பெண் தொழில்முனைவோரைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கைத் துணை இருக்க முடியுமா?

2

தொழில் செய்யும் பெண், குடும்பத்தின் மீது ஈடுபாட்டுடன் இருக்க மாட்டாள். அவளை பொருத்தமட்டில் தொழிலுக்கு அடுத்த நிலையில்தான் குடும்பம் என பல்வேறு தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. 

ஒரு பெண் தொழில்முனைபவரான நான், எனது ‘சூப்பர்வுமன்’ புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேள்விப்பட்ட பல விஷயங்களில் பெண் தொழில்முனைவோரின் காதல் வாழ்க்கையைப் பற்றிய பல தவறான மற்றும் பழங்கருத்துக்களையும் காண நேர்ந்தது. எழுத்தாளர், பயணி மற்றும் தொழில் முனைபவரான ப்ராச்சி கர்க், பெண் தொழில்முனைவரின் காதல் பக்கத்தைப் பற்றிய கட்டுக்கதைகளை சிதறடிக்கும் முயற்சியில் இந்த கட்டுரையின் மூலமாக களமிறங்கியிருக்கின்றார்.

தொழிலில் ஆதிக்கம் செலுத்துபவராக நாங்கள் தென்பட்டாலும், உண்மையில் எங்களுக்கு பிடித்த ஆணை நொடியில் கவனிக்க செய்துவிடுவோம் எனக் கூறும் ப்ராச்சி பெண் தொழில்முனைபவரை காதலிப்பதால் உண்டாகும் சிறப்புக்களை பட்டியலிட்டுள்ளார்.

1. சுதந்திரம் - பொதுவாக பெண் தொழில்முனைவோர் தமது எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்வதிலும், வாங்கிய கடனை அடைப்பதிலும் மற்றும் குடும்பத்தில் நிகழும் சிறு சிறு விஷயங்களையும் சுதந்திரமாக கையாள்வர். அவர்களுக்குத் தேவையான துணை ஏற்றத்திலும், இறக்கத்திலும், உணர்ச்சிகரமான சூழலிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர். நேர்மறை எண்ணங்களுடன் உலவும் அவர்கள் வியாபாரத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல், தாமே சரிசெய்வர். இப்படி ஒரு துணையை நீங்கள் விரும்பமாட்டீர்களா?

2. நினைத்ததை அடைபவர்கள் - தமது கனவுகளை நனவாக்கி அதையே வாழ்பவர்கள். தமது வெற்றிக்குத் தேவையான உழைப்பைப் போட்டு வெல்பவர்கள். தீர்மானமாக தான் நினைத்தை சாதிக்கும் பெண்ணை விட சிறப்பான பெண்ணை எந்த ஆணாலும் அடையாளம் காண இயலாது.

3. ஆழமானவர்கள் - மிகுந்த காதலுடன் தொழிலை நடத்துபவர்கள். மோசமான வியாபார நாட்களிலும் சின்ன புன்னகையுடனேயே வீட்டுக்கு திரும்புவர். தமது இயல்பிலேயே மகிழ்ச்சியான மற்றும் ஆழமானவர்களாக இருப்பர். ஆய்வு ஒன்றின் முடிவுப்படி சிறப்பான உடல்நலமுள்ள, மகிழ்ச்சியானவர்கள் சிறப்பான துணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

4. பிரச்சனைகளைத் தீர்ப்பவர்கள் - சோதனைகளையும், சவால்களையும் நாள்தோறும் சந்திப்பதையும் அவற்றை சரி செய்வதையும் தொழிலாகக் கொண்டவர்கள். ஆதலால், இவர்கள் பிரச்சனைக்கான தீர்வைத் தேடுவார்களே ஒழிய அவற்றில் சிக்கிக்கொண்டுத் தவிக்க மாட்டார்கள். ஆகவே, காதல் உறவில் ஏற்படும் சிறு சிறு சங்கடங்களைப் பெரிதுபடுத்த விரும்பாதவர்களாக இருப்பர். உங்களுடைய பணியிலோ, குடும்பத்திலோ நிலவும் மோசமான சூழலையும் மாற்ற கைக்கொடுத்து உதவுவர்.

5. கதைசொல்லிகள் - அவர்களது ஒவ்வொரு நாளும் பல்வேறு உரையாடல்களை அடக்கியதாகவும், ஆய்வு செய்து பல தகவல்களை தமது தொழில் முன்னேற்றத்துக்காக அறிந்துகொள்வதாலும், புத்திசாலித்தனமாக இருப்பர். தமது துணையுடன் பகிர்ந்துகொள்ளும் அந்த நாளின் அனுபவத்துக்குள் பல்வேறு பாடங்கள் அடங்கியதாக இருக்கும். இவை உங்களது உறவை மேம்படுத்திக்கொள்ளவும் பயன்படும்.

6. உத்வேகமானவர்கள் - தம்மைச் சுற்றியுள்ள அனைவரும் வியந்து கவனிக்கும்படியான உத்வேகமானவர்களாக விளங்குவர். குடும்பத்தினரும், உறவுகளும் அவரின் செயல்களால் பெருமிதம் கொள்வர். கார்ப்பரேட்டில் பணியாற்றும் துணையையும் வியபாரம் செய்யத் தூண்டுவதாய் அவர்களது வெற்றி வாழ்க்கை அமையும்.

7. எளிதில் எந்த சூழலையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமானவர்கள்- ஒவ்வொரு நாளும் வித்தியாசமான குறிக்கோள்கள் கொண்ட புதிய மனிதர்களை சந்திப்பதால் திறந்த மனதுடன் எவ்வித சூழலையும் ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கையின் சாவல்களை சிறப்பான முறையில் கையாள இந்த அனுபவங்கள் சிறப்பான பாடமாக இருக்கும்.

8. திறம்பட ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படுத்துபவர்கள் - இ-மெயில், தொலைபேசி அல்லது நேரில் என தகவல்களை தெரிவித்து பழகிய இவர்கள் நேரடியாக அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்பவர்கள். ஆகவே, நேரடியாக தமது மன ஓட்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் இவர்களைப் பற்றி தவறான புரிதல் இருக்க வாய்ப்பே இல்லை.

9. நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் வல்லுனர்கள் - பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் தேர்ச்சிபெற்றவர்கள். ஆகவே, தொழிலில் உழன்று போய்விடாமல், சமூக வாழ்விலும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆகவே, தமது துணைக்காக நேரம் ஒதுக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. துணையின் தொழில் மற்றும் வாழ்க்கையிலும் தக்க ஆதரவு அளிப்பவர்கள் - தாமும் வெற்றிகரமாக இருக்கும் தொழில் முனைவோர், துணைவரின் பணியிலும் சிறந்து விளங்க உதவுவர். தொழில்ரீதியான ஆலோசனையோ அல்லது கவனமாக அவர்களது துன்பத்தைப் பற்றிக் கேட்டறிவதிலும் அவர்களை மிஞ்சுவதற்கு ஆளில்லை எனலாம்.

மொத்தத்தில் பெண் தொழில்முனைவோர் தமது தொழிலில் பெருமிதம் காண்பவர்கள் - ஒரு சிறப்பான தொழில்முனைவோராகவும், அதிசிறந்த துணையாகவும் அவர்கள் விளங்குவர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.

ஆக்கம்: ப்ராச்சி கர்க்| தமிழில்: மூகாம்பிகை தேவி

(இக்கட்டுரையை எழுதிய ப்ராச்சி கர்க "சூப்பர் வுமன்" என்ற தொகுப்பின் எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவர்) 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!

பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!