குழந்தைகள் பாதுகாப்பு செயலியை உருவாக்கிய இரண்டு தந்தையர்!

0

குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றச்செயல்கள் பற்றிய செய்தி கேள்விப்படாத நாட்களே கிடையாது. இந்தச் செய்திகள் மூலம் அன்றாடம் இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புரிந்து கொண்ட ரிதீஷ் பாண்டியா மற்றும் விஸ்வநாத்.வி.பாலுர் ஆகிய இரண்டு தந்தையர்கள் தங்களது குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் தான் இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கருதினார்கள். இந்த விருப்பத்தின் காரணமாக ஊக்குவிக்கப்பட்ட அவர்கள் "லோகஸ்" (Locus) எனப்படும் வன்பொருள் இணைந்த மொபைல் செயலி (ஆப்) ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது பெற்றோர், தங்கள் குழந்தைகளைப் பற்றி எந்த நேரத்திலும் தெரிந்து கொள்ள உதவுகிறது.

"பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, நல்ல நோக்கத்துடன் மற்றவர்கள் தொடுதவதற்கும் கெட்ட நோக்கத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் பயிற்சி அளிப்பதுடன், அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாக ஒரு செல்போன் கொடுக்கின்ற போதிலும், பள்ளிகளில் போன்கள் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பில் ஒரு முழுமையான முறையை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என்கிறார் ரிதீஷ்.

இது எப்படித் தொடங்கியது

கடந்த 2012ம் ஆண்டு காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த முயற்சி தொடங்கியது. தாலிபான்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் அருகில் இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பல்வேறு குழந்தைகளின் உயிரைப் பறித்ததுடன் குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையேயும் பெரும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தார் ரிதீஷ்.

ரிதீஷ் பாண்டியா
ரிதீஷ் பாண்டியா

அவசர காலங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரை அணுகுவதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை ரிதீஷ் உணர்ந்தார்.

இந்த எண்ணம் ஏற்பட்ட பின்னர் தொழில்நுட்ப அறிவாற்றல் கொண்ட தனது இணையை தேடுவதற்கான தனது வேட்டையைத் தொடங்கினார் ரிதிஷ். இந்தியாவுக்கு திரும்பிய அவர் ஆன்மொபைல் குளோபல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இங்குதான் பொறியியல் பிரிவு இயக்குனராக இருந்த விஸ்வநாத்தை அவர் சந்தித்தார்.

ஒருநாள் உணவு இடைவேளையின் போது ரிதீஷ் தனது எண்ணத்தை விஸ்வநாத்திடம் பகிர்ந்து கொண்டார். "தொழில்நுட்பம் குறித்து நடத்தப்பட்ட தீவிர ஆராய்ச்சியைத் தொடர்ந்து இது சாத்தியம் தான் என்பதை உணர்ந்த நாங்கள், விஸ்வநாத்தின் தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் எங்களது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து அதனை முழுமையானதாக ஆக்கியதுடன் அதற்கு கூடுதலான மதிப்பினைத் தந்தோம்" என்கிறார்.

இந்த சமயத்தில் தான் பெங்களூருவில் பள்ளி வளாகத்திலேயே ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்த அசம்பாவிதத்தை லோகஸ் தடுத்திருக்க முடியும். இந்த சம்பவம் அந்த இரண்டு பேரையும் மேலும் ஊக்கப்படுத்தியது. அவர்கள் இருவரும் தங்களது பணிகளை உதறிவிட்டு "டட்யா டெக் பிரைவேட் லிமிடெட்" (Tatya Tech Pvt LTd) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

லோகஸ்

"லோகஸ்" என்பது ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் அடிப்படையிலான பள்ளி அடையாள அட்டையாகும். இதனை அனைத்து குழந்தைகளும் எளிதாக வைத்துக் கொள்ள முடியும். இந்த அடையாள அட்டையானது பெற்றோர்களிடம் உள்ள மொபைல் செயலிக்கு குழந்தைகளின் இருப்பிடம் குறித்த தகவல்கள் அளிக்கும் என்பதால் எந்த நேரத்திலும் குழந்தை எங்கே உள்ளது என்பதை அவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தச் செயலி குழந்தைகளின் இருப்பிடம் குறித்த தகவல்களை உடனுக்குடன் அளிப்பதுடன், பள்ளி நேரத்தில் பாதுகாப்பான பகுதி மற்றும் பாதுகாப்பற்ற பகுதி ஆகியவற்றை பிரித்து வைத்துக் கொண்டிருப்பதுடன், குழந்தை பாதுகாப்பான பகுதியை விட்டு விலகிச் சென்றால் உடனடியாக அது குறித்த தகவலை பெற்றோரிடம் உள்ள மொபைல் போனுக்குத் தெரிவிக்கும். இந்த அடையாள அட்டை குழந்தைகளின் போனில் சார்ஜ் குறைவாக இருந்தாலோ அல்லது அணைந்து போனாலோ அது குறித்தும் பெற்றோருக்கு தகவல்கள் தெரிவிப்பதுடன், குழந்தைகள் பயணிக்கும் வாகனம் இயல்பான வேகத்தைவிட கூடுதலான வேகத்துடன் பயணித்தால் அது பற்றிய தகவல்களையும் பெற்றோருக்கு அளிக்கும்.

