உங்களது அதிகாரத்தை வலுவற்றதாக்கும் ஊழியர்களை புத்திசாலித்தனமாக கையாள்வது எப்படி?

1

ஒரு செயல்முறையை விவரிக்க சம்பவங்கள்தான் சிறந்த வழி. கடினமான ஊழியர்களைக் கையாள்வது குறித்த என்னுடைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன். 2012-ம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போதுதான் நான் பொறியியல் படிப்பை முடித்திருந்தேன். சென்னையில் ஒரு சிறிய வெப் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் விற்பனைப்பிரிவில் என்னுடைய முதல் பணியில் சேர்ந்திருந்தேன். பெரும்பாலான மேலாளர்களைப் போலவே என்னுடைய முதல் மேலாளரும் நல்ல உயரதிகாரி அல்ல. என்னுடைய சகோதரருக்கு நிச்சயதார்த்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயம் அது. அப்போதுதான் சாத்தான் மனித உருவில் வரும் என்பதை உணர்ந்தேன்.

நிச்சயதார்த்த நிகழ்விற்கு ஒரு நாள் முன்பு எனக்கு அழைப்பு வந்தது. மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அவகாசம் ஒரே நாளானது. இங்கும் அங்கும் ஓடவேண்டியிருந்தது. எவ்வளவோ புரியவைக்க முயற்சித்தும் என்னுடைய விதி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. நான் அலுவலகத்தை விட்டு அவசரமாக வெளியே வந்தேன். என்னுடைய முதிர்ச்சியற்ற நடத்தைக்கு இதுவே ஒரு சான்று. நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில் ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய நடவடிக்கை நிறுவனத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரு மாதம் கழித்து சிஇஓ என்னை தொடர்பு கொண்டு மன்னிப்பு கடிதம் கோரினார். நான் அவ்வாறு வேண்டுமென்றே கீழ்படியாமல் நடந்துகொள்ளவில்லை. என்னுடைய உரிமையை கட்டுப்படுத்தியதற்காக என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த செயல்தான் அது. ஆனால் மேலாளரின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தேன். அதற்காக என்னை நிறுவனத்தை விட்டே வெளியே அனுப்பியிருக்கலாம்.

தகுந்த காரண காரியமின்றி உங்களது அதிகாரத்தை வலுவற்றதாக்கும் ஊழியர்களுடன் பணிபுரியவேண்டிய ஒரு மேலாளராகவோ அல்லது சிஇஓவாகவோ நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவரது பதவியும் பொறுப்பும் மதிக்கப்படாமல் போனால் அது அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கும். ஆகவே இதை கவனிக்காமல் விட்டு விடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் இதைத் தீர்த்துவைக்க முடியாமல் போய்விடும்.

உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள சில குறிப்புகள்:

கடினமாக இருங்கள் ஆனால் நியாயமாக இருங்கள்

நீங்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் விளையாட்டை விரும்புபவராக இருந்தால் அதில் ராஜா, ராணி, லார்ட்ஸ் அனைவரும் எதிர்க்க முற்படும்போது தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். 

“நான் ராகுல். இங்குள்ள ஊழியர்களின் சிஇஓ. இதற்கு முந்தைய நிறுவனத்தில் VP-யாக இருந்தேன். என்னுடைய முந்தைய ஸ்டார்ட் அப்பை 80,000 டாலர்களுக்கு விற்பனை செய்தேன். என்னுடைய வீட்டில் ஒரு ஆடி ஏ6 கார் வைத்துள்ளேன்,” என்று கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்கும். மாறாக உங்களது விண்ணப்பத்தையோ அல்லது ஆணையையோ நீங்கள் வெளிப்படுத்தும் தொனியே அவர்கள் வேலையை திறம்பட செய்யவைக்க போதுமானதாகும். உங்களது அதிகாரத்தை வலுவற்றதாக்க முயல்பவர்களிடம் ”இந்த வேலையை இப்போதே எனக்கு முடித்துக்காட்டவேண்டும்,” என்று சொன்னால்தான் வேலை நடக்கும். ஆனால் உங்களது ஆணைகளை ஏற்று அதற்கேற்றவாறு செயல்படும் ஒருவரிடம் இவ்வாறு பேசவேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் கடினமான வார்த்தைகளை நியாயமாக எடுத்துரைத்தாலே போதுமானது. ”இங்கு இவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது”, “தாமதிக்கக்கூடாது”, “இதை உடனடியாக செய்துமுடிக்கவேண்டும்” போன்ற வாக்கியங்களே உங்கள் பதவியையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

ஊழியர்களிடம் தோழமையுடன் இருக்கலாம் தோழனாக இருக்கக்கூடாது

நீங்கள் எதையாவது அடமானம் வைத்திருந்தால் அது சார்ந்த பிரச்சனை குறித்து உங்களது ஊழியர்களிடம் பகிர்ந்துகொள்வீர்களா? இல்லைதானே. நீங்கள் தோழமையுடன் பழகும் நல்ல உயரதிகாரி என்று அனைவரும் உங்களை பாராட்டலாம். தோழமையுடன் இருப்பது சிறந்ததுதான். ஆனால் தோழனாக மாறிவிடக்கூடாது. உங்கள் ஊழியர்கள் உங்களை நண்பனாக பார்க்கத் தொடங்கினால் அவர்களை பணிபுரிய வைப்பது கடினமாகிவிடும். தோழமையுடன் பழகுவதற்கும் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டும் தோழனாக இருப்பதற்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டில் கவனமாக இருக்கவேண்டும்.

உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்

இதைச் சொல்வது எளிது ஆனால் செயல்படுத்துவது கடினம். அவர்கள் கீழ்படியாமல் இருப்பது குறித்து பேசாமல் அவர்கள் உங்களுடன் எளிதாக இணைந்துகொள்ள பாதை வகுத்துக்கொடுங்கள். தங்களது கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவும். உங்களது செயல்பாடுகளைத் தாண்டி இருக்கும் விஷயங்களில் அவர்களை உதவிக்கு அழைக்கலாம். சிறப்பாக செய்யும் பணிகளை மனதாரப் பாராட்டலாம். அவர்களை நீங்கள் மரியாதையுடன் நடத்துகிறீர்கள் என்பதை அறிந்தால் உங்களுக்கு எதிராக நடந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் எப்போதும் நல்ல நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருப்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களுடன் பேசுங்கள்.

பணியிலிருந்து நீக்கிவிடுங்கள்

கேட்பதற்கு கடுமையாக இருப்பது போல் இருக்கிறதல்லவா? சாமம் தானம் பேதம் தண்டம் குறித்து கேள்விப்பட்டீர்களா? இது சந்திரகுப்த மௌரியாவின் முதன்மை ஆலோசகரான சாணக்கியரின் நுட்பங்களாகும். இதை நாம் முதலாளி – ஊழியர் உறவில் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். பிரச்சனை ஏற்படும்போது இந்த வழிமுறையைப் பயன்படுத்தலாம். இதில் ’சாமம்’ என்பது முதலாளி பணியின் முக்கியத்துவத்தை விவரிக்கும் அம்சமாகும். அடுத்தது ’தாமம்’. இதில் பணியை செய்து முடிக்க வைப்பதற்காக பரிசுகளும் வெகுமதியும் வழங்கப்படும். ’பேதம்’ என்பது பணியை செய்து முடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி மிரட்டுதல். ’தண்டம்’ என்பது தண்டனை. அதாவது பணியிலிருந்து நீக்குதல். நிலைமையை சரிசெய்ய வேறு வழியில்லாதபோது சாணக்கியரின் நீதியைப் பின்பற்றலாம்.

உங்களுக்கு கீழே பணிபுரிபவர் ஏன் உங்களது ஆணைகளை கீழ்படிவதில்லை என்பதை ஆராயலாம். நீங்கள் முன்னமே நடந்துகொண்ட விதத்தினால் அவர் அப்படி நடந்து கொள்கிறாரா அல்லது அந்த நபரின் இயல்பே அதுதானா என்பதை ஆராயலாம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை காரணமாக பணியிடத்தில் விரக்தியுடன் காணப்படுகிறாரா? ஒரு கடுமையான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடம் உங்களது கேள்விகளுக்கான பதிலை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : மேத்யூ ஜெ மணியம்கோட்