சாதிக்கும் சாவி: எம்பிஏ முடித்து கிராமத் தலைவர் ஆன முதல் பெண்!

0

புனேயில் எம்பிஏ முடித்த பிறகு டைம்ஸ் ஆஃப் இந்தியா, கால்சன் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார் சாவி ரஜாவத் (Chhavi Rajawat). நம் சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்க விரும்பிய அவர், அதற்காக களத்தில் இறங்கி செயல்படுவது என முடிவு செய்தார். தன் வேலையை உதறினார். ராஜஸ்தானின் டாங் மாவட்டத்தில் உள்ள தனது 'சோடா' என்ற கிராமத்துக்குத் திரும்பிய அவர், இந்தியாவில் எம்பிஏ படித்த முதல் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஆனார். 30 வயதான அவர், நாட்டின் இளம் பஞ்சாயத்துத் தலைவரும் கூட. கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஆன பிறகு, தனது கிராமத்தில் நல்ல குடிநீர், சூரிய மின்சக்தி, சாலை வசதிகள், கழிப்பறைகள் மற்றும் ஒரு குளம் என அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார்.

தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், சாவி எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர். தனதுக்கு கிராமத்துக்கு அன்றாடம் குடிநீர் விநியோகிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட சாலைகளை அமைத்துத் தந்துள்ளார்.

"சுதந்திரத்துக்குப் பின் 65 ஆண்டு காலத்தைப் போலவே அதே வேகத்தில் வளர்ச்சிப் பணி இனியும் தொடர்வது போதுமானதாக இருக்காது. துரிதமான செயல்பாடுகள் இல்லையெனில், குடிநீர், மின்சாரம், கழிப்பறைகள், பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் முதலானவற்றை பெறுவதற்கு கனவு காணும் மக்களை ஏமாற்ற நேரிடும். எனவே, வித்தியாசமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று பேட்டி ஒன்றில் கூறினார் சாவி.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே தனக்கே உரிய பாணியில் தன் கிராமப்புற தூய்மைக்கு வகை செய்திருக்கிறார் சாவி. சமூகப் பங்களிப்புடன் கிராமவாசிகளையே பயன்படுத்தி கிராமம் முழுவதும் கழிப்பறை வசதி கிடைத்திட நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் கூறும்போது, "சோடாவில் உள்ள 900 வீடுகளில் இதுவரை 800 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒரு குளத்தைத் தூர் வாறும் பணிக்கு கூல் ட்ரிங்ஸ் நிறுவனம் ஒன்று ரூ.20 லட்சம் செலவிட முன்வந்தது. இப்போது, அந்தக் குளம் தான் கிராம மக்களின் குடிநீருக்கு ஆதாரம்" என்றார் பெருமிதத்துடன்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்