விலங்குகளின் மொழி அறிந்த தோழி!

0

மிருகக் காட்சி சாலையொன்றின் கூண்டில் அடைபட்டிருக்கும் சிங்கத்தையோ, சிறுத்தையையோ பார்க்கும் போது உண்மையில் நமக்கு பயம் வருவதில்லை. பரிதாபம்தான் வரும். ஆனால் எந்த நிலையில் பார்த்தாலும் நமக்கு அச்சமூட்டக்கூடிய விலங்கென்றால் அது பாம்பு மட்டுமே. ஆனால் கார்கி விஜயராகவனுக்கோ பாம்புகள் விளையாட்டுத் தோழர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

“நான் பாம்புகளோடு பேசுவதுண்டு” என்று கார்கி சொல்வதைக் கேட்டு அவர் ஒரு மந்திரவாதி என்று முடிவு கட்டி விட வேண்டாம். கார்கி மனிதர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டுவிடும் பாம்புகளைக் காப்பாற்றி மீண்டும் இயற்கையான சூழலுக்கு திருப்பி அனுப்ப முயற்சிக்கும் ஒரு விலங்கு ஆர்வலர் மட்டுமே. “பல சந்தர்ப்பங்களில் நான் பாம்புடன் உரையாட முயற்சிப்பது உண்டு. அவைகளுக்கு நம் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை. நாம் பயத்துடனும், கோபத்துடனும் நடந்து கொள்ளும் போது அவையும் தற்காப்பு மனநிலைக்குப் போய் சீறத் தொடங்கிவிடுகின்றன” என்கிறார் இந்த வித்தியாசமான இளம்பெண்.

கார்கியின் தந்தை அடிப்படையில் ஒரு இன் ஜினீயர். சென்னையில் வங்கியொன்றில் வேலை பார்த்த சமயங்களில் தனது மதிய உணவுப் பொழுதை முதலைப் பண்ணையில் இருக்கும் பாம்புகளிடையேதான் செலவிடுவாராம். இப்படித் துவங்கிய அவரது பாம்புகளின் மீதான ஈடுபாடு மகளான கார்கியிடமும் தொடர்வது ஆச்சரியம்தான்.

மூன்று வயதுக் குழந்தையாக இருந்த கார்கியின் அறைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்ட ஒரு பாம்பை அவரது தந்தை பாதுகாப்பாக அகற்றிவிட்டு, அழுதுக்கொண்டிருந்த மகளை சமாதானம் செய்தார். அவர் நினைத்ததென்னவோ மகள் பாம்பைக் கண்டு பயந்துவிட்டார் என்றுதான். ஆனால் கார்கியோ அந்தப் பாம்புடன் நட்பு கொள்ளவும், அதை செல்லப் பிராணியாகவும் வளர்க்க நினைத்து, அதற்கு வாய்ப்பின்றி தந்தை அதை தூக்கிப் போய்விட்டாரே என்றுதான் அழுதிருக்கிறார்.

இப்படியாக சிறுவயதிலிருந்தே பாம்புகளின் மீதான நட்புணர்வோடே கார்கி வளர்ந்தார். கான்கிரீட் காடான மும்பை நகரிலிருந்து மாறுபட்ட புறநகர் பகுதியான பி.ஏ.ஆர்.சி காலனியில் வளர்ந்த கார்கிக்கு சுற்றுவட்டாரத்தில் பாம்பை பார்ப்பது சிரமமான காரியமும் இல்லை.

சிறுவயதில் தந்தையோடு தங்கள் பகுதியில் இருக்கும் மளிகைக் கடையொன்றுக்கு சென்ற கார்கி அங்கு மக்கள் கூட்டமாகக் கூடி நின்று பயத்தோடு பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். கடைக்குள் ஒரு பாம்பு புகுந்ததுதான் அந்த கூச்சல் குழப்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்ட தந்தையும் மகளும் மெல்ல எட்டிப் பார்க்க, அது ஒரு விஷமற்ற பாம்புதான் என்பது தெரிய வருகிறது.

மகளின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தந்தை கார்கியே அந்த பாம்பை எடுத்து ஆளரவமற்ற பகுதியில் விட ஒப்புக் கொண்டிருக்கிறார். அன்று முதல் சுற்றுவட்டாரத்தில் எங்கே பாம்பைக் கண்டாலும் கார்கியையோ அவரது தந்தையையோ உதவிக்கு அழைப்பது வழக்கமாகிப் போயிற்று. அக்கம்பக்கத்தவர் துவங்கி தீயணைப்புத் துறையினர் வரை பாம்பைக் கண்டால் தடியை எடுப்பதற்கு பதிலாக கார்கியை அழைக்கத் துவங்கியுள்ளனர்.

அந்த முதல் முயற்சியில் கார்கியை அனுமதித்த போதும் அனைத்துவகைப் பாம்புகளைப் பற்றியும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளும் முன்பு இது போன்ற சாகச செயல்களில் ஈடுபடக் கூடாது என்று மகளுக்கு கட்டுப்பாடு விதித்தார் அவரது தந்தை. தன் பதிமூன்றாவது வயதில் தந்தையின் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தொடர்ந்த கோடை விடுமுறையில் பாம்புகளைப் பற்றிய சகல விவரங்களையும் படித்தறியத் துவங்கினார் கார்கி.

பாம்புகளைப் பற்றிய எனது அறிவு முழுமையடைந்து விட்டது என்பதையும் என் ஆர்வத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்ட அப்பா முதலில் என்னை விஷமற்ற பாம்புகளை காப்பாற்றும் பணியில் உடனழைத்துச் செல்லத் துவங்கினார். மெல்ல மெல்ல விஷப்பாம்புகளையும் என்னால் கையாள முடியும் என்று நம்பி பொறுப்புகளை வழங்கத் துவங்கினார் என்று உற்சாகமாக விவரிக்கிறார் கார்கி.

பாம்புகள் மனித குலத்துக்கான ஆபத்து என்று உலகம் நினைத்திருக்க, கார்கியோ வேறுவிதமாக சிந்திக்கிறார். மனிதனின் அறியாமைதான் பாம்புகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நினைத்திருக்கிறார்.

“இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவையெல்லாம் எந்த ஆபத்தும் விளைவிக்காது. பாம்புகளைக் காப்பாற்ற போகுமிடங்களில் எல்லாம் நான் இது குறித்து மக்களிடம் விளக்க முயற்சிக்கிறேன். மேலும் வீட்டிற்கு வெளியே பாம்புகள் இருப்பதாக என்னை யாராவது அழைத்தால் நான் அப்பாம்புகளை அப்புறப்படுத்த செல்வதில்லை.

அது அப்பாம்புகளின் இயற்கையான இடம், அங்கிருந்து அவற்றை அகற்ற நமக்கென்ன உரிமை இருக்கிறது என்பதே என் கேள்வி. மக்களின் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துவிடும் சூழ்நிலையில் மட்டுமே நான் தலையிட்டு அவற்றை மீட்டு வெளியில் விடும் பணியைச் செய்கிறேன். ஒரு சம்பவத்தில் சுற்றியுள்ள மக்களை சமாதானம் செய்து அந்த பாம்பு அங்கேயே வாழ்வதை அவர்கள் ஒப்புக் கொள்ளும்படி செய்தேன்.” என்று மகிழ்வோடு பகிர்கிறார்.

கடந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 2000 பாம்புகள் வரை இவரால் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. ஆனால் அவரைச் சுற்றியிருக்கும் ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகம் ஒரு பெண் இது போன்ற ஒரு சாகசத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை என்ற குறையும் அவருக்கு இருக்கிறது.

“பள்ளிக் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் பலரும் என்னை கிண்டலடிப்பதும், பாம்பு போன்ற சீறல் ஒலியெழுப்பி என்னைக் கேலி செய்வதும் சகஜமானது. என் வருத்தங்களை என் தாயிடம் பகிர்ந்து கொண்டபோது இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயல்களான் நான் சோர்வடையக் கூடாது என்று எனக்கு சொல்லித்தந்தார்”

ஆனாலும் இந்த சிந்தனைப் போக்கு இன்னமும் தொடரவே செய்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறார். “ஒரு பெண்ணாகிய நான் கூட்டத்திலிருக்கும் ஆண்களும் பயப்படும் ஒரு வேலையை செய்வதை பெரும்பாலான ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தங்கள் ஈகோ பாதிக்கப்படுவதாக உணரும் அவர்கள் முன்யோசனையின்றி பாம்புகளைக் காப்பாற்றும் என் முயற்சியை குலைக்கும் செயல்களையும் சில சமயங்களில் செய்துவிடுகிறார்கள். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சி, அவற்றைக் காக்கும் பயிற்சி போன்றவற்றில் பல வருடங்களை செலவிட்டுள்ள எனக்கு சுற்றியிருக்கும் மனிதர்கள், பாம்புகள் என அனைவரையும் பாதுகாக்கும் திறன் உண்டு” என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் கார்கி.

பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வுக்காக பேசி வரும் கார்கி, 2010ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ந்தேதி மும்பை மேயர் சாரதா ஜாதவிடம் இருந்து விருது பெற்றிருக்கிறார். அவருக்கான உண்மையான பாராட்டு என்பது மக்கள் அனைவரும் எல்லா உயிரினங்களையும் நேசிப்பதே என்று நம்பும் கார்கி மும்பை பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறச் சூழலியல் துறையில் தன் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.

'மைவெட்ஸ்' (MyVets Charitable Foundation) எனும் வனவிலங்குகளை காப்பாற்றும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கார்கி இப்போதெல்லாம் மும்பையின் ராஜ்பவன் வளாகத்தில் அடிக்கடி வளைய வருகிறார். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மும்பை ராஜ்பவனில் வளைய வந்துகொண்டிருந்த மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டு கவலை கொண்ட அரசு, அவற்றை பராமரிக்கவும், வளர்க்கவும் கார்கி போன்ற ஆர்வலர்களை ஈடுபடுத்துவது பாராட்டுக்குரிய ஒன்று.

ஆங்கிலத்தில்: BINJAL SHAH | தமிழில்: எஸ். பாலகிருஷ்ணன்