வெள்ள சேதம் தந்த மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?

0

உயிர் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பிரபல உளவியலாளர் Dr. மினி ராவ் தரும் குறிப்புகள் ...

சென்னையையே புரட்டி போட்டிருக்கும் இந்த மழை வெள்ளம் பொருட் சேதம் மட்டுமின்றி தங்களது சொந்தங்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீங்கா வடுவாக பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சேதங்கள் தந்த அதிர்ச்சியால், கெட்ட கனவுகளும் நினைவுகளும் மீண்டும் மீண்டும் பலரது மனதில் வந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதை மனநலத்துறையில் "மனஉளைச்சல் சீர்கேடு பதிவு" என்கிறார்கள். இத்தகைய சூழலை முறையாக அணுகுவது அவசியமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வகை மன உளைச்சலிலிருந்து மீள்வது எப்படி என்று தமிழ் யுவர்ஸ்டோரி பிரபல மன உளவியலாளர் Dr. மினி ராவ் அவர்களிடம் உரையாடியது. அவர் தரும் குறிப்புகள் இதோ உங்களுக்காக..

"கோபம், வருத்தம், ஏமாற்றம் என பல்வகை நிலையில் ஒருவர் உள்ள பொழுது, மறுத்துரைக்கும் இயல்பே இவர்களுக்கு இருக்கும். இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே ஒரு உளவியலாளராக நாங்கள் இவர்களை எதிர்கொள்வோம், இதுவே நன்மை பயக்கும்" என்கிறார் மினி.

மன உளைச்சலுக்கு தள்ளப்படுபவர்கள் சமூகத்திலிருந்து தங்களை தனிமை படுத்தியோ, திடீரென்று பீதி அடைபவர்களாகவோ அல்லது ஒரு வித கலக்கத்துடன் காணப்படுவார்கள். இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு தெம்பூட்டும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட நாம் பின்பற்றக்கூடிய சில வழி முறைகள் :

1. நடந்ததையே நினைக்காமல் வெளி உலகிற்கு வாருங்கள்

வீட்டிலியே முடங்கிக் கிடக்காமல் வெளியே சில நேரம் நேரத்தை செலவிடுவது மிக அவசியம். நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது. உடற் பயிற்சியின் பொழுது என்டோர்பின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதற்கு ஹாப்பி ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. உடற்பயிற்சி, நேர்மறை சிந்தனைகளை தரக் கூடியது. ஆகவே மனதில் கவனம் செலுத்தாமல் உடலில் கவனம் செலுத்துதல் மாற்றத்தை தரும்.

2. பிறரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்

சக மனிதர்களை சந்திப்பதன் மூலம் பரஸ்பரம் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும். இது மனதை லேசாக ஆக்க உதவும். முடிந்த வரை பிறரிடம் உரையாடும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்

பிறருக்கு உதவுவதால் நாம் பெறும் சந்தோஷம் ஈடு இணையற்றது. இந்தச் செயல் நம் மனதில் உள்ள இன்னல்களை களைய உதவும். ஆகவே உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் ஈடுபட விரும்பும் செயல்களை செயல்முறைப்படுத்தும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் சில மணி நேரங்கள் இணைந்து செயல் படுவதன் மூலம் மனப் பாரங்கள் குறையும்.

4. விருப்பமான செயலை பேரார்வத்துடன் மேற்கொள்ளுங்கள்

நீங்கள் செய்ய நினைத்த அல்லது கற்றுக் கொள்ள நினைத்த உங்களுக்கு பிடித்த செயல்களை மேற்கொள்ள இப்பொழுது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது உங்களின் மனதை திசை திருப்ப உதவும்.

5. உடல் நலம் பேணுவது அவசியம்

மன நலம் போன்றே உடல் நலனும் மிக முக்கியம். குறித்த வேளைக்கு உணவு உட்கொள்ளுதல், தேவையான அளவு தூக்கம் இவை நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

இத்தகைய சூழல் மது அல்லது போதைக்கு அடிமையாகும் சந்தர்பத்தையும் உண்டு பண்ணும் என்று எச்சரிக்கும் Dr . மினி இதிலிருந்து தங்களை திசை திருப்பி கொள்ளுதல் மிக அவசியம் என்று வலியுறுத்துகிறார். இவற்றையெல்லாம் மீறியும் மன அழுத்தமோ, பதட்டமோ தென்பட்டால் தேர்ந்த மன உளவியலாளரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் போன்றே சிறு குழந்தைகளும் இந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியக் கூட சந்தர்பம் இல்லாமல் வீட்டை விட்டு தண்ணிரில் மிதந்தோ அல்லது மீட்கப்பட்டோ உள்ள நிலையில், குழந்தைகளும் சொல்ல இயலாத நிலையில் இருப்பர்.

"பெற்றோர்கள் அவர்களிடம் நடந்த விபரீதத்தை பற்றியும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல் அவசியம்" என்கிறார் மினி ராவ்.

1. வெளியே செல்ல அனுமதியுங்கள்

குழந்தைகள் வெளியில் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வலியுறுத்த வேண்டும். இது அவர்களின் எண்ணங்களை திசை திருப்பவும் சீராக்கவும் உதவும்.

2. பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

ஓவியம் வரைதல் போன்ற கலை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.

3. தனிமையில் இருக்க விடாதீர்கள்

குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவழிப்பதுடன் அவர்கள் தனியாக இல்லாமல் இருப்பதையும் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

"குழந்தைகளின் நினைவுகள் சீக்கிரம் மாறக்கூடியவை, ஆகவே அவர்களது சகஜ நிலைக்கு சீக்கிரமே திரும்பி விடுவர்" என்கிறார் மினி.

இந்த குறிப்புகளை கடை பிடிப்பது கடினமான செயல் தான் என்று கூறும் Dr . மினி ராவ் ஒவ்வொருவர் தன்மையை பொருத்து இதிலிருந்த மீள மாதங்கள் வேறுபடும் ஆனால் இவற்றை பின்பற்றினால் மீள்வது நிச்சயம் என்கிறார்.