சாதரண குடும்பத்தில் பிறந்து, திறமையால் மட்டும் பாலிவுட் நகைச்சுவை பிரபலம் ஆன கபில் ஷர்மா! 

0

கபில் ஷர்மா; இன்று ஹிந்தி ரசிகர்களிடையே பிரபலமான ஸ்டாண்ட்-அப் காமெடியன். டிவி மூலம் எல்லாருடைய வீட்டிலும் அறிந்த முகமான இவர், இந்த இடத்தை அடைய பல இன்னல்களை தாண்டியே வந்துள்ளார். தொடர் போராட்டங்களை வெற்றிக்கண்டு பல்லாயரிக்கணக்கான நெஞ்சங்களை தன் நகைச்சுவை மூலம் கவந்தவர் கபில் ஷர்மா. 

கபில், அம்ரித்சரில் ஒரு சுமாரான நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தந்தை கான்ஸ்டபிளாக இருந்தார், தாய் இல்லத்தரசியாவார். 1997-ம் ஆண்டு கபிலின் தந்தைக்கு கேன்சர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர் கல்லூரியில் இருந்தார். 2004 தந்தை காலமாக கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள் கபில் மற்றும் அவரது குடும்பத்தினர். உற்சாகமான, அதிக நகைச்சுவையுணர்வு கொண்ட கபிலின் அப்பாவே அவரின் முன்மாதிரி என்றே அடிக்கடி சொல்வார்.

பட உதவி: Socioclick
பட உதவி: Socioclick

கபில், அம்ரித்சரில் உள்ள மாடல் டவுன் பள்ளியில் படித்துவிட்டு, அங்குள்ள ஹிந்து கல்லூரியில் பட்டம் முடித்தார். அவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது தன் முதல் வேலையை செய்ய தொடங்கினார். ஒரு டெலிபோன் பூத்தில் பணியாளராக இருந்து தன் செலவுக்கு வருமானம் ஈட்டினார். இந்தியா டிவி நியூஸ் செய்திகளின் படி, இரவு நேர விடுதிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி சம்பாதித்துள்ளார் கபில் ஷர்மா.

கல்லூரியில் இருந்தபோது கபில், நடிப்பு கற்க ஆசைப்பட்டார் ஆனால் அதற்கான பணம் இல்லாததால் கைவிட்டார். ஆனால் கல்லூரி விழாக்கள், இளைஞர்கள் போட்டிகள் என பல இடங்களில் பரிசுகளும், பட்டங்களையும் குவித்தார். அதில் அவருக்கு படிப்பிற்கு நிதியுதவி கிடைத்தது.

பட்டத்தோடு, கலை மற்றும் கம்யூட்டர் சயின்சில் டிப்ளோமாவையும் முடித்தார் கபில். டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் தெரிவித்த அவர்,

”நான் வர்த்தக கலையும் கற்கவில்லை, கணினி பற்றியும் படிக்கவில்லை. அப்போது என் அப்பாவிற்கு உடல்நிலை மோசமாக போனதால், என் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று, தியேட்டர் சம்பந்தமாக பயிற்சி அளித்து சம்பாதித்தேன். என் மாணவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நகைச்சுவை கலந்து பேசுவதை எல்லாரும் விரும்பி பார்ப்பார்கள். அதுவே எனது எதிர்காலம் என்று அப்போது முடிவு செய்தேன்.”

Laughter Challenge’ என்ற ஒரு பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பி, அதற்கான ஆடிசனுக்கு சென்றுள்ளார். அம்ரித்சரில் நடந்த போட்டியில் நிராகரிக்கப்பட்டார் கபில். இருப்பினும் விடாமுயற்சியாக நண்பர்களின் வேண்டுகோள்படி, டெல்லி சென்று ஆடிசனில் கலந்துகொண்டு அதில் தேர்வானார். பல சுற்றுகளை வென்று, இறுதியில் அப்போட்டியின் வெற்றியாளராக 2007-ம் ஆண்டு வெளிவந்தார் கபில் ஷர்மா.

இது கபில் வாழ்வின் ஆரம்பமே. மேலும் வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கும், ‘காமெடி சர்கஸ்’ என்ற ஒரு புது நிகழ்ச்சி கிடைத்தது. அந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆறு முறை தொடர்ந்து வெற்றியாளராக தேர்வாகி எல்லார் மனதையும் கவர்ந்த நகைச்சுவையாளர் ஆனார் கபில்.

இத்தனை வெற்றி கிடைத்தும், திருப்தி அடையாத கபில், தன் திறமையை மேலும் வெளிப்படுத்த எண்ணி, தான் சம்பாதித்த வருமானத்தில் தன் சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்கினார். ’‘K9 Productions’ என்ற தயாரிப்பு நிறுவனமான அது, கலர்ஸ் சேனலுடன் ஒப்பந்தம் செய்து ‘காமெடி நைட்ஸ் வித் கபில்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார். பல பிரபல நிகழ்ச்சிகளை தோற்கடித்து டிஆர்பி எகிர, வருமானமும், பிரபலமும் கபிலுக்கு நாடெங்கும் குவிந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் நடிகர்கள் ஷாருக் கான், அமிதாப், சல்மான் என எல்லாருமே கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு.

என்டிடிவி பேட்டியில் பேசிய கபில்,

“இந்தவித நகைச்சுவை நன்றாக ஹிட் ஆகியுள்ளது. வயது வேறுபாடின்றி பார்வையாளர்கள் எல்லாருக்கும் பிடிக்கும் விதம் இதை தயாரித்திருந்தோம். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவிற்கு, தவறான அர்த்தமுள்ள காமெடியாக இல்லாமல் இதை திட்டமிட்டோம். பொது மக்களுக்கு தொடர்புடைய விஷயங்களை தொட்டு காமெடி செய்ததால் எல்லாருக்கும் இது பிடித்துவிட்டது.”

கபிலின் இந்த ஷோ பிரமாதமாக சென்று கொண்டிருந்த போது ஒரு சமயம், அவரது செட் தீப்பற்றிக்கொண்டு அதிலுள்ள எல்லாம் பாழாகிவிட்டது. பெருத்த நஷ்டம் மற்றும் பின்னடைவை சந்தித்த அவர் மீண்டும் ஒரு செட்டை உருவாக்கினார். அந்த பிரச்சனை தீர்ந்து கொஞ்ச நாளில், சேனலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த ஷோ பாதியில் நிறுத்தப்பட்டது.

உலகமுழுதும் ரசிகர்களை பெற்ற கபில் ஷர்மா, அவர்களை வருத்தத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. அதனால் சோனி டிவி உடன் இணைந்து ‘தி கபில் ஷர்மா ஷோ’ என்ற புதிய தொடரை தயாரித்து வழங்கினார்.

”ஒரு டிவி ஷோவில் பணிபுரியும் போது ஏகப்பட்ட பிரச்சனைகளும், சவால்களும் இருக்கிறது. ஆனால் பல லட்சம் மக்களின் பேராதரவையும், அன்பான வாழ்த்துக்களையும் பெற்றவுடன் அந்த கஷ்டங்கள் எல்லாம் மறந்துவிடுகிறது,” என்கிறார் கபில்.

கபில் தனது ஷோவோடு தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்பாஸ்-மஸ்தான் இயக்கத்தில் நடிக்கிறார் அவர். ஃபோர்ப்ஸ் இந்தியா ‘செலிபிரிட்டி-100’ பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளார் கபில். மேலும் அவரை அதிக பிரபலம் என்ற வகையில் ஏழாவது இடத்திலும், வருமான அடிப்படையில் 11-வது இடத்திலும் குறிப்பிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இந்தியா. அவரின் இந்த அபார வெற்றியானது, தன்னம்பிக்கை, ஊக்கம், கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனே என்று தெளிவாகத் தெரிகிறது. 


Related Stories

Stories by YS TEAM TAMIL