சிறு நகரில் பிறந்த ஜோதி பன்சால்  பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கிய ஊக்கமிகு பயணம்!

0

ஆப்டைனமிக்ஸ் (AppDynamics) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஇஓ-வான ஜோதி, தற்போது பிக் லேப்ஸ் (BIG Labs) நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனராகவும் ஹார்னெஸ் (Harness) நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனராகவும் Unusual Ventures நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார்.

ஆரம்ப நாட்கள்

ஜோதி மஹாராஷ்டிராவில் ஒரு சிறிய நகரில் பிறந்து வளர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரை கணினிக்கு அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இவரது அப்பா நீர்பாசன இயந்திர வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.

 “அவரது வணிக அம்சங்களைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருந்தது. நான் எம்பிஏ படிக்கவில்லை. எனக்கு கிடைத்த ஒரே வணிகம் அனுபவம் இதுதான்,” என்றார்.

சுயகற்றலில் ஆர்வம் உள்ளவர்

இவர் ஐஐடி டெல்லியில் சேர்ந்தார்.

 ”இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விஷயத்தில் ஈடுபட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கின்றனர்,” என்று ஜோதி குறிப்பிட்டார்.

இவர் சுயமாக கற்பவர் என்பதால் பல வகுப்புகளை புறக்கணித்துள்ளார். அத்துடன் வேகமாக கற்பவர் என்பதால் இவரது மனநிலைக்கு ஸ்டார்ட் அப் பொருத்தமாக இருந்தது. ஐஐடியில் இருந்த சமயத்தில் ’சி’ மற்றும் ’ஜாவா ப்ரோக்ராமிங் லேங்வேஜ்’ பயின்றார். ஜாவா அவரை பெரிதும் ஈர்த்தது.

ஐஐடி டெல்லியின் வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வான Tryst விற்பனையை ஜோதி நிர்வகித்து ஸ்பான்சர்ஷிப்பில் 9 லட்ச ரூபாய் உயர்த்தினார். கல்லூரியில் படிக்கும்போதே கூடுதல் பணம் ஈட்ட FITJEE பயிற்சி மையத்தில் பணிபுரிந்தார்.

முதல் பணி

ஜோதி கேம்பஸில் தேர்வாகாத காரணத்தால் நேரடியாக பணி வாய்ப்பைத் தேடி Applion Networks என்கிற ஸ்டார்ட் அப்பில் சேர்ந்தார். இந்த நிறுவனம் டிவிக்கான செட்டாப் பாக்ஸ் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ப்ரோக்ராமிங் குறித்து நான்காண்டுகள் கல்லூரியில் கற்றதைக் காட்டிலும் ஆறு மாத பணி வாழ்க்கையில் அதிகம் கற்றுக்கொண்டதாக இவர் தெரிவிக்கிறார். நியூஜெர்சியில் இருந்த இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு மாற்றலானார். ஆனால் சிலிக்கான் வேலி செயல்படுகள் அவரை ஈர்த்ததால் அங்கு செல்ல விரும்பி பணிக்கு விண்ணப்பித்தார்.

சிலிக்கான் வேலி – முதல் சாப்டர்

ஜோதி முதலில் பணிபுரிந்தது ஒரு டிஸ்ட்ரிபியூடட் கம்ப்யூடிங் தளம். இங்கும் ஜாவா சார்ந்த பணி என்பதால் அதன் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது.

தொழில்நுட்பம் சரியாக இருந்தபோதும் இந்த ஸ்டார்ட் அப்பின் விற்பனை சிறப்பாக இல்லை. மக்கள் வாங்காத ஒரு ப்ராடக்டில் செயல்படவேண்டாம் என தீர்மானித்தார். மற்றொரு ஸ்டார்ட் அப் அதை வாங்கிக்கொண்ட பின்னர் இறுதியாக மைக்ரோசாஃப்டிடம் விற்பனை செய்யப்பட்டது என்றார்.

உற்பத்தி நிறுவனங்களுக்கான டேட்டா மைனிங் உருவாக்கிய மற்றொரு நிறுவனத்திற்கு மாறினார். இதன் ப்ராடக்ட் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப ஸ்டாக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதை ஜாவா சார்ந்த ஸ்டாக்காக மாற்றும் பணியில் ஜோதி நியமிக்கப்பட்டார். முதல் ப்ராடக்டின் வெற்றியைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வளர்ச்சியும் தடைபட்டது. இறுதியாக ராக்வெல் ஆட்டொமேஷன் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது.

மூன்றாவது முயற்சி பலனளித்தது – Wily Technology

ஜாவா கொண்டு செயல்திறன் கண்காணிப்பை உருவாக்கி வந்த Wily Technology நிறுவனத்திற்கு மாறினார். ஜாவா டிஸ்ட்ரிபியூடட் சிஸ்டத்தில் வளர்ச்சியடைவது தீர்வு காண வேண்டிய பிரச்சனை என்பதை அவரது முந்தையை பணி அனுபவம் உணர்த்தியது.

