தமிழ்நாட்டில் மெல்ல அழிந்து வரும் பாரம்பரிய பனை ஓலை கைவினைத் தொழில்!

0

மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் பழமை வாய்ந்த பல்வேறு தொழில்கள் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் பகுதியான தம்மம்பட்டியில் அமைந்திருக்கும் காந்திநகருக்கு சென்றபோது பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் கைவினைத் தொழிலைப் பார்க்க நேர்ந்தது. இதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று சிந்தித்தேன். 

பல காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கைவினை தொழிலை மீண்டும் கண்டறிதல்

இந்த சிறிய நகரில் குறிகிய பாதையில் என்னுடைய ஸ்கூட்டரில் பயணித்தவாறே காந்திநகரை சென்றடைந்தோம். மலையின் மேலே வரிசையாக கூரை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளையும் பார்த்தேன். ஆண்களும் பெண்களும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். அந்தப் பகுதியே அமைதியாக காணப்பட்டது. காந்திநகர் மக்கள் வசித்து வந்த மலையின் மீது செல்ல வெள்ளைநிற சிமெண்ட் பாதையில் சென்றோம்.

நான் முதலில் சந்தித்த நபர் நதியா. பிரகாசமான மஞ்சள் நிற சேலையில் கைகளில் மூன்று வயது பெண் குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு என்னை வரவேற்றார். அங்கு பெண்கள் ஒரு குழுவாக எனக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரம் உரையாடிய பிறகு அவர்களது படைப்புகளை பார்க்க விருப்பமுள்ளதா என கேட்டனர். நான் அவர்களைத் தொடர்ந்து வீட்டின் பின்புறத்திற்குச் சென்றேன்.

பனை ஓலை பின்னும் இந்த கைவினைத் தொழில் பல தலைமுறைகளைக் கடந்து வந்ததாகும். மக்கள், குறிப்பாக பெண்கள் பசுமையான மற்றும் உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு கூரைகள், கொட்டகைகள், கதவு போன்றவற்றை பின்னுகின்றனர். உலர்ந்த ஓலைகள் ஒன்றிணைக்கப்பட்டு வீடுகளின் மேற்கூரைகளாகவும் கதவுகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பசுமையான ஓலைகள் பண்டிகைக் காலத்தில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

”என்னுடைய பாட்டி ஓலைகளை நெய்வதையும் பின்னுவதையும் பார்த்திருக்கிறேன். என்னை அறியாமலேயே நானும் அவருடன் நெய்யத் துவங்கிவிட்டேன்,” 

என்று தனது இளம் வயது ஞாபகங்களை நினைவுகூர்ந்தார் இந்த கிராமத்தைச் சேர்ந்த சந்திரா. இவர் கடந்த 40 ஆண்டுகளாக தென்னை ஓலைகளை நெய்து வருகிறார்.

இங்குள்ள மக்கள் பத்து கட்டு ஓலைகளை வாங்கிக்கொள்கின்றனர். ஒவ்வொரு கட்டிலும் சுமார் 50 ஓலைகள் இருக்கும். அதன் பிறகு இந்த ஓலைகளை மிருதுவாக்க தண்ணீரில் ஊறவைக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. 

“இங்கு தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஓலைகளை ஊறவைக்க குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு பக்கெட் தண்ணீர் எங்களுக்குத் தேவைப்படும். இல்லையெனில் அந்த ஓலைகள் சுலபமாக உடையக்கூடியதாக மாறி நெய்வது கடினமாகிவிடும்,” என்றார் சந்திராவின் கணவர் வீரமுத்து.

இந்த மக்கள் ஓலைகளை நெய்வதுடன் எஞ்சியிருக்கும் ஓலைகளைக் கொண்டு துடைப்பம் செய்கின்றனர். உலர்ந்த ஓலைகள் பேப்பர் வெட்டும் கருவியின் மூலம் மெல்லிய இழைகளாக வெட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கூரைகளாக வேயப்படும். சில சமயம் தென்னை மரத்தில் எஞ்சியிருக்கும் உலர்ந்த கொப்பரை தேங்காய் கொண்டு வீட்டு உபயோகத்திற்காக தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

தண்ணீர் பிரச்சனை

மலைப் பகுதியாக இருப்பதால் இங்கு நிலத்தடி நீர் போதுமானதாக இருப்பதில்லை. எனவே இங்கு குடியிருப்போர் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து தண்ணீர் வாங்குகின்றனர். 25 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்பதால் அடுத்த முறை தண்ணீர் விநியோகிக்கப்படும் வரை தண்ணீரை சேமித்து வைப்பதற்கான வழிமுறைகளை இவர்கள் ஆராயவேண்டியிருந்தது.