குழந்தைகளைப் பொருத்த வரையில் அவர்கள் தங்களிடம் உள்ள அட்டை போன்ற கருவியில் ஆபத்து பொத்தானை அழுத்தினால் உடனே பெற்றோரை தொடர்பு கொள்ளலாம் என்பதால், அவர்கள் குழந்தையை சுற்றி என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள் தவிர இந்த செயலி பெற்றோர்களும் ஆசிரியர்களும் பேசிக் கொள்வதற்கான வசதியை அளிக்கிறது என்பதால் வீட்டுப் பாடம் மற்றும் இதர விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

விஸ்வநாத்
விஸ்வநாத்

பள்ளிகளில் ஏற்பு

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த முயற்சியில் இந்த இருவரும் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டில் இவர்கள் 40 பள்ளிகள் மற்றும் 700 பெற்றோரை அணுகி உள்ளனர். லோகஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ள நான்கு பள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு நேர்மறையாக இருந்தது. தற்போது செயின்ட் பிரான்சிஸ் டிசேல்ஸ் பப்ளிக் ஸ்கூல், எலக்ட்ரானிக் சிட்டி, கத்தீட்ரல் பள்ளி, ரிட்மாண்ட் சாலை, சிக்ஷா சாகர், சஞ்சய் நகர் மற்றும் வேறு சில பள்ளிகள் லோகஸ் செயலியை தங்கள் பள்ளியில் அறிமுகம் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

"ஒரு சில மாதத்தில் இந்த எண்ணிக்கையை 25 ஆக உயர்த்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு" என்கிறார்கள் அவர்கள்.

இந்தக் கருவியை அவர்கள் விற்பனை செய்வதற்காக பள்ளிகளை அணுகி வரும் போதிலும், பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் இணையதளத்தின் மூலமாக லோகஸை வாங்கலாம். இந்தச் செயலி கூகுள் பிளே மூலம் கிடைக்கும் என்றாலும் இதற்காக உள்ள அடையாள அட்டையை விலைக்குத்தான் வாங்க வேண்டும்.

சவால்கள்

தற்போது இதில் 8 பேர் செயல்பட்டு வருகின்றனர். இதில் விஸ்வநாத் உட்பட 5 பேர் தொழில்நுட்பப் பிரிவிலும், யுஐ மற்றும் யுஎக்ஸ்சில் ஒருவரும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் ரிதீஷ் உட்பட் இருவரும் உள்ளனர்.

இதன் நிறுவனர்கள் மற்றும் அவர்களது குழுவினர் சில சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்."எதுவும் இல்லாதிருந்த நிலையில் இருந்து தற்போது ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இந்தச் செயலியையும் அதன் வடிவமைப்பையும் உருவாக்கும் போது நாங்கள் பல ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது" என்கிறார் ரிதீஷ்.

நிறுவனத்தின் தொடக்க நிலையில் வருவாய் எதுவும் இல்லை என்பதால் எங்களது குழுவினரை ஊக்கத்துடன் வைத்துக் கொள்வது ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. "நாங்கள் சிக்கலில் இருப்பதை எங்கள் குழுவினரும் அறிந்து வைத்திருந்தனர். எங்களது குழுவில் இருப்பவர்கள் திறன் வாய்ந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பேசி அவர்களை ஊக்கப்படுத்தியது எங்களுக்கு பெரிதும் உதவியது. இதனால் குழுவின் நம்பிக்கையும் அதிகரித்தது என்கிறார் ரிதீஷ்.

ரிதீஷ் மற்றும் விஸ்வநாத் தங்களுக்கு வெறும் பணத்தை மட்டும் கொடுக்காமல் அதற்கும் மேலாகத் தரும் சரியான ஒரு முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளனர். லோகஸ் தவிர மேலும் இரண்டு செயலிகளை உருவாக்குவதற்காக செயல்பட்டு வரும் அவர்கள் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர்.

இணையதள் முகவரி: Locus App