உங்கள் கையில் இருக்கும் கிரிக்கெட் பேட் காஷ்மீரில் தயாரிக்கப் பட்டிருக்கலாம் தெரியுமா...?

0

மெல்லத்தவழும் காற்று மற்றும் வசந்தகால குளிருக்கு மத்தியில், காஷிமீரின் ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் சூழைந்திருக்கும் அமைதிக்கு நடுவே இயந்திரங்களின் ஒலி மற்றும் தொழிலாளர்களின் பேச்சொலிகள் மட்டுமே கேட்கின்றன.

நர்வாரா, சவுராவில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆலை, பரபரபாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு குழந்தைகளுக்கு தயானா 38 வயது, ரிபாத் ஜன் மசூதியால நடத்தப்படும் மசூதி ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் (எம்.ஏ.எஸ்) இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கிரிக்கெட் பேட்களை தயாரிக்கிறது. தயாரிப்பு முதல் மார்க்கெட்டிங் வரை எல்லாவற்றையும் ரிபாத்தே பார்த்துக்கொள்கிறார். இந்த வர்த்தகத்தை 2005 ல் அவர் சீரமைத்து நடத்தி வருகிறார்.

“இந்த வர்த்தகம் என் மாமனாருக்கு சொந்தமானது. அவர் மறைந்த பிறகு பல ஆண்டுகள் இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. இந்த வர்த்தகத்தை புதுப்பித்து நான் நடத்த தீர்மானித்தேன்,” என்கிறார் அவர்.

இது எல்லோருக்குமானது

பெரும்பாலான பேட் தயாரிப்பு மும்பை மற்றும் தில்லிக்கு, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

“எங்கள் 90 சதவீத ஆர்டர்கள் மும்பை, தில்லி மற்றும் லத்தூரில் இருந்து வரும் ஆர்டர்களை மையமாகக் கொண்டவை. ஆர்டர்கள் மற்றும் தேவையின் அடிப்படையில் இயங்குகிறோம்,” என்கிறார் ரிபாத்.

ரிபாத்தின் கணவர் கால்பந்து பயிற்சியாளர் என்பதால் பெரும்பாலும் சுற்றுப்பயணங்களில் இருக்கிறார். எனவே வீட்டு வேலை மட்டும் அல்லாமல் ஆலையையும் இவரே பார்த்துக் கொள்கிறார்.

“கடவுளுக்கு நன்றி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வீடு மற்றும் நிறுவன வேலை இரண்டையும் பார்த்துக்கொள்ள முடிகிறது. என்னுடைய குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவுகின்றனர்,” என்கிறார் ரிபாத். 

சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களுக்கான முன்னுதாரணமாக அவர் விளங்குகிறார். எல்லா வர்த்தகத்திலும் ஆரம்ப காலத்தில் சிக்கல்கள் உண்டு. ரிபாத்தும் தன்பங்கிற்கான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

“பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த ஆலையை மீண்டும் இயக்குவது பெரும்பாடாக இருந்தது. பணியாளர்கள் நியமனம், சப்ளையர்கள் மற்றும் வாங்குபவர்களை கண்டறிவது அப்போது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. என்னைப்பொறுத்தவரை வர்த்தகத்தை நடத்த முயற்சிப்பதே சவாலாக இருந்தது,” என்கிறார்.

ஆரம்பத்தில் ரிபாத் கணவர், தனது தந்தையின் பழைய நண்பர்களை அணுகி, உதவி மற்றும் வழிகாட்டுதலை பெற்றார். இதன் மூலம் ஆலையை மீண்டும் துவக்க முடிந்தது. 

“என்னை நம்புங்கள், இது ஒரு சூதாட்டம் போல தான். என்னுடைய எல்லா வளங்களையும் ரிஸ்க் எடுத்து, குடும்ப வர்த்தகத்தை சீரமைப்பது முழுவதும் என் தோளில் இருந்தது. சிறிது காலம் ஆனாலும், எல்லாம் சீரானது. அதன் பிறகு தான் என்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது.”

சிக்கலான காலம்

குடும்பத்திற்கு சொந்தமான பழைய இரண்டு மாடி கட்டிடத்தில் ஆலை அமைந்துள்ளது. சிறிய கீழ் தளம் இயந்திரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு, எஞ்சிய அறைகள் மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை வைக்கப் பயன்படுகிறது.

“90 கள் முதல் ஆலை எங்கள் பூர்வீக வீட்டில் செயல்படுகிறது. உதவிக்காக வங்கி அல்லது எந்த அமைப்பிடமும் செல்லவில்லை. எல்லாம் எங்களுடையது. இதன் மூலம் சுதந்திரமாக, தற்சார்புடன் இருக்கிறோம்,” என்கிறார் அவர்.

தயாரிப்பு ஆர்டரின் அடிப்படையில் அமைவதால்,தேவை மற்றும் சப்ளையை நிர்வகிக்க முடிகிறது.

“ஆர்டருக்கு ஏற்ப மாதம் 3,000 முதல் 5,000 பேட்கள் தயாரிக்க முடியும். ஜி.எஸ்.டிக்கு பிறகு ஆர்டர்கள் கொஞ்சம் குறைந்தன. முன்னர் வரி விலக்கு இருந்தது, ஆனால் இப்போது 12 சதவீத வரி இருப்பதால் விலை கொஞ்சம் உயர்ந்துள்ளது.”

ஆண்டு விற்றுமுதலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் விற்றுமுதல் உயர்ந்து ரூ.5 கோடி எனும் நிலையை எட்டியுள்ளது. பேட்களின் விலை தயாரிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.5,000 வரை இருக்கிறது.

சீரான வளர்ச்சி

ரிபாத் தயாரிப்பில் தரத்தை உறுதி செய்வதாலும் வாடிக்கையாளர் கருத்துக்களை முக்கியமாகக் கருதுவதாலும், உள்ளூர் மற்றும் வெளியூரில் வர்த்தகம் சீரான வளர்ச்சி கண்டுள்ளது. தங்கள் பிராண்ட பெயரான எம்.ஏ.எஸ் மூலம் அறியப்பட விரும்புவதால் காஷ்மீரிலும் அவர் பேட்களை அதிகம் விற்க விரும்புகிறார்.

அவருக்கு பெரிய கனவுகள் இருந்தாலும், இடையே தடுமாறிவிடக்கூடாது என்று சீரான வேகத்தில் செல்கிறார். லாபம் மூலம் தரமான மூலப்பொருட்கள் மற்றும் கருவிகளை வாங்க முடிகிறது. சொகுசு கார்கள் அல்லது ஆடம்பர பொருட்களில் ஆர்வம் இல்லாததால் அவர் தனக்கு சிறிதளவே வைத்துக்கொள்கிறார்.

“என் வர்த்தகமே எனக்கொரு அணிகலனாகும். இதற்கே நேரம், கவனம், பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே தான் அதிலேயே வேண்டிய அளவுக்கு செலவு செய்கிறேன்.”

ஆலையில் ரிபாத் தொழிலாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. அவர்களுடன் தரையில் அமர்ந்து, இரவில் கூட தயாரிக்கப்பட்ட பொருட்களை பேக் செய்வதில் உதவி செய்து, அவை குறித்த காலத்தில் செல்வதை உறுதி செய்கிறார்.

காஷ்மீரில் ஆலையை ஒரு பெண் நடத்துவதை சமூகம் எப்படி பார்க்கிறது??

“சமூகம் ஒரு பொருட்டல்ல, நீங்கள் நினைப்பது தான் முக்கியம். உங்கள் குடும்ப ஆதரவு முக்கியம். மற்றவை தானாக வரும். உறுதியுடன் இருந்தால் பெண்களால் எல்லாம் முடியும். பாலினம் ஒரு காரணம் அல்ல. என்னால் முடியும் என்றால் எல்லோராலும் முடியும். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் வேலைக்குச்சென்று சுதந்திரமாக இருப்பது முக்கியம்,” என்கிறார் அவர்.

ஆங்கில கட்டுரையாளர்: பஸிரா ரபிஜி | தமிழில்; சைபர்சிம்மன்