பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘Career Guidance’ செயலி!

1

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழக மாணவ-மாணவிகள், தாங்கள் சேரக்கூடிய துறை மற்றும் கல்லூரி எது என்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவது வழக்கம். நாளுக்குநாள் மாறிவரும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கோர்சுகள் உருவாகிவரும் இக்காலக்கட்டத்தில், மாணாக்கர்கள் சில சமயத்தில் எதை தேர்ந்தெடுப்பது எதில் சேர்வது என சுற்றி இருப்போரின் அறிவுரையில் குழம்பித் தவிக்கும் நிலையில் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில், மேற்கல்வி மற்றும் வருங்கால வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைகளை பிரபல கல்வி ஆலோசகர்களிடம் கேட்டறிந்தும். செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் தங்கள் சந்தேகங்களைக் அவர்களிடம் கேட்டும், அதன்படி மாணவர்களும் பெற்றோர்களும் தகுந்த கோர்சுகளைத் தேர்ந்தெடுப்பதே வழக்கம். இருப்பினும் அவ்வப்போது வரும் சிறு சிறு சந்தேகங்களுக்கு விடை தெரியாமல், அறிவுரை கேட்க வழியில்லாமல் திண்டாடும் மாணவர்களின் தவிப்பைப் போக்க, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி 'கேரியர் கைட்டன்ஸ் செயலி' (Career Guidance APP) ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரிசையாக வரவுள்ள இந்த நேரத்தில் மாணவர்களின் அவசியத்தை பூர்த்தி செய்யவே இந்த செயலியை அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார் ஜெ.பி.காந்தி. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இதுவரை கல்வி மற்றும் கேரியர் ஆலோசனை வழங்கியுள்ள காந்தி, இந்த செயலியின் அறிமுகம் பற்றியும் அதன் சேவைகளைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.

“மொபைல் போன் இல்லாத இளம் தலைமுறையினரே இன்று இல்லை. முக்கியமாக ஆண்ட்ராய்டு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது. எங்கும் அதை உபயோகிக்க முடியும் என்ற வசதி உள்ளதால், கேரியர் வழிகாட்டி செயலியை அறிமுகப்படுத்தினால் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என முடிவுசெய்து வெளியிட்டேன். இது இந்தியாவின் முதல் நேருக்கு நேர் கேரியர் கைட்டன்ஸ் செயலி” என்றார்.

கேரியர் கைட்டன்ஸ் செயலி 

ஆண்ட்ராயிடில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடிந்த இச்செயலியில் பல பகுதிகள் உள்ளன:

ஆல் இந்தியா காலேஜ் ப்ரெடிக்டர் (ALL India College Predictor): இதில் மாணவர்கள் தங்கள் பெயர், விபரம், தேர்வு எழுதிய போர்ட், பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தொடர்பு எண் தகவல்களை அதில் அளித்தால் 48 மணி நேரத்தில் அவர்களுக்கு எந்த கல்லூரியில், எந்த துறையில் அனுமதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று இ-மெயில் மூலம் பதிலளிக்கப்படும்.

கேரியர் டிப்ஸ் 2016 (Career Tips 2016): இந்த பகுதியில் ஜெயபிரகாஷ் காந்தி அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ஆண்டு டிமான்டில் உள்ள துறை எது, வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறை, வருங்காலத்தில் பிரகாசிக்கப்போகும் துறை போன்ற பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கி வருகிறார். பொறியியல், மெடிக்கல் அல்லாது மற்ற துறைகள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரியர் வீடியோஸ் (Career Videos): வேலைவாய்ப்பு மற்றும் அகில இந்திய அளவில் டிமான்டில் உள்ள கல்வித்தகுதிகள் குறித்து வீடியோ பதிவுகள் இந்த பகுதியில் இடம் பெறும். மாணவர்கள் அவ்வப்போது இதனை பார்த்தும் கேட்டும் அறிவுரை பெற்று பயன் பெறலாம்.

இது போல இஞ்சினியரிங், மெடிக்கல், சட்டம், கலை மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகள் குறித்தும் தனித்தனி பகுதிகளாக விளக்கமாக இந்த செயலியில் விளக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நடக்கவிருக்கும் நுழைவுத்தேர்வுகள், மாநில அளவு தேர்வுகளின் தேதிகள் குறித்தும் தகவல்கள் இதில் இடம்பெறும்.

அறிமுகப்படுத்தி சில தினங்களே ஆன கேரியர் கைட்டன்ஸ் செயலியை 1000க்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனக் கூறிய காந்தி, தனிப்பட்ட முறையில் விரிவான ஆலோசனை தேவைபடுவோருக்கு கட்டண அடிப்படையில் செயலி மூலம் அளிக்கப்படும் என்றார். மேலும் வருங்காலத்தில் முற்றிலும் நேரலை ஆலோசனை நிகழ்ச்சிகளையும் இச்செயலியில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

“உங்கள் வருங்கால கேரியரை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள், புதிய துறைகள் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் நுழையத்தேவையான கல்வித்தகுதிகளை தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள், ” 

என்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ள மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் ஜெயபிரகாஷ் காந்தி 

செயலியை பதிவிறக்கம் செய்ய: Career Guidance

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan