வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கோவை இளைஞர்!

பலவகை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதலை அளிக்கும் அமைப்பை நிறுவிய நரேஷ் கார்த்திக்!

3

இன்றைய சூழலில் தினம் தினம் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம், வன்கொடுமை மற்றும் சீரழிப்பு பற்றிய செய்திகள் இல்லாமல் எந்த ஊடகங்களும் நகர்வதில்லை. மன வருத்தத்துடன், அது இன்றைய போக்காக மாறிவிட்டது என்றுக் கூட சொல்லலாம். குழந்தைகள் தங்களது அறிவுக்கும், சக்திக்கும் மீறி பல தகாத வழிகளில் கட்டாயப்படுத்தி சீர் அழிக்கப்படுகிறார்கள். 

பெரும்பாலும் பெண் பிள்ளைகளாக இருந்தால் பாலியல் வன்கொடுமை; ஆண் பிள்ளைகள் தீய பழக்கத்திற்கு அடிமை என்றாகிவிட்டது. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக்.

நரேஷ் கார்த்திக்
நரேஷ் கார்த்திக்

நரேஷ் கார்த்திக் சீட்ரீப்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை (Seedreaps Educational & Charitable Trust) என்னும் அரசு சாரா மையத்தின் நிறுவனர். கோவையைச் சேர்ந்த இவர், இந்த அமைப்பின் மூலம் பாலியல் கொடுமை, வன்முறை மற்றும் தீய பழக்கத்திற்கு அடிமை ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுத்து, கல்வி அளித்து, சமுதாயத்தில் மரியாதையான இடத்தை பெற வழிவகுத்துத் தருகின்றார்.

“நாம் கனவில் கூட நினைத்து பார்த்திடாத கொடுமைகளை இக்குழந்தைகள் அனுபவித்து உள்ளனர். இவர்களை நாம் சீர் செய்யவில்லை என்றால் இவர்கள் சமூகத்திற்கு எதிராக திரும்பி ஒதுக்கி வைக்கபப்டுவார்கள்,” என பேச துவங்குகிறார் நரேஷ்.

முதல் மீட்புப் பணியும்.. சீட்ரீப்ஸின் தொடக்கமும்..

இவ்வமைப்பை 2011ல் தனது 21 வயதில் துவங்கிய நரேஷ், உளவியலில் பட்டப்படிப்பை முடித்தவர். ’ஹாப்பி மைல்ஸ்’ என்னும் ஓர் அமைப்பை நிறுவி பள்ளி, கல்லூரி மற்றும் கார்பிரெட் ஊழியர்களுக்கு தனி ஆளுமை பயிற்சி, மேலாண்மை பயிற்சி, நுழைவு தேர்வை எதிர்கொள்ளுதல் போன்ற பயிற்சிப்பட்டறைகளை அளித்து வந்தார். அதன் பின் ஓர் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனத்தை தனது நண்பருடன் துவங்கினார்.

ஆராம்பக்காலத்தில் தங்களுக்கென அலுவலகம் இல்லாததால் அனைத்து சந்திப்புகளை அருகில் இருக்கும் தேனீர் விடுதியில் தான் வைத்துள்ளனர். நிறுவனத்தை வளர்க்க நினைத்த சந்திப்புகள் இந்த அறக்கட்டளையை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது.

“அந்த விடுதியில் வேலை பார்த்த பணிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேல் படிப்பை தொடராமல் இங்கு வேலை செய்துக் கொண்டிருந்தார். படிப்புக்கு பணம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் மனம் கனக்கும் அளவுக்கு வேறு ஒரு பிரச்சனை இருந்தது...”

அவரது அம்மா அவரை தனியாக அப்பவிடம் விட்டுச் சென்று போய்விட்டத்தால், அவள் அப்பா மறுமணம் செய்துகொண்டார். நாம் பெரும்பாலும் கேட்பது போல் சித்தி கொடுமைகளை அனுபவித்த இந்த பெண்னை அவள் பள்ளி படிப்பை முடித்தவுடன் 33 வயதுடைய ஒருவருக்கு 67 ஆயிரம் பணம் வாங்கி திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதைத் தெரிந்த நரேஷ் பல முறை அப்பெண்ணின் தந்தையிடம் விடாமல் பேசி புரிய வைக்க முயன்று தோத்துப்போனார். அதன் பின் தனக்கு தெரிந்த கோவை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இதைப்பற்றி தெரிவித்து அந்த சிக்கலை தீர்த்தார். அப்பெண்ணின் தந்தை படிக்க வைக்க பணம் இல்லை என்று கூறிய போது நரேஷ் பேராசிரியரான தனது அம்மாவின் உதவியோடு அப்பெண்ணை கல்லூரியில் சேர்த்தார்.

கல்லூரியில் சேர்த்தால் மட்டும் போதாதே படிப்புக்குத் தேவையான மற்ற செலவுகளுக்கு நிதி உதவி வேண்டும் என்று நினைத்தார் நரேஷ். அன்றைக்கு காவல்துறையில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும், துணை, உதவி ஆணையர்களும் உதவி செய்து அந்த பெண்ணை கல்லூரி விடுதியல் தங்க வைத்து படிக்க வைத்தனர்.

