ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியான ஹல்தார், தன் கவிதைத் திறனால் பத்ம ஸ்ரீ விருது வரை உயர்ந்த கதை!

1

ஹல்தார் நாக், 67 வயது ஒடிசா கவிஞர் கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கவிதையில் ஒரு வரியைக் கூட எழுதத்தெரியாது. ஆனால் இப்போது அவர் எழுதியவை ஒடிசா சம்பல்பூர் பல்கலைகழகத்தில் பாடப்புத்தக்கத்தில் இடம்பெறப் போகிறது. ஹல்தார், பள்ளிப்படிப்பை மூன்றாம் வகுப்போடு விட்டு குழந்தை தொழிலாளியாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹல்தாரின் தந்தை 10 வயதில் இறந்துபோனார். குடும்பத்தை காப்பாற்ற வருமானம் ஈட்ட, அவர் வேலைக்குப் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. கடையில் சிறிது காலம் பணி செய்த பிறகு, அவர் கிராம மேல்நிலை பள்ளியில் சமையல் பணிகள் செய்ய சேர்ந்தார். அங்கே அவர் 16 வருடங்கள் பணிபுரிந்தார். சுயமாக தொழில் தொடங்கும் எண்ணம் கொண்ட ஹல்தார், பள்ளி அருகில் மாணவர்களுக்கு தேவைப்படும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை திறந்தார். அதற்கு 1000 ரூபாய் கடன் வாங்கி கடையை தொடங்கினார்.

கவிதைகள் நன்கு எழுதக்கூடிய ஹல்தாரின் பாடல்கள் உள்ளூரில் பிரபலமாக, பல பாட்டுகளை எழுதினார் அவர். ஞானபீட் விருது பெற்ற புலவர் சச்சிதானந்த ரெளத்ரே-வின் எழுத்துக்களை பார்த்து கற்றுக்கொண்டு, தானும் ஒரு பாட்டை எழுதினார் ஹல்தார். ‘தோடோ பர்கச்’ (பழமையான ஆலமரம்) என்ற தலைப்பில் பாட்டு எழுதி உள்ளூர் வார இதழில் பிரசூரம் ஆனது. 

அதில் ஊக்கம் கொண்டு மேலும் பல பாடல்களை எழுதினார். ஒடியா மொழியின் ஒரு அங்கமான சம்பல்புரி வகையின் ‘கோஸ்லி’ மொழியில் கவிதைகள் எழுதினார். ‘லோக் கப் ரத்னா’ என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. ஹிந்து செய்திகளின்படி அவர்,

"கவிதை என்பது வாழ்க்கையோடு உண்மையான தொடர்பும், மக்களுக்கு அதில் ஒரு செய்தியும் இருக்கவேண்டும்,” என்று ஹல்தார் கூறுவார்.

ஹல்தாரில் பாடல்களில் சமூக மாற்றம் மற்றும் சிந்தனைகள் இடம் பெற்றிருக்கும். அவர் எழுதிய அத்தனை கவிதைகளையும் ஒரு வரி மறவாமல் மீண்டும் உச்சரிப்பார். தான் பாடல் எழுதுவது பற்றி விவரித்த ஹல்தார்,

”நான் என் கவிதையை முதலில் என் மூளையில் தயார் செய்வேன். அதை மீண்டும் மீண்டும் உச்சரித்துப் பார்த்து, சரியான வரிகள் கிடைத்தவுடன், காதிற்கு சரியாக தோன்றும்போது, அதில் எனக்கு நம்பிக்கை மற்றும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே எழுதுவேன்,” என்கிறார். 

மேலும் விவரித்த அவர்,

“நான் ஒரு கவிஞன், பாடல்கள் எழுதுவது என் வேலை. அதை தொடர்ந்து செய்வேன். மற்றவை எல்லாம் தன்னால் நிகழ்பவை. பெரிதாக ஒன்றும் யோசிப்பதில்லை,” என்றார்.

ஹல்தாரைப் பொறுத்தவரை எல்லா எழுத்தாளருக்கும் சமூக பொறுப்பு வேண்டும் என்கிறார். 5 பிஎச்டி மாணவர்கள் இவரின் வாழ்க்கை மற்றும் பணியை தங்கள் ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளனர். கல்வி, ஒருவரின் வாழ்க்கை, தகுதி, இவை எதுவும் ஒருவரின் திறமைக்கும் வெற்றிக்கும் தொடர்பில்லை என்பதற்கு ஹல்தார் சிறந்த உதாரணம்.

கட்டுரை: Think Change India