22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் மதுரைக்கார பெண்!

பிரபலங்கள் போல ட்ரெஸ் செய்ய ஆசையா? ஆனால் அதை விலை கொடுத்து வாங்க பணம் இல்லையா? உங்களுக்கு பிடித்த விலையுயர்ந்த ஆடையை, முக்கிய நிகழ்வுக்கு அணிந்து செல்ல வாடகைக்கு தந்து உதவிடும் ஆன்லைன் தளம்!

3

இன்றைய சூழலில் தொழில் முனைவு ஒரு போக்காக இருந்தாலும் கூட அதில் பெண் தொழில்முனைவர்கள் கைவிட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கின்றனர். அதிலும் 25 வயதுக்குள் ஒரு பெண் தொழில்முனைவர் பயணத்தை ஏற்று அதில் முன்னேற தனி தைரியமும் நம்பிக்கையும் வேண்டும். அப்படிப்பட்ட பெண் தொழில் முனைவர் தான் சயுஜ்யா ஸ்ரீநிவாஸ்.

சயுஜ்யா ஸ்ரீநிவாஸ்
சயுஜ்யா ஸ்ரீநிவாஸ்

சயுஜ்யா ஸ்ரீநிவாஸ் ‘LibeRent' 'லிபேரெண்ட்' நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனம் பெண்களுக்கான தேர்ச்சியான ஆடைகளை வாடகைக்கு தருகின்றனர். பத்து அல்லது இருபது ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை ஒரு நாள் கூத்துக்கு வாங்க வேண்டாம் என நினைப்பவர்கள்/பெற முடியாதவர்கள் மிகக் குறைந்த விலையில் இவர்களிடம் வாடகைக்கு எடுத்து திருப்பித் தந்துவிடலாம். 

“வாடகைக்கு தரும் பழக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே துவங்கிவிட்டது என நினைக்கிறேன். பள்ளி படிக்கும்பொழுதே பட சிடி-களை என் அம்மாவின் கல்லூரி மாணவிகளுக்கு வாடகைக்குக் கொடுப்பேன்,” என நினைவு கூறுகிறார் சயுஜ்யா.

இவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த மதுரைக்காரப் பெண். 2013ல் தன் பொறியியல் பட்டபடிப்பை முடித்த இவர், ஜம்ஷத்பூர் மற்றும் ஒரிசாவில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தார். படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தாலும் சுயதொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் மனதோடு ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. இருப்பினும் சுயதொழில் துவங்கும் எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வருடம் வேலையில் இருந்துக்கொண்டே தொழிலுக்கான தரவுகளை சேகரித்தார் சயுஜ்யா.

“இந்த சமுதாயத்தின் விதிகளும் விதிமுறைகளும் என்னை கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தது. பள்ளி, கல்லூரி படிக்கும்பொழது அதில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்த சுதந்திரம் தொழில்முனைவில் தான் கிடைக்கும்...”

ஒரு கட்டத்தில் நமக்கு செய்யும் வேலையை விட்டு ஒரு ஓவியராக ஆசை வரும் அல்லது வெளிநாடு செல்லும் ஆசை இருக்கும் ஆனால் பல சமூக காரணங்களால் நம்மால் அதை செய்ய முடியாது. இது போன்ற ஒரு சில முட்டுக்கட்டைகளை நாம் நினைத்தால் நம்மால் அதை தகர்த்து எரிந்து முன்னேறவே முடியாது. இந்த எண்ண ஓட்டத்தில் இருந்து தான் தனக்கு ஆடைகளை வாடகைக்கு விடும் யோசனை புலப்பட்டதாக கூறுகிறார் சயுஜ்யா. 

அதாவது உடைகள் மூலம்தான் நம்மை நாம் முழுமையாக வெளிபடுத்திக் கொள்ள முடியும். விருப்பப்பட்ட எதையும் எந்த நேரத்திலும் அணியலாம் என்ற நிலைமை இருந்தால் நம்மை அறியாமலே நமக்குள் அசாத்திய நம்பிக்கை ஏற்படும் என்கிறார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால் எதையும் துணிந்து செய்யும் நிலைமை சயுஜ்யாவுக்கு இல்லை. அதனால் ஒரு வருடம் பணிக்குப்பின் வீட்டுக்கு தெரியாமல் தன் வேலையை விட்டு, தன் தொழில் பயணத்தில் அடி எடுத்து வைத்தார். வேலையில் இருக்கும் பொழுது வடிவமைப்பாளர்கள், சலவை செய்பவர்கள் என தேவையான முதலீட்டாளர்களுடன் இணைத்துவிட்டார் இவர்.