இரண்டாண்டுகளுப் பிறகு இந்நிறுவனத்தை CA Technologies வாங்கியது. டேட்டா க்வெரி லேங்வேஜ், டிஸ்ட்ரிப்யூடட் டேட்டாபேஸ்க்கு இணையான அதிகளவிலான தரவுகளை கையாண்டார். அவருக்கு சுமார் ஆறு மாத காலம் ப்ராடக்ட் மேலாண்மை பகுதியில் செயல்படும் வாய்ப்பு கிடைத்தது

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குதலும் எந்த ப்ராடக்ட் என கண்டறிதலுமே ஒரு சிறந்த ப்ராடக்டை உருவாக்குவதற்கான முக்கிய அம்சம் என்கிறார் ஜோதி.

”ஒரு ப்ராடக்டை உருவாக்குவதில் பயனர் அனுபவமே முக்கிய பகுதி என்பதை தெரிந்துகொண்டேன். பொறியியல் பின்னணி இருப்பதால் முதலில் ஒரு ப்ராடக்டின் பொறியியல் பகுதி குறித்தே முதலில் சிந்திப்போம். பயனருக்கு வழங்கப்படவேண்டிய அனுபவத்தில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்பதை உணர்ந்தேன்,” என்றார் ஜோதி.

ஆப்டைனமிக்ஸ் உருவாக்கம்

மென்பொருள் அதிகளவில் உருவாக்கப்படுகையில் அதன் பயன்பாடுகள் சிக்கல் நிறைந்ததாக இருந்ததை அவர் புரிந்துகொண்டார். இதனால் ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் அதைக் கண்டறிவதும் கடினமாக இருந்தது. இதற்கான தீர்வை உருவாக்க விரும்பினார்.

”பயனரின் தொடர்புகளை கண்காணிப்பதே நான் வழங்க விரும்பிய முக்கிய தீர்வாகும். பயனர் ஒருவர் ஒரு க்ளிக் செய்து அது 20 வெவ்வேறு சிஸ்டம்களுக்குச் சென்றால் அதிலிருந்து அந்த ஒரு க்ளிக்கைக் கண்டறியமுடியுமா? அந்த கான்செப்ட் பயன்பாட்டில் இல்லை. இதுவே ஆப்டைனமிக்ஸ் முயற்சியின் முக்கிய பகுதியாக மாறியது,” என்றார்.

தவறான அனுமானங்கள் மற்றும் சீரமைக்கும் நடவடிக்கைகள்

மக்கள் வேகமாக க்ளௌட் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறார்கள் என்கிற அனுமானம் இருந்தது. அடுத்ததாக மென்பொருளின் ஒட்டுமொத்த வாழ்க்கைசுழற்சியையும் கட்டுப்படுத்துவது பலனளிக்கும் என நினைத்தனர். இவ்விரு அனுமானங்களும் தவறானது. இந்த அனுமானங்களுடன் செயல்பட்ட பிற ஸ்டார்ட் அப்கள் காணாமல் போயின. ஆனால் ஆப்டைனமிக்ஸ் பயனர்களில் பப்ளிக் க்ளௌடை பயன்படுத்தாதவர்களுக்கும் ஏற்றவாறான ப்ராடக்டை வடிவமைத்தது.

மூன்றாவதாக ஒரு புதிய ப்ராடக்டில் பணிபுரியும்போது அது SaaS சார்ந்து மட்டுமே இருக்கவேண்டும் என நினைத்தனர். இதுவும் தவறான அனுமானமாகவே மாறியது. பல முன்னணி நிறுவனங்கள்கூட ஆப்டைனமிக்ஸ் SaaS சேவையை மறுத்தனர். மார்கெட்டிங் பயன்பாடுகளுக்கான வணிக மென்பொருளுக்கும் மென்பொருள் கட்டமைப்புகளுக்கான பயன்பாடுகளுக்கும் வேறுபாட்டினை பலர் அறிந்துகொள்ளவில்லை என்பதை ஜோதி உணர்ந்தார். அதன் பிறகு அதற்கேற்றவாறான ப்ராடக்டை உருவாக்கி வழங்கினார்.

நம்பகத்தன்மையை உருவாக்குதல்

மக்களிடையே தனது ப்ராடக்ட் மீது நம்பிக்கை உருவாக முதலில் ’ஆப்டைனமிக்ஸ் லைட்’ என்கிற இலவச வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். மக்கள் அதை எளிதாக ஜாவா அப்ளிகேஷனில் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதே இதன் நோக்கமாகும். இது சந்தையில் ப்ராடக்டை மக்கள் ஏற்றுக்கொள்ள உதவியது.

தயாரிப்பின் பரிணாமம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுதல்

மக்களுக்கு ஜாவா ப்ராடக்ட் பிடித்திருந்தாலும் டாட் நெட்டும் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. பல பெரிய நிறுவனங்கள் ஜாவா மற்றும் டாட் நெட் பயன்படுத்தியே அப்ளிகேஷனை உருவாக்கினார்கள். எனவே அதற்கேற்றவாறான ப்ராடக்டை உருவாக்கினர்.

ஆப்டைனமிஸ் முதல் வாடிக்கையாளர் வாய்ஸ் ரெகக்னிஷன் ஸ்டார்ட் அப்பான Yap. பின்னர் Netflix, Priceline, Electronic Arts ஆகிய நிறுவனங்கள் இணைந்தது. 

“சிக்கலான, முற்போக்கான செயலிகளை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இணைந்துகொள்வது எங்களது கற்றலையும் மேம்படுத்தும். அத்துடன் இவர்களுக்கு வழங்கும் ப்ராட்கட் மற்றவர்களும் இணைய வழிவகுக்கும்,” என்றார் ஜோதி.

ஆப்டைனமிஸ்ட் ப்ராடக்ட் அறிமுகமான பதினெட்டு மாதங்களில் 5-6 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. 2014-ம் ஆண்டு நிறுவனத்தின் ஏஆர்ஆர் 70-80 மில்லியன் டாலராக இருந்தது.

ஆரம்பத்தில் ஆப்டைனமிக்ஸ் வெப் செயலிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. மொபைல் செயலிகளுக்கான ப்ராடக்ட் இல்லை. பின்னர் மாறி வரும் தேவைகளுக்கேற்ப மொபைல் செயலிகளுக்காகவும் ப்ராடக்டுகளை உருவாகக்கத் துவங்கியது.

ஸ்டார்ட் அப்பிற்கும் ஒரு ஸ்டார்ட் அப்

ப்ராடக்டில் இருந்து ஒரு தளத்தை உருவாக்கும் வகையில் விரிவடைந்தால் வளர்ச்சி நிலையாக இருக்கும் என்பதை ஜோதி உணர்ந்தார். இன்று ஆப்டைனமிஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 400 மில்லியன் டாலராகும்.

“நாங்கள் உருவாக்க விரும்பிய ஒவ்வொரு புதிய ப்ராடக்டிற்கும் ஒரு புதிய ஸ்டார்ட் அப்பை உருவாக்கினோம். அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய ஆப்டைனமிஸ் நிறுவனத்திற்குள் ஸ்டார்ட் அப்களை ஒழுங்குபடுத்தினோம்,” என்றார் ஜோதி.

400 மில்லியனர்களை உருவாக்கிய டீல்

ஆப்டைனமிக்ஸ் நிறுவனத்தை சிஸ்கோவிற்கு விற்பனை செய்வதாக எடுக்கப்பட்ட முடிவு கடினமாகவே இருந்தது. இது பங்குதாரர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

ஆப்டைனமிக்ஸை சிஸ்கோவிற்கு விற்பனை செய்ததன் மூலம் பங்குதாரர்களான அந்நிறுவன ஊழியர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு பலனடைந்தனர்.

ஆர்வம் நிறைந்தவர்களை பணியிலமர்த்துதல்

ஊழியர்களை பணியிலமர்த்தும் செயல்முறையில் கீழ்கண்டவற்றை கவனிக்கவேண்டும் என்று ஜோதி குறிப்பிடுகிறார்:

1. பணியில் இணையும் ஊழியர்கள் நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒன்றியிருக்கவேண்டும்.

2. அவர்கள் சிறப்பான குழுவுடன் இணைகிறார்கள் என்கிற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கவேண்டும்.

3. அவர்கள் நிறுவனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

4. சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் இருபவர்களாக இருக்கவேண்டும்.

பிக்லேப்ஸ் - பெரிய லட்சியங்கள்

ஆப்டினமிக்ஸ் சரியான குழுவுடன் செயல்பட்டு வந்ததால் சிஸ்கோ வாங்கிய பிறகு அதில் செயல்படவேண்டிய அவசியமில்லை என ஜோதி நினைத்தார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். சில நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பினாலும் முழுநேர முதலீட்டாளராக இருக்க அவர் விரும்பவில்லை. சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலும் அதற்கான ப்ராடக்டை உருவாக்கவும் விரும்பினார். எனவே பிக்லேப்ஸ் துவங்கினார்.

பிக்லேப்ஸில் ஜோதியும் அவரது குழுவினரும் அவர்கள் கண்டறிந்த பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களது ஆய்வு சரியாக இருப்பதை சோதனை செய்ய முன்வடிவத்தை உருவாக்க உள்ளனர். அதன்பிறகு ஒரு ஆரம்பகட்ட ப்ராடக்டை உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்தி சரிபார்க்க உள்ளனர்.

ஜோதியின் முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் மென்பொருள் கட்டமைப்பு பிரிவு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் பங்களிக்கிறார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் ஜோதி லைட்ஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் வென்சர் பார்ட்னரான ஜான் வ்ரியோனிஸ் உடன் இணைந்து 160 மில்லியன் சீட் நிதியுடன்கூடிய Unusual Ventures நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். வ்ரியோனிஸ் அன்றாட செயல்பாடுகளில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கையில் பன்சால் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்ட உள்ளார்.

நிறுவனங்கள் சிறந்த ப்ராடக்டுகளை உருவாக்க உதவுவதில் பெருமிதம் கொள்கிறார். இது அவருக்கு மனநிறைவை அளிக்கிறது. மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறார். ஒவ்வொருவருக்கும் தனித்திறன் உள்ளது என்றும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : அலோக் சோனி | தமிழில் :ஸ்ரீவித்யா