ஊட்டச் சத்து குறைபாட்டுக்குத் தீர்வு காணும் 'ஜன்தா மீல்ஸ்'

0

நெதர்லாந்தைச் சேர்ந்த என்வியு எனும் அமைப்பின் செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்காக கடந்த 2013ல் இந்தியா வந்தார் ஜெசி வான் டெ ஸாண்ட். இவர் ஒரு டச்சுக்கார முதலீட்டாளர். ஜெசி வான் டெ அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே தங்கப் போகிறார் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. எச்சிஎல், ஆர்ஆர் பஞ்ச் குரூப் போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்த்து அந்தக் கார்ப்பரேட் உலகத்தை விட்டு வெளியேறி இருந்த பிரபாத் அகர்வாலைச் சந்தித்த பிறகுதான் ஜெசியின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. 

அடித்தட்டு மக்கள் மத்தியில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தார் அகர்வால். அவருடன் நடந்த சந்திப்பின் விளைவாக ஜெசி வசதியான அவரது வேலையை விட்டு விட்டு 2013 மே மாதம் இந்தியாவுக்கு வந்து 'ஜன்தா மீல்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் சிஇஓ ஆகவும் மாறினார். ஜன்தா மீல்ஸ் அதாவது சாப்பாடு சேரிப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு சுகாதாரமான ஊட்டச் சத்து மிக்க உணவை 20 ரூபாய்க்கு வழங்கக் கூடியது!ஜனதா சாப்பாட்டை சுவைக்கும் ஸாண்ட், அகர்வால்
ஜனதா சாப்பாட்டை சுவைக்கும் ஸாண்ட், அகர்வால்

எத்தகைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறது ஜன்தா மீல்ஸ்?

நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் வரையில் சுற்றும் ஒரு ஆட்டோ டிரைவர் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுத்தான் தனது வயிற்றை நிரப்பிக் கொள்கிறார். பெரும்பாலான நேரங்களில் சாட் அல்லது சோலா பட்டர் போன்ற சுகாதாரமற்ற ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைச் சாப்பிடுகிறார். இது ஒரு அரிதான உதாரணம் அல்ல. டிரைவர்கள், கிளீனர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், செக்கியூரிட்டி வேலை பார்ப்பவர்கள் என நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய எண்ணிலடங்காத தொழிலாளர்களின் நிலை இதுதான்.

 “தினந்தோறும் ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடக் கூடியவர்களின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களது வருமானமும் குறையும். குறைந்த வருமானத்தில் அவர்களால் ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிட முடியாது. இது வெளியே வர முடியாத ஒரு விஷ வளையம்” என்கிறார் ஸாண்ட்.

இந்தப் பிரச்சனையின் பரிமாணம் மிகப் பெரியது என்கிறார் அகர்வால்,

குர்கானை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மக்கள் தொகை 25 லட்சம். இதில் 15 லட்சம் பேர் அமைப்பாக்கப்படாத துறைகளில் வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளிகள்தான். இதே டெல்லியை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகம். இதன் அர்த்தம், சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் நிரந்தரமான வருமானம் இல்லாமல், மருத்துவ வசதிகள் இல்லாமல், காப்பீடோ ஓய்வூதியமோ இல்லாமல் வேலை உத்தரவாதமில்லாமல் தான் வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதுதான். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரையில் சம்பாதிக்கக் கூடிய ஒருவர் ஒரு நேரச் சாப்பாட்டிற்கு 60 ரூபாய் செலவழிப்பது சாத்தியமே இல்லை. இந்த இடத்தில் நான் ஒரே ஒரு நகரத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சுகாதாரமான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க வந்தது தான் ஜன்தா சாப்பாடு. டெல்லியில் உள்ள மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் உணவை வழங்குகிறது. 20 ரூபாய்க்கு ஒருவர் சாதம் மற்றும் டால் அல்லது ரொட்டி மற்றும் சப்ஜியை வாங்கிக் கொள்ளலாம். 30 ரூபாய் கொடுப்பவர்களுக்கு அதனுடன் சாலட்டும் கிடைக்கிறது.

ஜன்தா சாப்பாடு எப்படி செயல்படுகிறது?