“வேலையை விட்டு வந்தவுடன் என் கையில் எந்த பணமும் இல்லை. அதனால் என்னிடம் இருந்த என் உடைகளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்து வாடகைக்கு விடத் தொடங்கினேன். என் பயணத்தை சென்னையில் தான் தொடங்கினேன்...”

இதற்கிடையில் சயுஜ்யா தன் தொழிலின் போக்கை அறிய பல மால்களின் வாசலில் நின்று பெண்களிடம் கணக்கெடுப்பு எடுத்துவந்தார். அதன் பின் ஃபேஸ்புக்கில் சில ஆர்டர்களை பெற தானே தன் வண்டியில் சென்று ஆடைகளை விநியோகம் செய்தார். மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் வந்தாலும் அந்த சூழலில் சென்னையில் மட்டுமே அவரால் விநியோகம் செய்ய முடிந்தது. முகநூலில் தன் பயணத்தைத் துவங்கி அதை வளர்க்க பல முதலீட்டாளர்களை வடிவமைப்பாளர்களையும் சந்தித்துள்ளார் இவர். ஒரு அடி முன் வைத்தால் இரண்டு அடி சறுக்கும் என குறிப்பிடுகிறார்.

சில மாதங்கள் தனியாக பணிப்புரிந்த இவர், தன் கடும் முயற்சியால் ஏஞ்சல் முதலீடு மூலம் தனது முதல் முதலீட்டை பெற்றார். ஒருவழியாக ஆகஸ்ட் 2014ல் வளர்ந்துவரும் வடிமைப்பாளர்களுடன் இணைந்து ஆடைகளை மொத்த விலையில் எடுத்து வாடகைக்கு விட துவங்கினார். ஆடையின் நிஜ விலையில் இருந்து 10%-15% விலையில் வாடகைக்கு கொடுக்கிறார்.

பிசினஸ் மாடலை உருவாக்கிய இவர், அதன் பின் இரண்டு பணியாளர்களை தன்னுடன் பணிக்கும் அமர்த்தினார். பணியாளர்களை பற்றி பேசிய சயுஜ்யா தன்னுடன் இன்டர்னாக சேர்ந்து தற்பொழுது அவரது நிறுவனத்தின் ஒருவராக இருக்கும் தீப்தியை பற்றி பேசுகிறார். எந்த வித இக்கட்டான சூழலிலும் தனக்கு உறுதுணையாக நின்று தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு தீப்திக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார்.

இ-காமர்ஸ் இணையம் மூலம் இயங்கி வரும் இவரது நிறுவனம் பெங்களூர், சென்னை, மும்பை, புனே, ஹைதராபாத், கோவை, கொல்கத்தா, கொச்சி மற்றும் மைசூரில் விநியோகம் செய்கிறது.

“சென்னையில் தான் என் பயணத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் தற்பொழுது சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த முறை ஃபேஷனை அனுபவிக்க எளிய முறை எனபதை ஏற்றுக்கொண்டனர்,” என்கிறார்.

ஸ்டார்ட்-அப் தொழிலை சுதந்திரத்திற்காகவும் ஓர் கவர்ச்சிக்காக மட்டும் துவங்கினால் நிலை நாட்ட முடியாது. ஒரு சுயதொழிலை நாம் கையில் எடுத்துக் கொண்டால் 100 மடங்கு பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நாம் அடிமைகளாகி விடுகிறோம்; அதை நாம் விரும்பி செய்ய வேண்டும். இந்த சவால்களை நாம் ஏற்க தயாராக இல்லை என்றால் சுய தொழிலில் ஈடுபடக் கூடாது என முடிக்கிறார் இந்த இளம் தொழில்முனைவர். 

வலைத்தளம்: https://www.liberent.com/

Related Stories

Stories by Mahmoodha Nowshin