“இவர்களின் இந்த செயலில் நெகிழ்ந்த நான் இந்த உதவிக்கு அடித்தளம் போட்ட ஆணையருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் அவரோ பாராட்டாமல் இது சிறு துளி தான் நீங்கள் செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது எனக் கூறினார்.”

அதன் பின் ஆணையரிடம் பேசி காவல்துறைக்கு வரும் இது போன்ற சிக்கல்கள் ஏராளம் என்றும், வெளியில் தெரியாத சிக்கல்கள் இன்னும் அதிகம் என்றும் புரிந்துக் கொண்டேன். அவரின் உந்துதலால் இந்த அறக்கட்டளையை நிறுவினேன் என்று நெகிழ்ச்சியுடன் தன் பயணத்தை பகிர்ந்தார் நரேஷ்.

சேவையின் தொடர்ச்சி...

2011 தனது சேவையை துவங்கிய நரேஷ், இதுவரை 1000த்துக்கும் மேலான மீட்புப் பணியில் ஈடுபட்டு பல மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு கிடைக்க வழிகாட்டியுள்ளார்.

இவரது அமைப்பு மற்ற அமைப்புகள் போல் விடுதியோ அல்லது தங்குமிடம் அமைத்தோ தங்களது மீட்பாளர்களை தங்க வைப்பதில்லை. பிரச்சனை என வரும் குழந்தைகளை விடுதி வசதி இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கின்றனர்.

“சமூக சிக்கல்களை சந்தித்து வரும் அனைத்து குழந்தைகளையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்தால் அவர்கள் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கி செல்ல மாட்டார்கள். நம்மை போன்று சாதாரண மக்களுடன் சேர்ந்து இருந்தால் தான் நன்மை பெருவர்,” என்கிறார்.

இதுபோன்று கல்வி அமைப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பொழுதும் அவ்வமைப்பின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே அக்குழந்தைகளின் பின்னணியை தெரிவிகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் இடையில் எந்த பிரிவினையும் வராமல் இருக்கும் என நுணுக்கமாக பேசுகிறார் நரேஷ்.

பல குழந்தைகள் தங்களது சொந்த தாய் தகப்பன் மூலமே பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு லஞ்சம் போன்று ஏதேனும் கொடுத்து வாயை அடைத்து விடுவதால் பல குற்றங்கள் வெளியில் வருவதற்குள் அவர்களுக்கு தெரியாமலே பல மோசடிகளை கடந்து வருகின்றனர்.

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், விபச்சார விடுதியில் பிறந்த குழந்தைகள், பலமுறை தகப்பனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்கள் என நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு மனம் மற்றும் உடல் வேதனையை அனுபவித்த குழந்தைகளை மீட்டு ஆலோசனை செய்து படிக்க அனுப்பியுள்ளனர் இக்குழுவினர்.

“எங்களிடம் வரும் குழந்தைகள் முடிந்த அளவு அரசு சேவை துறையில் பணியாற்ற வைக்கிறோம். இதன்மூலம் சமூகத்திற்கு உதவும் வாய்ப்பு ஏற்படும், மேலும் சிக்கல்களின் நுணுக்கத்தை அறிந்து ஊழல் இல்லாமல் செயல்படுவார்கள் என நம்புகிறோம்,” என்கிறார் நம்பிக்கையுடன்.

இவரது நம்பிக்கைக்கு ஏற்றார் போல் இதில் பலர் கல்வித்தகுதி பெற்று, முன்னிலை அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களை அரசுத் துறையில் மேல் இடத்தில் இருக்கும் சில சிறந்த அலுவலர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றனர். இதனால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள் என்கிறார் நரேஷ்.

தற்போது தேசிய அளவில் ’சீட்ரீப்ஸ்’ இயங்கி வருகிறது. ஒய்வு பெற்ற காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை இவர்களின் அமைப்பில் இணைத்துள்ளனர். இவர்கள் உதவியுடன் மீட்புப் பணியில் சற்று சுலபமாக செயல்பட முடியும் என்கிறார் நரேஷ். உதவிக்கு வரும் எல்லா குழந்தைகளும் அவர்கள் சார்ந்த காவல் நிலையத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே நிதி உதவி அளிக்க முன் வருகிறது இவர்களது அமைப்பு.

“நாம் செலவு செய்து பள்ளியில் சேர்த்தபின் படிக்காமல் சென்று விட்டால் நஷ்டம் நமக்கே. என் அமைப்பை நம்பி பல நல்லுள்ளங்கள் உதவித் தொகை தருகின்றனர் அதை வீணாக்கக் கூடாது,” என்கிறார்.

இன்னும் பல குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றவே ஊடகங்களின் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறோம் என முடிக்கிறார் நரேஷ் கார்த்திக்.

இவர்களை இங்கே தொடர்புக்கொள்ளலாம்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin