சியாச்சின் ராணுவ வீரர்களுக்கான ’மேட் இன் இந்தியா’ சிறப்பு உடைகள்!

0

உறையவைக்கும் குளிரில் பயன்படுத்துவதற்கான பிரத்யேக உடை, மலையேற்றத்திற்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 800 கோடி ரூபாய் செலவிடுகிறது. 

தற்போது இதற்கான சிறப்பு ஆடைகள், தூங்குவதற்கான கூடாரங்கள், உலகின் உயரமான பயங்கரமான போர்க்களமான சியாச்சின் பகுதியில் நியமிகப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கான உபகரணங்கள் போன்றவற்றை தயாரிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

’மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

16,000 அடி முதல் 20,000 அடி உயரம் கொண்ட சியாச்சின் மற்றும் டோக்கா லாம் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் இந்த புதிய உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் 1984-ம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் தங்களது ராணுவத்தை நிலை நிறுத்தி வருகின்றனர். 

பெயர் அறிவிக்கப்படாத தனியார் துறையைச் சேர்ந்த இந்திய நிறுவனம் வாயிலாக இந்த உள்நாட்டு உற்பத்தியானது மேற்கொள்ளப்பட உள்ளது. 

தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 கோடி ரூபாய் வரையிலான செலவு மிச்சமாகும் என ராணுவம் நம்பிக்கை தெரிவிக்கிறது. 

சிறப்பு உடைகள், பனிப்பாறையில் ஏற பயன்படுத்தும் உபகரணங்கள், சிறப்பு காலணிகள், பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க உதவும் கருவிகள், மலையேற்ற உபகரணங்கள், தூங்கும் கூடாரங்கள் போன்றவை இதில் அடங்கும் என என்டிடிவி தெரிவிக்கிறது.

தற்சமயம் சியாச்சின் பனிப்பாறையில் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் ஸ்விஸ் குளிர்கால உடைகள் மற்றும் கையுறைகளை பயன்படுத்துகின்றனர். இறக்குமதி செய்யப்படும் உடைகள் அதிக உயரங்களில் இருக்கும்போது பயன்படுத்த பெரியதாகவும் அசௌகரியமாகவும் இருப்பதை ராணுவ அதிகாரிகள் கவனித்தனர். 

ஸ்விஸ் உடைகள் மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக இருக்கும் குளிரில் ராணுவ வீரர்களுக்கு உதவும். மூன்றடுக்குகளைக் கொண்ட இத்தகைய ஆடை ஒன்றின் விலை 35,000 ரூபாயாகும் என டிஎன்ஏ இண்டியா தெரிவிக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றான டோக்கா லாம் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள ராணுவவீரர்களும் இந்த உடைகளைப் பயன்படுத்துகின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA