பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களில் ஆதாரைப் பயன்படுத்த அரசு சமீபத்தில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது

· திட்டப் பயனாளிகள் தங்களது ஆதார் எண்களை அளிக்க வேண்டும் என்று இந்த உத்தரவு கூறுகின்ற போதிலும், ஆதார் வேண்டும் என்று கூறி யாருக்கும் பயன்கள் மறுக்கப்படக்கூடாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஆதார் (சேர்க்கை மற்றும் புதுப்பித்தல்) விதிகள் 2016ல் விதிமுறை 12 பயனாளிகளுக்கு ஆதார் சேர்க்கைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ஆதார் இல்லை என்பதால் யாருக்கும் பயன்கள் மறுக்கப்படக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

· ஆறு வயது வரையிலான் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் சேர்க்கைக்கான விண்ணப்பம், பெற்றோரின் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலருடனான உறவை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, விவசாயி புகைப்பட பாஸ் புக், பேன் கார்டு, மனரேகா அட்டை உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கலாம்.

· இத்தகைய தனிநபருக்கு ஆதார் எண் அளிக்கப்படும் வரை அவரின் மாற்று அடையாள விவரங்கள் அடிப்படையில் பயன்கள் தொடர்ந்து அளிக்கப்படும். உதாரணத்திற்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குழந்தைப் பயனாளிகளின் ஆதார் எண் விவரங்களை அங்கன்வாடி மையங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்தக் குழந்தையிடம் ஆதார் எண் இல்லை என்றால், அங்கன்வாடிப் பணியாளர் அந்தக் குழந்தை ஆதார் எண் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுடன் அந்தக் குழந்தைக்கு பயன்கள் தொடர்ந்து கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் 03.03.2017 அன்று தாக்கல் செய்துள்ள ஏராளமான வழக்குகளில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் அவர்கள், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில் இது தொடர்பான அரசின் கொள்கைகள் சேர்க்கப்படும் என்றும் அதனைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.