ஜன்தா சாப்பாடு இரண்டு விதங்களில் செயல்படுகிறது. ஒன்று நேரடியாக ஜன்தா சாப்பாடு நிறுவனமே வாடிக்கையாளர்களிடம் சாப்பாட்டைக் கொண்டு சேர்க்கும் கடைகளை வைத்திருப்பது. மற்றொன்று பிரான்ச்சைசி மாடல். 8ல் இருந்து 16 இருக்கைகள் வரையில் உள்ள கடை வைத்திருக்கும் சிறு தொழில் முனைவர்கள் இதில் ஈடுபடுகின்றனர். இந்த சாப்பாடு ஒரே இடத்தில் தயாராகிறது. நாடு முழுவதிலுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மதிய உணவு தயார் செய்து கொடுக்கும் அக்சய பாத்திரா அறக்கட்டளையுடன் இணைந்து தனது சாப்பாட்டைத் தயார் செய்து கொள்கிறது இந்நிறுவனம். அக்சய பாத்திரா, தனது வேலைகளை தினமும் காலை 11 மணிக்கெல்லாம் முடித்து விடும். அதன் பிறகு பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடத்தை சாப்பாடை தயார் செய்ய பயன்படுத்துகிறார்கள். சிறு தொழில் முனைவர்களை ஊக்கப்படுத்தும் பணியையும் சிறப்பாகச் செய்கிறது ஜன்தா மீல்ஸ்.

திட்டமிடப்பட்ட சமையல் மற்றும் சமையலுக்கான பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்வதன் மூலம் இந்த நிறுவனத்தால் 20 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. ஜன்தா சாப்பாடு நிறுவனத்தின் பிரான்சைசிக்களாக இயங்கும் சிறு தொழில் முனைவர்கள் 70 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையில்தான் மூலதனம் போட வேண்டியிருக்கும். ஆனால் அவர்களால் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பாதிக்க முடிகிறது.

அமைப்பாக்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஜன்தா மீல்ஸ் தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது. பார்சல் சாப்பாடுகளை அந்த நிறுவனங்களுக்கு சாப்பாடை சப்ளை செய்கிறது. லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற 10 நிறுவனங்கள் ஜனதா சாப்பட்டைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களாக உள்ளன.

எதிர்காலத் திட்டம்

குர்கான் மற்றும் குருச்ஷேத்திராவில் 30 பிரான்சைசிக்களுடன் நாளொன்றுக்கு 15 ஆயிரம் சாப்பாடு சப்ளை ஆகிறது. அவர்களின் இணையதளம் சொல்லும் கணக்குப் படி நாளொன்றுக்கு மொத்தமாக 68 லட்சத்து 13 ஆயிரத்து 935 சாப்பாடுகள் விநியோகிக்கப்படுகின்றன.

அடுத்த மூன்று மாதங்களில், கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு தனது பணிகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது ஜன்தா மீல்ஸ். ‘ஜனதா மீல்ஸ் வேன்’களை அறிமுகப்படுத்தி நடமாடும் உணவகங்களை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சாதாரணத் தொழிலாளர்கள் அதிகமுள்ள இடங்களுக்கு அந்த நடமாடும் உணவகங்களைக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஜன்தா சாப்பாட்டின் தாக்கம் வெறும் எண்ணிக்கையில் இல்லை. எளிய மக்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற திருப்திதான். ஆனால் ஸாண்ட் மற்றும் அகர்வாலின் கவலையற்ற கனவுகளை மேலும் அதிகரிக்கிறது. அகர்வால் நினைவு கூர்கிறார், தொழிலாளி ஒருவரின் அனுபவம் இது.

 அவர் வேலைபார்க்கும் இடத்தில் ஜன்தா மீல்ஸ் கிடைப்பதில்லை. ஆனால் அவரது நண்பர் வேலை பார்க்கும் இடத்தில் தான அந்த சாப்பாடு கிடைத்ததால், அவர் மூலமாக அதைச் சாப்பிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனது உயர் அதிகாரிகளிடம் சொல்லி, ஜன்தா சாப்பாடு கிடைக்கும் இடத்திற்கு தனது வேலையை மாற்றிக் கொண்டார் அந்தத் தொழிலாளி. காரணம் என்ன? அவர் முழுமையான உணவை விரும்புகிறார்.

ரஞ்சித் கல்சின்ஹா எனும் 35 வயது செக்கியூரிட்டி கார்டு தனது அனுபவத்தை இப்படி விளக்குகிறார். “குர்கானில் உள்ள, சிக்கந்தர்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். ஆனால் ஜன்தா சாப்பாடு போன்று, விலை குறைவாக வீட்டு உணவு போல், சுவையான உணவு வழங்கும் ரெஸ்டாராண்டை நான் பார்த்ததே இல்லை. நியூட்ரிசனுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையே இருக்காது.”

ஆக்கம்: ஸ்வேதா விட்டா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”

இந்தூர் ஏழை குழந்தைகளுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு!