நாசா மூலம் விண்ணில் செலுத்தப்படும் உலகின் எடைக்குறைவான ‘கலாம் சேட்’ செயற்கைக்கோளை உருவாக்கிய தமிழக மாணவர்!

0

ஜூன் மாதம் 21-ம் தேதி உலகின் சிறிய செயற்கைக்கோள் ஆன ‘கலாம் சேட்’ லான்ச் செய்யப்பட்டு வரலாற்றில் சாதனை படைக்கப்பட உள்ளது. இது குறிப்பாக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது ரிஃபாத் ஷரூக் என்ற இளைஞரின் மூளையில் உருவான சேட்டிலைட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மாணவரான ரிஃபாத்தின் சோதனையை முதன்முறையாக நாசா செயல்படுத்த உள்ளது கூடுதல் மகிழ்ச்சி. 

பள்ளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ரிஃபாத், ‘கலாம் சேட்’ மூலம் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) இவர் உருவாக்கியுள்ள 64 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை செலுத்தவுள்ளனர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியும் ஆன ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக இந்த செயற்கோளுக்கு ‘கலாம் சேட்’ என பெயரிட்டுள்ளார் ரிஃபாத். வாலப்ஸ் தீவில் உள்ள நாசா மையத்தில் இருந்து இது விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

ரிஃபாத் ஷரூக் இந்த ப்ராஜக்ட்டை ஒரு போட்டிக்காக தயார் செய்தார். நாசா மற்றும் ‘I Doodle Learning’ நடத்திய ‘Cubes in Space’ என்ற போட்டிக்காக அவர் 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் விண்வெளியில் செயல்பாடுகள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள முதல் ப்ராஜக்ட் ஆகும். இந்த மிஷனின் காலம் 240 நிமிடங்களுக்கு இருக்கும். கலாம் சேட் 12 நிமிடங்களுக்கு நுண்-புவியீர்ப்பு சூழலில் சப்-ஆர்பிடல் விமானத்தில் அனுபப்படும். இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் விளக்கிய ஷரூக்,

“இந்த செயற்கைக்கோளின் முக்கிய நோக்கமே, 3டி ப்ரிண்டிங்கிலான கார்பன் ஃபைபரின் செயல்பாடுகளை விளக்குவதாகும். இதை தொடக்கத்தில் இருந்து வடிவமைத்தோம். இதில் உள்ள புதுவகை ஆன்-போர்ட் கணினி மூலம் எட்டு உள்ளடக்கப்பட்ட சென்சர்கள், பூமியின் வேகவளர்ச்சி, சுழற்சி மற்றும் மேக்னெடோஸ்பியரை அளவிட உதவும். இதில் பெரிய சவாலே, நான்கு மீட்டர் கொண்ட கன சதுர வடிவிற்குள் பொருந்தும் 64 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் பறக்கும் வகையில் உருவாக்குவதே ஆகும்,” என்றார்.  

ஷரூக்கின் ப்ராஜக்ட், சென்னையில் உள்ள ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ ஸ்பான்சர் மூலம் தயாரிக்கப்பட்டது. அவர் நாசா’வின் கிட்ஸ் கிளபிலும் உறுப்பினராக உள்ளார். இத்திட்டம் பற்றி கூறுகையில்,

உலகெங்கிலும் உள்ள க்யூப் வடிவிலான செயற்கைக்கோள் பற்றி  பல ஆராய்ச்சிகளை செய்தோம். அதில் எங்களுடைய தயாரிப்பே எடை குறைவானது என்று கண்டுபிடித்தோம். செயற்கோளுக்கு தேவையான சில பாகங்களை வெளிநாட்டில் இருந்து பெற்றோம். சிலவற்றை உள்ளூரில் வாங்கினோம். இந்த செயற்கோள் கார்பன் ஃபைபர் பாலிமர் என்ற மூலப்பொருளை முக்கியமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மறைந்த விஞ்ஞானி மற்றும் சிறந்த மனிதரான அப்துல் கலாமின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அவர் கூறிச்சென்ற பொன்மொழியான ‘கனவு காணுங்கள்’ என்பதை மெய்பித்ததாகவே பலரால் பார்க்கப்படுகிறது. 

கட்டுரை: Think Change India