'நாங்களும் போற்றப்பட வேண்டியவர்கள்’- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

0

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். சச்சின் டெண்டுல்கர், MS தோனி, விராட் கோலி போன்றோர்தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தெய்வம். அடுத்து எந்த மேட்சில் விளையாடப்போகிறார்கள், அவர்கள் அடுத்து எங்கே சுற்றுலா போகிறார்கள், எங்கே பயிற்சி எடுக்கப்போகிறார்கள், மனைவியுடன் எங்கே ஷாப்பிங் போகிறார்கள், காதலியுடன் எங்கே தென்பட்டார்கள் போன்ற விஷயங்கள் ஊடகங்களாலும் ரசிகர்களாலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், பெண் கிரிக்கெட்டர்கள் இவ்வாறு தெய்வங்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்பும் வெற்றியும் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு எட்டவில்லை.

ஜனவரி 31-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ட்வென்டி 20 மேட்சில் இந்தியா வெற்றிபெற்றதை உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் கும்மாளமிட்டு கொண்டாடினார்கள். அதே ஜனவரி மாதம் 29-ம் தேதி மெல்பர்ன் கிரிக்கெட் க்ரௌண்டில்(MCG) நடந்த ட்வெண்டி 20 மேட்சில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. இது அவர்களின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மோசமான வானிலை காரணமாக 18 ஓவராக குறைக்கப்பட்டது. டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றி இலக்கு 10 ஓவர்களில் 66 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு நோக்கி வேகமாக முன்னேறிய இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல், 69 ரன்கள் எடுத்து, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றிபெற்றனர். அணியின் தலைவர் மிதில் ராஜும் ஸ்மிரிதி மந்தனாவும் சேர்ந்து பேட்டிங் செய்து இலக்கை அடைந்தனர்.

ஜுலான் கோஸ்வாமி நான்கு ஓவர்களில் 16 ரன்கள், 2 விக்கெட்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது பெற்றார். இதற்கு மூன்று நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 26-ம் தேதி அடிலெய்டில் நடந்த ட்வெண்டி-20 தொடரில் 1-0 என்று இந்திய பெண்கள் அணி முன்னிலை பெற்றது. பெண்கள் ட்வென்டி-20 ஆட்டத்தில் இந்திய அணி இவ்வளவு ரன்களை சேஸ் செய்து வெற்றுபெறுவது இதுதான் முதல் முறை. ஆஸ்திரேலிய பெண்கள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இவர்களை எதிர்த்து ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் சேர்ந்து 81 ரன்கள் எடுத்தனர். மிதாலி முதல் ஓவரிலேயே வெளியேறினாலும், மற்ற இளம் வீரர்கள் கைகொடுத்தனர். 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 5000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்ததில் இங்கிலாந்தை சேர்ந்த சார்லெட் எட்வர்டை அடுத்து மிதாலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த சாதனை புரிந்த முதல் இந்தியர் மிதாலி ஆவார். 1999-ம் ஆண்டு டாவுண்டனில் 19 வயது நிரம்பிய மிதாலி எடுத்த 214 ரன்கள், மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபருக்கான அதிகபட்சமான ரன்களாக உலக சாதனை படைக்கப்பட்டது. “லேடி சச்சின்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட மிதாலி சில சமயங்களில் பேட்டிங்கின் மொத்த பொறுப்பும் சுமக்கவேண்டியிருந்தது. ஆனால், தற்போது நிறைய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்கிறார்கள், சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்கள். ஃபீல்டிங்கிலும் நன்றாக முன்னேறியிருக்கிறார்கள். இதனால் தற்போதைய அணி மிகவும் பலமாகவும் திறமையாகவும் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இருதரப்பு தொடர் வெற்றி ஆகும். தற்போது மூன்று தொடர்ச்சியான ட்வெண்டி-20 உலக கோப்பையை வென்றவர்கள் சதர்ன் ஸ்டார்ஸ் (ஆஸ்திரேலிய பெண்கள் அணி). சில ஆண்டுகளாகவே இவர்கள் சென்ட்ரல் கான்ட்ராக்டில் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் சென்ற ஆண்டுதான் சென்ட்ரல் காண்ட்ராக்ட் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓரளவிற்கு நிதியுதவி பெறுகிறார்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகின்ற காரணத்தால், இந்திய அணியின் ஃபீல்டர்ஸ் சர்வதேச தரத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள்.

இந்திய பெண்கள் அணியின் முதல் மேட்ச் 1976-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் மேட்ச் தொடராகும். தொடர்ந்து நம்பிக்கையுடன் பல வெற்றிகளை குவித்தது. நான்கு ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும் 2006 முதல் 2014 வரை இந்திய பெண்கள் அணி எந்த ஒரு மேட்சிலும் பங்குபெறவில்லை. ஆனால் அவர்கள் விளையாடிய ஒரு சில மேட்சிலும் சிறப்பாக விளையாடினர். 2014-ல் இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்சிலும், அதன்பின் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மேட்சிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தி விமன்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (WCAI), மாண்புமிகு பொதுச்செயலாளர் நூதன் கவாஸ்கர் (முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சகோதரி) பிசிசியை மீது, மகளிர் அணி வீரர்களை மாற்றான்தாய் போல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். ஐபிஎல்-லீக் போல மகளிர் அணிக்கும் நடத்தப்பட்டால் மகளிர் அணி பிரபலமாகும் என்று ஆலோசனை கூறினார். மேலும் கிராமப்புறங்களிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் அணியில் சேர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும் என்றார். பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவித்தொகையும் வேலைவாய்ப்பும் அமைத்துத்தர கோரிக்கை விடுத்தார். இந்திய பெண்கள் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களும் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவேண்டும்.

ஆக்கம் : ஷரிகா நாயர் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


விளையாட்டுத் துறையில் பெண்களின் வெற்றி கட்டுரைகள்:

திண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி!

திறமை மிகு 'யுவா' பெண்களுக்கு களச் சிந்தனைகளைத் தாருங்கள்!