”எங்களிடம் தண்ணீரை சேமிக்க முறையான தொட்டி இல்லை. சேமித்த தண்ணீர் மூடப்படாமல் திறந்தவாறே இருப்பதால் கொசுக்கள் அதிகமாகி அதிக நோய்கள் பரவுகின்றன,” என்றார் நதியா. 

இவரது மகளுக்கு கடந்த ஆண்டு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. நதியாவும் இந்தப் பகுதியில் வசிக்கும் மற்றவர்களும் தங்களது குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்து அதிக கவலை கொள்கின்றனர். எனவே நோயற்ற வாழ்க்கைமுறைக்கு மாற மெல்ல இந்த தொழிலை விட்டுவிட முயற்சித்து வருகின்றனர்.

”எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. எங்களது மக்கள் நோய்வாய்ப்படுவது தெரிந்தும் பாரம்பரியமான இந்தத் தொழிலைத் தொடரவேண்டும் அல்லது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மாற சிறப்பான வருவாய் ஈட்டக்கூடிய மாற்று பணியை ஆராயவேண்டும்,” என்றார் அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண்.

ஒட்டுமொத்த சூழல்

இந்தத் தொழில் மெல்ல அழிந்து வருகிறது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. உலர்ந்த பனை ஓலைகள் கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இன்று மேற்கூரைகளுக்கும் கதவுகளுக்கும் மக்கள் ப்ளாஸ்டிக் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பயன்பாட்டையே விரும்புகின்றனர்.

”இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மக்களின் விருப்பமும் முன்னரிமையும் மாறி வருகிறது,” என்றார் சந்திரா. 

இவரது இரண்டு மகன்களும் திருமணமாகி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த ஓலைகள் சார்ந்த தொழில் மீது இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஆர்வம் ஏற்படவில்லை என்பதை இவரது கணவர் மனமுடைந்து விவரித்தார். “குழந்தைகள் பெரிதாக எதிர்பார்க்கின்றனர். இந்தப் பணியை முக்கியமில்லாத ஒன்றாக கருதுவதால் இதைக் கற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை,” என்றார்.

பத்து தலைமுறைகள் கடந்து வந்த ஒரு தொழில் இவ்வாறு மறைந்துபோவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. இந்தக் கலையின் நுணுக்கங்களை பெற்றுக்கொள்ள அடுத்த தலைமுறையினர் யாரும் முன்வராததால் இந்தத் தொழில் அழியும் தருவாயில் உள்ளது.

”இது வருத்தமான விஷயம்தான். ஆனால் என்ன செய்வது? 30 ஆண்டுகளாக இந்த மரங்களில் ஏறிதான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்,” என்று வீரமுத்து கைகளில் ஓலைகளை பிடித்தவாறே குறிப்பிட்டார். 
”இன்னும் சில ஆண்டுகளில் இப்படி ஒரு தொழில் இருந்ததையே யாரும் அறியமாட்டார்கள். இது எத்தனை கடினம் என்பதையோ இதன் முக்கியத்துவத்தையோ யாரும் அறியமாட்டார்கள். என்னைப் போல சிலர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்,” என்றார் தழுதழுத்த குரலில்.

படித்த இளைஞர்கள் லாபகரமான பணியைத் தேடி கிராமங்களை விட்டு வெளியேறுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் இத்தகைய தொழில் நிலைத்தன்மையை இழந்து வருகிறது. இதைத் தொடர விரும்புவோரும் தண்ணீர் பற்றாக்குறை, சேமிக்கத் தேவையான அமைப்பு இல்லாமை, கால்வாய் வசதி இல்லாமை போன்ற சவால்களைக் கையாளவேண்டிய நிலை உள்ளது.

இத்தனை அழகு நிறைந்த கைவினைத் தொழில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருவது வருத்தமளிக்கிறது. சந்தையில் ப்ளாஸ்டிக் அதிகளவில் காணப்படுவதால் இவர்கள் நிலைத்திருப்பது மேலும் கடினமாகிறது.

வளர்ச்சி என்பது பல தலைமுறைகளாக ஈடுபட்டிருந்த பாரம்பரிய தொழில்களை இழப்பதுதானா அல்லது இவற்றை பாதுகாக்க வேறு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா என்பதை ஆராயவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ரீவித்யா வெங்கட்ராமன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL