தொழில்முனைவுப் பயணத்திற்கு வழிகாட்டும் 5 ஆலோசனைகள்!

0

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மும்பையின் செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ASCENT பெண் தொழிலதிபர்கள் மாநாட்டின் (ASCENT Women BizMakers conference) முதல் பதிப்பில் அஞ்சலி பன்சால், சேத்னா கலா சிங், நேஹா மோத்வானி ஆகியோர் வெளிப்படையான கருத்துக்களையும் குறிப்பாக சில முக்கிய வாழ்க்கைப் பாடங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

மரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் மரிவாலா அவர்களின் லாப நோக்கமற்ற நிறுவனமான ASCENT ஃபவுண்டேஷன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். தனிப்பட்ட முயற்சியில் ஸ்டார்ட் அப் துவங்கி வளர்சியடைந்து வரும் தொழில்முனைவோர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். தொழில்முனைவோர் சுற்றுச்சூழலைச் சேர்ந்த அனுபவம் மிக்க பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்களது பயணத்தில் கற்றறிந்த படிப்பினைகள் பகிர்ந்துகொண்டனர். 

இதிலிருந்து ஐந்து முக்கிய படிப்பினைகள் மற்றும் ஆலோசனைகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தற்செயலாக உருவாகும் திட்டத்தை பரிசீலிக்கலாம்

ஃபிட்டர்னிட்டி (Fitternity) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான நேஹா மோத்வானி ஒரு காலகட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டம் குறித்த தெளிவுடன் இருந்தார். அதாவது அப்போது அவர் பணியாற்றிய நிறுவனத்தின் சிஇஓ ஆகவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. சுயமாக தொழில் துவங்கவேண்டும் என்கிற எண்ணமே அவருக்கு தோன்றியதில்லை. ஆனால் திருமணம் முடிந்து இடம்பெயர்ந்ததும் சந்தையில் காணப்பட்ட இடைவெளி அவருக்கு ஒரு வணிக வாய்ப்பு இருப்பதை உணர்த்தியது. அதை பயமின்றி பயன்படுத்திக் கொண்டார்.

”இந்த திட்டம் தற்செயலாகவே தோன்றியது. நான் உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள விரும்பினேன். ஆனால் ஜிம் செல்லாமலோ அல்லது ஒரு பயிற்சியாளரை நியமிக்காமலோ உடற்பயிற்சி மேற்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தேன். பர்ப் (Burrp) போன்றோ சொமேட்டோ போன்றோ உடற்பயிற்சிக்கென ஒரு பிரத்யேக சந்தைப்பகுதி ஏன் இல்லை என்பது குறித்து சிந்தித்தேன். சந்தையில் இடைவெளி காணப்பட்டது. ஆனால் சந்தையில் செயல்படத் துவங்கிய ஸ்டார்ட் அப்கள் மற்றும் புதுமைகளை கவனிக்கையில் செயல்பட இதுவே தக்க தருணம் என்பதை உணர்ந்து வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்,” என்றார். 

உங்களது திட்டத்தை பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்!

ஒரு தொழில்முனைவோர் அல்லது புதுமை படைப்போர் தனது திட்டம் குறித்தே அதிகமாக சிந்தித்து அதில் பிடிவாதமாக இருந்தால் நடுநிலையுடன் சிந்திக்கும் இயல்பை இழந்துவிடுவார்கள். இதனால் பயணத்தில் இருக்கும் சவால்களை கணிக்க தவறுவதற்கு வாய்ப்புள்ளது. 

”தற்செயலாக உதித்த எனது திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து வணிகமாக மாற்ற நினைத்தபோது இது குறித்த தேவை சந்தையில் உள்ளதா என்கிற கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன். நான் உருவாக்கும் திட்டம் குறித்தோ அல்லது என்னுடைய திறன் குறித்தோ எனக்கு ஒரு மாயத்தோற்றம் இருக்கலாம். ஆனால் சந்தையின் தேவை குறித்த புரிதல் தெளிவாக இருக்கவேண்டும். எனவே லிங்க்ட் இன், ஃபேஸ்புக், நிகழ்வுகள், குழுக்கள் போன்றவற்றில் கிட்டதட்ட ஆறு மாதம் செலவிட்டு 700-க்கும் மேற்பட்டோருடன் உரையாடி என் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதற்கான தேவை சந்தையில் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்,” என்றார்.

முதலில் தயாரிப்பு அல்லது சேவையை வடிவமைத்துவிட்டு பிறகு வாடிக்கையாளர்களிடையே அதற்கான தேவைகளை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்!

மன் தேஷி மஹிலா சஹகாரி பேங்க் மற்றும் மன் தேஷி ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவரான சேட்னா கலா சின்ஹா தான் செயல்பட விரும்பிய சந்தையை ஆய்வு செய்தது குறித்து நினைவுகூர்ந்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்பிற்கு பழக்கப்படாத கிராமப்புற பெண்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் பகுதியில் இவர் செயல்பட விரும்பினார். இவர் இலக்காகக் கொண்டிருந்த கிராமப்புற பெண்களில் சிலர் பணம் கடனாக கொடுப்போர் அதிக வட்டி வசூலித்தாலும் கவலையில்லை என்றனர். இதை அவர்கள் ஏற்பதற்குக் காரணம் அவர்களுக்கு எப்போது பணத் தேவை ஏற்பட்டாலும் பணம் கிடைக்கும். அதே போல் எப்போது வேண்டுமானாலும் அந்தத் தொகையை திரும்ப கொடுக்கலாம். இதில் எந்தவித நிர்வாக செயல்முறைகளும் இடம்பெறுவதில்லை. தேவை எழும்போது கூடுதல் பணம் அவர்கள் கையில் கிடைக்கும். வழக்கமான வங்கி செயல்பாடுகள் அவர்களுக்கான தீர்வாக இல்லாமல் தடங்கலாக இருக்கிறது என்பதே இவர்களுடைய கண்ணோட்டம்.

"ஒரு சேவைக்கான செயல்முறையை வடிவமைக்கும்போது அதை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைப்பது அவசியமாகும். இதுவே எனக்கும் எங்களது குழுவிற்கும் ஒரு மிகப்பெரிய படிப்பினையாக அமைந்தது. வீட்டிற்கே சென்று வங்கி சேவையை அளிப்பது, பணம் கொடுத்தல் மற்றும் திரும்பப்பெறும் முறைகள் போன்றவற்றை அந்தப் பெண்கள் ஏற்கெனவே பழக்கப்பட்ட முறையிலேயே நாங்கள் வடிவமைத்தோம். நீங்கள் வடிவமைக்கும் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு அந்தப் பெண்களை மாற்றுவதற்கு பதிலாக அவர்களை அணுகி பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கும் செயல்முறையை வடிவமைப்பதே சிறந்ததாகும்,” என்றார் சேத்னா.

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்க விரும்பினால் அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்படவேண்டும்

டிபிஜி ப்ரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தின் முன்னாள் க்ளோபல் பார்ட்னர் & எம்டி மற்றும் நியூயார்க்கிலும் மும்பையிலும் செயல்படும் McKinsey & கம்பெனியின் உத்தி ஆலோசகரான அஞ்சலி பன்சால் தொழில்முனைவோர் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார். நாளைய மரிகோ அல்லது யூனிலிவர் நிறுவனமாக திகழவேண்டுமெனில் அவ்வப்போது செயல்முறைகளை வடிவமைக்கும் வழக்கமானது வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டத்திற்கு மேல் கைகொடுக்காது என்பதை தொழில்முனைவோர் உணர வேண்டும் என்றார்.

”வெற்றிகரமான நிறுவனங்கள் எதுவுமே யதேச்சையாக உருவாக்கப்பட்டதல்ல. முறையாக செயல்படவும் வளர்ச்சியடையவும் உதவக்கூடிய செயல்முறையை நீங்கள்தான் உருவாக்கவேண்டும். அமீரா பத்து மில்லியன் அளவு இருந்த வாடிக்கையாளர் தொகுப்பை ஒரு பில்லியனாக உயர்த்திய பயணத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் பழைய செயல்முறைகள் அதிக வளர்ச்சிக்கு உதவாது என்பதையும் அதற்கான புதிய மார்கத்தை வடிவமைக்கவேண்டும் என்பதையும் உணர்ந்திருப்பார். இது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. பிக் டேட்டா பற்றியும் நான் குறிப்பிடவில்லை. 

எளிதாகச் சொல்வதானால் உங்களது நிதி மற்றும் கணக்கியல் சார்ந்த செயல்முறைகள், நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்படும் தணிக்கைகள் போன்றவற்றையே நான் குறிப்பிடுகிறேன். இவற்றை முறையாக ஆவணப்படுத்தவேண்டும். நிதி மற்றும் கணக்கியல். தரவுகள், நிர்வாகத்திற்கான தகவல் முறைமை (எம்ஐஎஸ்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

ஆர்வம் அல்லது நிபுணத்துவம் இல்லாத பணிகளுக்கு தகுந்த நபரை பணியிலமர்த்திக் கொள்ளலாம்

வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதற்கு முற்றிலும் மாறாக பணி தொடர்பான பல்வேறு செயல்முறைகள் இருக்கும். அந்தப் பகுதியில் உங்களுக்கு ஆர்வமோ அல்லது நிபுணத்துவமோ இருக்காது.

”தொழில்முனைவோர் வளர்ச்சி அடைவதிலும் செயல்பாடுகளை விரிவு படுத்துவதிலும் வருவாயை அதிகரிப்பதிலுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள். சில பணிகளில் ஆர்வம் அல்லது நிபுணத்துவம் இல்லாததால் சலிப்பூட்டுவதாக அமையக்கூடும். இதற்கு தகுந்த நபர்களை பணியிலமர்த்துவதே சிறந்தது. முழுநேரமாக இல்லையென்றாலும் பகுதி நேரமாக சிஎஃப்ஓ-வை நியமித்துக் கொள்ளலாம். அதே போல் செயல்முறைகளை முறையாக திட்டமிடவும் தகுந்த நபரை நியமிக்கலாம்,” என்றார்.

பெண் தலைவர்கள் அதிகரித்து வந்தாலும் பெண் தொழில்முனைவோர்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும். ASCENT ஃபவுண்டேஷன் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல பெண் தொழில்முனைவோர்கள் திறம்பட செயல்பட்டு தலைவர்களாக விளங்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் ASCENT ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் மரிகோ லிமிடெட் தலைவரான ஹர்ஷ் மரிவாலா.

ஆங்கில கட்டுரையாளர் : பிஞ்சல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL