ஜி.எஸ்.டி வழிகாட்டுதல் உதவி மையம்- உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம் நிறுவியது! 

0

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம் நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஜி.எஸ்.டி உதவி மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் ஜி.எஸ்.டி குறித்த வழிகாட்டுதலை வழங்கும். இந்த மையத்தை 1800111175 என்ற கட்டணமில்லா எண் அல்லது #AskonGSTFPI மூலம் தொடர்புக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://www.mofpi.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

ஜி.எஸ்.டி – யின் அமலாக்கம் மற்றும் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி உதவி மையத்தை அமைச்சகம் அமைத்துள்ளது. மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகத்தை சார்ந்த முக்கிய தொழிற்சாலைகளில் ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு இந்த மையம் உதவும். இந்த அமைச்சகம் சார்ந்த அனைத்துத் துறைகளும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஜி.எஸ்.டி. மையம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். ஜி.எஸ்.டி. சட்டம், விதிகள், விலைப் பட்டியல் ஆகியவை குறித்த அனைத்து தகவல்களும் இங்கு கிடைக்கும்.

பொருளாதார ஆலோசகரான திரு. விஜயகுமார் பெஹரா தலைமையில் அமைந்துள்ள உதவி மையத்தில், மூத்த விற்பனை அலுவலர் ஜி. சீனிவாசன், உதவி இயக்குநர் எஸ்.என் அகமது, உதவி இயக்குநர் விக்ரம்நாத் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. புதிய வரி திட்டம் குறித்த தகவல்களைப் பரப்ப கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகைத் தகவல் அலுவலகம், புதிய வரிவிதிப்புச் சட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்க http://pib.nic.in/gst என்ற சிறப்பு இணையப் பக்கத்தை உருவாக்கி உள்ளது. இதில், இன்றுவரை சரக்கு மற்றும் சேவைவரி குறித்து வெளியிடப்பட்ட அனைத்து பத்திரிகை செய்திகளையும் ஆங்கிலத்தில் காணலாம். இந்த இணைய பக்கத்தில் ஜி.எஸ்.டி. குறித்த பல்வேறு விளக்க காட்சிகள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளன.