ரூ.1500 டெபாசிட் செய்தால் இலவச 4ஜி ஜியோ போன் - அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்! 

ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி 4G VoLTE அம்சம் கொண்ட  ஃபோனை 1,500 ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்தத் தொகை முழுவதுமாக திருப்பியளிக்கப்படும்.

0

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் 40 வது வருடாந்திரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோஃபோன் அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


4G VoLTE அம்சம் கொண்ட இந்தப் ஃபோன் செப்டம்பர் மாதம் முதல் ரூ.0 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகையாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் தொகையும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு திருப்பியளிக்கப்படும்.

இந்தியாவின் 50 கோடி ஃபோன் பயனாளிகளுக்கு 4G VoLTE தொழில்நுட்பம் கிடைக்கவேண்டும் என்பதே இந்தப் ஃபோனை அறிமுகப்படுத்துவதற்கான காரணம் என்று குறிப்பிட்டார் அம்பானி.

”இந்தியாவின் ஒவ்வொரு இளைஞருக்கும் தகவல்கள் விரல்நுனியில் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விருப்பத்தை ஜியோஃபோன் பூர்த்திசெய்யும். டிஜிட்டல் வாழ்க்கையை மேற்கொள்ள மலிவான விலையில் டேட்டா கிடைக்கவேண்டும். எனவே இந்த வருடம் முதல் அனைத்து ஃபோன் பயனர்களுக்கும் டிஜிட்டல் சுதந்திரத்தை அறிவிக்கிறேன். ஜியோ அவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கும்.” என்று கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார் அம்பானி.

ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ், குறுஞ்செய்தி (SMS) மற்றும் டேட்டா ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஒரு வாரத்திற்கும் 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் அதே பலன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் துவக்க நிலை ஸ்மார்ட்ஃபோன்கள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இது ஒரு இக்கட்டான பிரச்சனை என்கிறார் அம்பானி. இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் விதத்தில் ப்ரீ-லோடட் ஜியோ செயலி கொண்ட ஜியோஃபோன்கள் மற்றும் ஜியோடிவி செயலிக்கான ப்ராட்பேண்ட் ஆகியவை கிடைக்கிறது. பயனர்கள் மாதம் 309 ரூபாய் செலுத்தி கேபிள் டிவி நிகழ்ச்சிகளை தங்களது டிவியில் காணலாம். பழைய கேத்தோட் ரே டிவிகளுக்கும் இவை பொருந்தும்.

விற்பனை துவங்கிய பிறகு ஒவ்வொரு வாரமும் ஐந்து மில்லியன் ஜியோஃபோன்கள் கிடைக்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் இந்த ஃபோனிற்கான புக்கிங் துவங்குகிறது. இவை அனைத்தும் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : தருண் மிட்டல்