சோதனைகளை வென்று சாதனை படைத்த ஆத்ரேயி

0

பிரபல எழுத்தாளர் பாலோ கோஹெலோ, "நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில்தான் வாழ்க்கை நம் முன் மிகப்பெரிய சவாலை நிறுத்தி அதை நாம் ஏற்க தயாராக இருக்கிறோமா என்பதை சோதிக்கும். நம் முன் சவால் காத்திருக்கும் பொழுதில் எதுவுமே நடக்காதது போல் நாடகமாடுவதிலோ அல்லது நான் இச்சவாலுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றோ சொல்ல முடியாது. ஏனெனில் வாழ்க்கை பயணம் எப்போதும் பின்னோக்கிச் செல்வதில்லை" எனக் கூறுயிருக்கிறார்.

இந்தக் கூற்றில் உடன்படுகிறார் ஆத்ரேயி நிஹர்சந்திரா. ஆம் வாழ்க்கை அவருக்கு அத்தகைய மிகப்பெரிய எதிர்பாராத சவால்களை பரிசாக வழங்கியிருக்கிறது. ஆத்ரேயியைத் தவிர, மனதளவில் தைரியமற்ற வேறு எந்த ஒரு நபராக இருந்திருந்தாலும் சவால்களால் துவண்டு போயிருப்பர். ஆனால், சவால்களுடன் எதிர்நீச்சல் போடுவதே அவரை பலமான மனுஷியாக மாற்றியது. அவர் இன்று அடைந்துள்ள உயரிய நிலைக்குக் காரணம், அவர் சவால்களை தவிடுபொடி செய்ததே.

இன்று ஆத்ரேயி நிஹர்சந்திரா ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ரிவைஸ் டயட் (Revise Diet) என்ற அந்நிறுவனத்தில் எளிதாக எடை குறைக்கும் முறைகள் கற்பிக்கப்படுகின்றன. 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

அவரது வெற்றிக் கதையைப் பார்ப்போம்.

அப்போது ஆத்ரேயிக்கு வயது 17. அவர் தந்தை மேற்கொண்டிருந்த தொழிலில் உதவியாக இருக்கத் துவங்கியிருந்தார். கல்வியும், வேலையும் அவரை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருந்தன. எல்லாம் நலமாகவே இருக்க, அவருக்கு 23 வயதானபோது துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக அடுத்த ஓர் ஆண்டு படுக்கையில் கிடக்க நேர்ந்தது. அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூட அவருக்கு அடுத்தவர் துணை தேவைப்பட்டது. 14 மாதங்கள் கழித்து ஆத்ரேயி மெல்ல மெல்ல சுயமாக இயங்கத் தொடங்கினார். ஆனால், அந்த காலகட்டத்தை ஆத்ரேயி பயனுள்ளதாக ஆக்கி கொண்டார். எப்படி என்கிறீர்களா?

அவர் வீட்டருகே இருந்த ஒரு நேச்சுரோபதி மையத்தில் சேர்ந்தார். அங்கு அத்துறை அடிப்படை அறிவியலைப் பயின்றார். பின்நாளில் பூரண குணமடைந்த பிறகு பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் உள்ள என்.எஸ்.ஆர். எனப்படும் நேச்சுரோபதி படிப்பில் சேர்ந்தார். முறையாக படிப்பை முடித்தார். நோயில் இருந்து மீண்ட ஆத்ரேயி பல்வேறு இடங்களில் வேலை தேடினார். ஆனாலும், அவருக்கு ஐ.டி துறையில் வேலை கிடைக்கவில்லை. ஏன் அவரது தந்தையின் நெருங்கிய நண்பர்கள்கூட ஐ.டி. நிறுவனங்கள் நடத்திவந்தாலும், அவருக்கு வேலைதர முன்வரவில்லை.

இத்தகைய சம்பவங்களால் நொறுங்கிவிடவில்லை ஆத்ரேயி. மாறாக மீண்டும் பெங்களூருவில் உள்ள ஐ,ஐ.எம்-க்கே சென்றார். அங்கு பி.எச்.டி. ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையில் அவரது திருமணமும் நடந்தேறியது. பெங்களூருவில் தன் வீட்டை அமைத்தார். அதன் பிறகு உணவுவகைகள் குறித்த ஒரு பிளாக் (வலைப்பக்கத்தை) துவங்கினார். அதில் நல்ல காரசார இந்திய உணவு வகைகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்தார். இதுவே பின்நாளில் அவர் ரிவர்ஸ் டயட் நிறுவனத்தை உருவாக்க அடித்தளமாக ஆனது என்று கூறினால் அது மிகையாகாது. அதேவேளையில் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அவர் ஆற்றிவந்த பணியும் சிறப்பாக இருந்தது.

நடந்த விபத்தை மறக்கும் அளவிற்கு வாழ்க்கை சீராகவே சென்று கொண்டிருந்த நிலையில், எல்லா பிரச்சனைகளும் முடிந்தன என்பது தவறாகி இதுவே தொடக்கம் என ஆனது போல இரண்டாவது முறையாக ஒரு விபத்து ஏற்ப்படும் என்று ஆத்ரேயி அறிந்திருக்கவில்லை. மீண்டும் தனக்கு ஒரு துயரம் நேரப்போகிறது என்றும், பட்ட காலிலேயே படும் என்பது போல் மீண்டும் ஒரு விபத்து, அதே முழங்காலில் பயங்கர அடி. அந்த விபத்து நடந்த சில மாதங்களிலேயே ஆத்ரேயியின் காலில் உணர்ச்சிகளை இழந்தார்.

அச்சூழ்நிலையில், பெங்களூரு ஐ.ஐ.எம். பணியில் இருந்து சிறு விடுப்பு எடுத்துக் கொண்டு தனக்கு இதற்கு முன் சிகிச்சை அளித்த அதே மருத்துவர்களை அணுகினார். இம்முறை மருத்துவ செலவுகளை ஈடு செய்ய மிகவும் சிரமப்பட்டார். ஆனால் இத்தனை வேதனைக்கு இடையேயும் அவரது மனம் ஓய்வெடுக்க மறுத்து, பொழுதை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற திசையில் மட்டுமே பயணித்தது. கடந்த முறை விபத்து ஏற்பட்டபோது நேச்சுரோபதி கற்றுக் கொண்டதைப் போல் இம்முறையும் பயனுள்ளதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என அவரது மனம் துடிதுடித்தது. 

எல்லா தீமையிலும் ஒரு நன்மையிருக்கிறது என்பது போல்!இந்தமுறை குஜராத் நேச்சுரோபதி மையத்தில் இருந்து அவருக்கு நல்ல தகவல்கள் வந்தன. இதற்கிடையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்டுகொள்வதைவிட உடல் பருமனைக் குறைத்து காலில் குறைவான பளு தாக்கம் ஏற்படும்படி உடல்வாகை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி யோகா, டயட் முறைகளை அவர் பின்பாற்றினார். இதன்மூலம் அவருக்கு உடல்நலம் விரைவாக தேறி வந்தது. 

இந்நிலையில், மீண்டும் பெங்களூரு திரும்ப அவர் திட்டமிட்டார். குடும்ப உறுப்பினர்கள் உதவியும் குறையத் தொடங்கியது. வெளியில் உள்ள ஃபிட்னஸ் மையங்களுக்குச் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான் அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு அந்த யோசனையை வழங்கினர். திட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் ஏன் அவரே ஒரு ஃபிட்னஸ் மையத்தை தொடங்கக்கூடாது என்று யோசனை தந்தனர். இப்படித்தான் ஆத்ரேயியின் ரிவைஸ் டயட் வடிவம் பெற்றது.

உடல் ஆரோக்கியத்தை பேணுவது குறித்து ஆத்ரேயி கூறும்போது, "உடல் எடையை இழக்க வேண்டும் என்ற இலக்கோடு பயிற்சிகளை மேற்கொள்ளாதீர்கள். இழப்பு என்பது எப்போதும் நல்ல ஆரோக்கிய எண்ண ஓட்டத்தைத் தருவது அல்ல. என்னிடம் வரும் எனது வாடிக்கையாளர்கள் தேக ஆரோக்கியம் குறித்து தெளிவான புரிதல் பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆரோக்கிய உடல் பேணுவது ஒன்றும் அவ்வளவு சிக்கலானது அல்ல. உணவு முறை பற்றிய சிறு புரிதல் இருந்தாலே போதுமானது. அதேபோல் வாழ்க்கையில் பொறுமை மிகவும் அவசியம். இது மனதை ஆரோக்கியமாக வைக்க உதவும்" என்றார்.

ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் ரிவைஸ் டயட் ஃபிடன்ஸ் மையத்தை துவக்கினார். அவர்கள் மையத்தில இணைந்த ஒரு வாடிக்கையாளர் இரண்டே மாதங்களில் 12 கிலோ எடை குறைத்தார். ஆனால், அதேவேளையில் அவர் தனக்கு பிரியமான சிக்கன் ஷவர்மா போன்ற உணவுகளை தியாகம் செய்யவில்லை. இச்செய்தி வேகமாக பரவியது. வாய்மொழி வார்த்தையாக ரிவைஸ் டயட் புகழ் பரவியது. ஓராண்டில் ஆத்ரேயியின் ரிவைஸ் டயட் ஃபிட்னஸ் மையத்துல் 100 வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் பெண்களே. இப்போது அவர் ஆண், பெண், குழந்தைகள் என பலருக்கும் தனது ஃபிடன்ஸ் மையத்தில் பயிற்சி வழங்குகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 பேர் எடை குறைப்பு செய்ய அவர் உதவியுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.1200.

ஒவ்வோர் ஆண்டும் 200 பேருக்காவது எடை குறைப்பு பயிற்சி அளிப்பதே அவரது இலக்கு. உடல் எடை குறைப்பு தவிர நாள்பட்ட வியாதிகளுக்கும் அவர் சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது உணவு மற்றும் ஆரோக்கியம் துறையில் எம்.எஸ்.சி படிப்புக்கு ஆத்ரேயி விண்ணபித்துள்ளார். குறைந்தபட்சம் 80,000 பேருக்காவது உடல் எடை குறைப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது அவரது வாழ்நாள் இலக்கு.

ஓர் இளம் பெண், அதுவும் இரண்டு முறை நடக்கும் திறனை முற்றிலுமாக இழந்த பெண் இவ்வளவு சாதனைகளை செய்துள்ளதற்கு நிச்சயம் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.